நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத் தருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கரவானை பதம் பணிவாம்.
பொருள் : கல்லாகிய நெஞ்சம், நெகிழ்ந்து உருகி , ஆறுமுக பெருமானின் அடி சேருவதற்காக, அழகிய பொருள் பொதிந்த சொற்கள் கொண்டு புனைந்த பாமாலை சிறக்க, ஐந்து கரங்கள் கொண்ட கடவுளின் பதம் பணிவோம்.
எந்த ஒரு படைப்பிற்கும் முதலாக விநாயக வழிபாடு செய்வதே மரபு, குறிப்பாக பக்தி இலக்கியங்களில் விநாயகரை முதலில் பாடி, அவர் காப்பை துணை கொண்டே மற்ற பாடல்கள் தொடரும், இந்த முறையானது பெரும்பான்மையான பக்தி இலக்கியங்களில் கடைபிடிக்க பட்டிருக்கிறது.
அருணகிரிநாதர் முதல் மற்றும் இரண்டாம் பாடல்கள் இரண்டிலுமே விநாயகரை பாடி அவர் அருள் வேண்டுகிறார். எனினும் இங்கு ஒரு மாறுதலான கண்ணோட்டம் மூலம் சில எழுதப்படாத விஷயங்களையும் பற்றி காண வேண்டும். இந்த கண்ணோட்டம் லலிதா சஹஸ்ர நாமத்திற்கும் கந்தர் அனுபூதிக்கும் உள்ள ஒற்றுமையை காண உதவும்.
அருணகிரிநாதரின் காப்பு பாடலிலும், அவர் கடவுளின் ஐந்து செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்றவற்றையே முதன்மை படுத்தி, அதையே ஐந்து கரங்களாக்கி, நேர்த்தியாக ஐந்து கரம் கொண்ட விநாயகரையும் மரபு வழி வாழ்த்தி, ஐந்தொழில் புரியும் பரப்ரஹ்மம் காப்பாக இருக்க கடவது என்று வாழ்த்தை அமைத்துள்ளார்.
லலிதா சஹஸ்ர நாமத்தில் விநாயகர் தோற்றம் , லலிதையின் தோற்றத்திற்கு பின்னேயே நடக்கும், அங்கு விநாயகரை காப்பாக அமைப்பது தர்க்கரீதியான ஏற்புடையதாகாது. லலிதையின் நாமங்களில் கீழ் வரும் நாமங்களில் பரப்பிரம்மத்தின் பஞ்ச தொழில்கள் குறிப்பிடப்படுகின்றன. சாக்தத்தில் சக்தியே பர பிரம்மம் என்ற தத்துவத்தில் இவ்வாறான நாமங்களில் பராசக்தியின் புகழ் பேச படுகிறது. இனி கந்தர் அனுபூதியின் காப்பு செய்யுளும், லலிதையின் நாமங்களுக்கும் உள்ள ஒற்றுமை காண்போம்.
“ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்ம ரூபா, கோப்த்ரீ கோவிந்த ரூபிணி ,ஸம்ஹாரிணி ருத்ர ரூபா, திரோதானகரீச்வரீ,ஸதாசிவா அனுக்ரஹதா, பஞ்சக்ருத்ய பராயணா”
பஞ்சக்கர வானை என்று காப்பு செய்யுளில் சொல்லும் ஒரு சொல்லுக்கு சஹஸ்ரநாமத்தில் ஐந்து பொருள்கள் பொதிந்துள்ளன. அவை:
படைத்தல் – பிரம்மாவாக இருந்து உலகத்தை படைத்தல், இதை ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்ம ரூபா என்ற நாமத்தில் அறியலாம்.
காத்தல் – விஷ்ணுவாக இருந்து உலகத்தை காத்தல், இந்த செயலின் பொருளாக கோப்த்ரீ கோவிந்த ரூபிணி என்ற நாமத்தில் பராசக்தியின் செயல் புரிகிறது.
அழித்தல் – பிரளய காலத்தில் ருத்திரனாக இருந்து உலகை தம்முள் வாங்கிக் கொள்ளுதல் அதன் பொருளாக உள்ள நாமம் “ஸம்ஹாரிணி ருத்ரரூபா”
மறைத்தல் – உலகை மாயை கொண்டு, உண்மை நிலையில் இருந்து ஜீவர்களை அவர் அவர் கர்ம வினைக்கேற்ப மறைத்தல், அதன் பொருளே “திரோதானகரீச்வரீ”
அருளல் – ஒவ்வொரு ஆன்மாவும் பக்குவ நிலை அவள் அருளாலே எய்த உடன், தாமே சத்திய நிலை உணர்த்தி அந்த ஆன்மாவை குருவாகி ஆட்கொண்டு தம்முள் சேர்த்து, சதாசிவனாக அமர்ந்து பிறவா பெருநிலை அளிப்பதே “ஸதாசிவா அனுக்ரஹதா”
இந்த ஐந்து தொழில்களும் பராசக்தி செய்வதால் அவள் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று போற்ற படுகிறாள். ஐந்து கரம் கொண்ட விநாயக பெருமானும் இவ்வைந்து தொழில்கள் புரிவதால் அவரும் பரப்ரஹ்ம ரூபமாகிறார்.
கந்தர் அனுபூதியின் பாட்டுடைத் தலைவனான முருக பெருமானும் இவ்வைந்து தொழில்களும் புரிந்த சான்றுகள் புராணங்களில் காணப் படுகின்றன, கம்பரைப் போல் தாம் பாடும் தலைவன் பர பிரம்மமே என்று சொல்லாமல் சொல்வதே காப்பு செய்யுள், காப்பு செய்யுள் விநாயகருக்காக மட்டும் தான் என்றால், அனுபூதியின் முதல் பாடலில் கணேசரை மறுபடியும் பாட அவசியம் இல்லாமல் போகிறது. காப்பு செய்யுளில் அருணகிரிநாதர் விநாயகரை, முருகனை மட்டும் பாடவில்லை, தாம் பாடும் பொருளே ப்ரஹ்மம், அந்த பிரம்மத்திற்கு இந்த ரூபங்கள் பல என்று சொல்லாமல் சொல்கிறார், இதற்கு சான்றாக லலிதையின் நாமங்கள் வாயிலாகவும் நாம் இதை மேலும் உணர முடிகின்றது.
இந்த ஐந்து தொழில் புரிவோரையும் பர ப்ரஹ்மமே இயக்குகிறது என்ற பொருளிலேயே “பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணீ” என்ற லலிதையின் நாமங்கள் விளக்குகிறது. பரப்ரஹ்மம் இல்லையேல் இந்த ஐந்தொழில் புரிவோரும் ஜீவனற்ற உடல் போன்றோர் தான் என்று தெளிவாக புரிகிறது. அவ்வாறே கந்தர் அனுபூதியின் தலைவனான முருகப்பெருமான் பிரம்மமாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறார் என்ற மிகவும் அர்த்தம் பொதிந்த சொல்லாக பஞ்சகரண் என்ற சொல்லில் காப்பு பாடலிலேயே அருணகிரிநாதர் உணர்த்துகிறார்.

