செய்யுள் 10 கார்மாமிசை காலன்

கார்மாமிசை காலன் வரில் கலபத்து
ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரிதலாரி எனும்
சூர்மாமடியத் தொடு வேலவனே.
பொருள்:
அழகிய மலர் மாலைகளை மார்பின்மீது அணிந்த வேலவா, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுக்கு பகைவனான சூரபத்மன் மாமரமாகி நின்ற போது, வேல்கொண்டு அவனை அழித்த வேலவா, கரிய எருமையின் மீது அமர்ந்து எம தர்மராஜன் என் உயிரைக் கொண்டு போக வரும் பொது அழகிய மயில் மீது அமர்ந்து வந்து நீ என்னை அழைத்து கொள்ள வேண்டும்.

கடவுளை அடைய தவம் இருப்பவர்கள், மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை, மாறாக ஒரு சாதகன் அஞ்சுவது கடவுளை அடையாமலே மரணித்தலுக்கு மட்டுமே, அதற்க்கு காரணம் ஒருவன் கடவுளை அறியாமல், தன்னை உணராமல் மரணித்தால், மீண்டும் இந்த பிறவிக் கடலில் விழுந்து எழ வேண்டும் என்ற ஒரே காரணம் தான், இங்கும் அவன் அஞ்சுவது மரணத்திற்கு அல்ல, பிறப்பதற்கு தான், மீண்டும் பிறந்தால் அவன் இதே பக்குவத்தை எப்போது பெறுவான் என்பதைப் பற்றி தான், குழந்தை பருவம் முதல் வாலிப பருவம் வரை பெரும்பாலான உயிர்களுக்கு பக்தியோ, இறையின் மீது உண்மை பற்றோ ஏற்படுவதில்லை, இதைக் கருத்தில் கொண்டே சாதகனின் நியாயமான பயத்தை அருணகிரிநாதர் இங்கே படம் பிடித்து காட்டுகிறார்.
வலன் என்ற அசுரன், சிவபெருமானை குறித்து தவம் செய்து தான் இறந்த பிறகு தன் உடல் நவ ரத்தினங்களாக மாற வேண்டும் என்ற வரம் வாங்கினான், அதன் பிறகு அவன் இந்திரனோடு போர் புரிந்து, இந்திரனை வென்றான், இந்திரன் போரில் தோற்றிருந்தும், வலனின் வீரத்தை மெச்சி ஒரு வரம் தருவதாக கூறினான், வலனோ தன்னிடம் தோற்ற இந்திரனிடம் வரம் வாங்க விருப்பம் இல்லாமல் இந்திரனுக்கு, தான் வரம் தருவதாக கூறினான், இந்திரனும் சமயத்தை பயன் படுத்தி, தாம் நடத்தும் யாகத்தில் வலன் தன்னை பலி கொடுக்கப்படும் பொருளாக வரம் தருமாறு கூறி, வலனை ஏமாற்றி கொன்றான், வலனுடைய உடலில் இருந்து ரத்தம் மாணிக்கமாகவும், பல் முத்தாகவும், தலைமுடி வைடூரியமாகவும், எலும்பு வைரமாகவும், பித்தம் மரகதம் ஆகவும், கொழுப்பு கோமேதகமாகவும், சதை பவளம் ஆகவும், கண் நீலக்கல் ஆகவும், கபம் புஷ்பராகமாகவும் மாறியது.
வலனை தவறாக சூழ்ச்சியால் கொன்றதாலும், மேலும் பல தவறான செயல்கள் புரிந்ததாலும், இன்னொரு சிவ பக்தனான சூரபத்மன் தோன்றி இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்தார்க்கும் இன்னல் கொடுக்கலானான், இது ஒரு தேவாசுர போர் மட்டும் அல்ல, இந்திரனுக்கும் அவன் தவறு செய்த போது துணை நின்றோர்க்கும் கிடைத்த தண்டனை.

கந்த பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த போர் மிக பயங்கரமானது, அது எவ்வளவு பயங்கரம் என்றால், அருணகிரிநாதர் தன் வேல் வகுப்பில் அதை இவ்வாறு கூறுகிறார்
திரைக்கடலை யுடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்
கடல் நீரை எல்லாம் குடித்து வற்ற செய்து , அந்த இடத்தில் அசுரர்களின் ரத்தத்தை நிறைத்து விளையாடும் வேல் என்று அந்த போரின் பயங்கரத்தை பற்றி கூறுகிறார். இந்த போரின் முடிவில் சூரன், கடலிலே வேர் ஊன்றி விண்ணுலகம் வரை மிக பெரிய மாமரமாக வளர்ந்து, குலுங்கி, மொத்த படைப்பையும் அஞ்ச செய்தான், இந்த மாய மரத்தை முருக பெருமான் தன் வேலை எறிந்து சாய்த்தார்.
இங்கு கடல் நீரில் அவுணர் ரத்தம் என்று சொல்ல படுவது நாம் செய்த தீவினைகளை, அங்கே மாமரமாக எழுந்து நிற்கும் சூரன் நம்முடைய அகந்தை (ego) என்ற பதத்தை, முருகனின் கைவேல் ஆனது பரப்பிரம்மத்தின் சக்தியான அந்த பராசக்தி பக்தனின் அகந்தை அழித்து ப்ரம்மத்திடம் சேர்ப்பதை குறிக்கிறது.
இந்த பாடலில் அருணகிரிநாதர், மயில் மீது முருகனை எதிர்பட வேண்டி பாடுவது, சாதகனின் வாழ்நாள் போதே கடவுளின் தரிசனம் கிடைக்க வேண்டுவதாகும். உபநிடதங்கள் மூன்று விதமான மரணத்தை பற்றி பேசும் ஒன்று நோய்களினால் இறப்பது, இரண்டு விபத்துகளால் இறப்பது, இன்னொன்று அகால மரணம், இந்த மூன்று வித மரணங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால் ஒருவன் தன்னை அறிதல் வேண்டும் , அதுவே கடவுளை அறிதல் எனவும் கூறப்படுகிறது. ஸ்வேதாஸ்வர உபநிஷத்தும், கதஉபசநிஷத்தும் கடவுளை உணர்பவனும், தன்னை உணர்பவனும் மரணத்திலிருந்து விடுபடுகிறான் என்று கூறுகிறது.
லலிதையின் நாமமான “சர்வம்ரித்யு நிவாரணி” என்ற நாமம், அவளே இந்த எல்லாவித மரணங்களில் இருந்தும் விடுவிக்கிறாள் என்றும் கூறுகிறது, “காலஹந்த்ரீ” என்ற நாமம் காலனை அழிப்பவள் என்ற பொருள் பொதிந்து எம பயம் போக்கி அருள்பவள் என்று வரும், இவ்வாறு அனுபூதியும் லலிதா சஹஸ்ரநாமமும் ஒரே வேண்டுதல்களை சாதகன் பால் வைத்து சாதகனுக்கு நன்மை செய்து வருகின்றது.
செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர்

Leave a comment