
ஆன்மீக வாழ்க்கையில் முதல் படியாகிய நாம ஜெபத்தில் ஆரம்பித்து, கடைசியில் இறைவனுடன் ஒரு ஆன்மாவை இணைப்பதே கந்தர் அனுபூதியின் ஐம்பத்தொரு பாடல்களும், முதல் பாடலில் நாம ஜெபத்தை ஒரு சாதகனுக்கு அறிமுகம் செய்த அருணகிரிநாதர் , இரண்டாம் பாடலில் சாதகனுக்கு ஆறு ஆதாரங்களையும் விளக்கி, பரபிரம்மத்தின் ஆறு குணங்களையும் கூறி, அந்த குணங்கள் எவ்வாறு சாதகனை ஒரு இறை அனுபவ நிலைக்கு இட்டுச் செல்கிறது என்று விளக்கி, அந்த அனுபவத்தின் ஒரு முன்னோட்டம் எவ்வாறு இருக்கும் என்றும் விளக்குகிறார், அந்த அனுபவத்தையும் குஹ பரப்ரஹ்மத்திடம் நிரந்தரமாக எப்போது தருவாய் என்றும் வேண்டுதலாக வைக்கிறார்.
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் மற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே
பொருள்: தேவலோகத் தலைவனான முருக பெருமானே, பேரின்பமாயும், துன்பமில்லா நிலை அருள்பவனும், என்றும் யோக நிலையில் இருப்பவனும், எல்லோருக்கும் நல்லதையே செய்பவனும், அன்பாக பேசுபவனும், எப்போதும் அதி அற்புதங்கள் புரிபவனுமான நீ, நான் என்னும் அகங்காரம் அழிய உபதேசம் செய்து எனக்கு நலத்தை செய்வாயோ?
அருணகிரிநாதர் , மேற்கண்ட பாடலில் ஆறு குணங்களை மட்டும் கூறவில்லை , மேலும் ஒரு சாதகனுக்கு சூட்சும உடலில் உள்ள ஆறு ஆதாரங்களையும் விளக்குகிறார். எந்த ஒரு சாதகன் ஆறு சக்கரங்களையும் கடந்து செல்கிறானோ, அவன் இறைவனுடன் இரண்டற கலந்து விடுகின்றான், அவ்வாறு அவன் கலக்கும் பொழுது, தான், தனது , தன்னாலே செய்யப்பட்டது என்ற எண்ணங்கள் அழிந்து , தனது அகங்காரத்தை இழக்கிறான் , அதையே அருணகிரிநாதர் , எல்லாம் அற இழந்த நலம் என்கிறார். இனி இந்த பாடலில் லலிதையின் நாமங்கள் எவ்வாறு சேர்ந்து பொருள் கொடுக்கின்றது என்று பார்க்கலாம்.
உல்லாசம் – பேரின்பம் – இறைவன் பேரின்ப வடிவானவன், அவனே சச்சிதானந்தம் ஆக இருக்கிறான், ஸத் – எங்கும் நிறைந்திருக்கும் தன்மை, சித் – அவனே எல்லோரையும் இயக்கம் ஓர் பேரறிவு, அவனே எல்லோர் உள்ளும் இருக்கும் ஒரே உண்மையான விழிப்புணர்வு, ஆனந்தம்- எப்பொழுதும் ஆனந்த மையமாக இருப்பவன், இந்த ஸ்வரூபத்தையே “சச்சிதானந்த ரூபிணி ” என்று லலிதையின் நாமம் ப்ரஹ்ம ஸ்வரூபமாக விளக்குகிறது.
நிராகுல – இறைவன் குலங்கள் அற்றவன் , ஆகுலம் என்ற சமஸ்கிருத பதத்திற்கு குழப்பம், நிலையற்ற தன்மை என்ற பொருள்கள் வரும். இறைவன் எப்பொழுதும் நடு நிலையோடு, குழப்பங்கள் அற்று இருப்பதால் அவன் நிராகுலன் ஆகிறான். அதே போல் நிராகுலன் என்றால் துன்பங்கள் அற்றவன், யார் ஒருவன் நடு நிலையோடு இருக்க கற்கிறானோ, அவனை இன்ப துன்பங்கள் அணுகுவதில்லை, இதையே பகவான் கிருஷ்ணன் “ஸ்தித ப்ரக்ஞன்” என்று கீதையில் கூறுகிறார். இறைவன் பேரின்ப வடிவாக இருப்பதால் அவர் எப்போதும் துன்பங்கள் அற்று இருப்பதேயே இந்த நிராகுல பண்பு விளக்குகிறது.
யோக – இறைவன் எப்பொழுதுமே யோகத்தில் அமர்ந்து யோகீஸ்வரனாக இருக்கிறேன் , அதனாலேயே அவன் எப்பொழுதுமே ஆனந்தமாக இருக்கிறான். யோகம் என்பது உடல் , மனம், ஆன்மா மூன்றும் ஒன்றிணைந்து இறைவனை அடைய முயலும் ஒரு யுக்தி ஆகும் – இதையே லலிதையின் நாமமான “யோகினி” விளக்குகிறது , மேலும் உடலில் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு யோகினி இருந்து நம்மை வழிநடத்தி செல்வதையும் இந்த நாமம் குறிக்கும்.
இதம் – இறைவன் எல்லோருக்குமே நலத்தை மட்டுமே விரும்புகிறார். அவர் நல்லவை தீயவை என்ற த்வைத்த சித்தாந்தங்களுக்கு அப்பால் இருப்பதால் , அவர் எது யாருக்கு இதமா அதை மட்டுமே செய்கிறார். லலிதையின் நாமங்களான “சுக கரி , சுக ப்ரியா” லலிதை எனும் பரம்பொருள் இதத்தை தம் பக்தர்களுக்கு எப்பொழுதுமே விரும்புகிறது என்று தெளிவாகிறது.
சல்லாபன்-இறைவன் எப்பொழுதுமே அன்பாக பேசுகிறார், அவருடைய அன்பானது, குருவாக வந்து உபதேசம் செய்து, சாதகனை மேலெழ செய்யும் அளவிற்கு , அவருடைய அன்பு அளவிட முடியாததாக இருக்கின்றது. “நிஜ சல்லாப மாதுர்ய வினிர் பர்சித்த கச்சப்பி” என்ற லலிதையின் நாமம் , இறைவனின் பேச்சானது சரஸ்வதியின் வீணையான கச்சபியை விட மிகவும் இனிமையாக இருக்கின்றது என்று பறைசாற்றுகின்றது.
விநோதன்-அற்புதங்களை அனாயசமாக செய்பவனாகவும் , தன்னையே பலவாக பிரித்து , மாயையால் தன்னைத் தானே மறைத்து , முடிவில் மாயையை விலக்கி, எங்கும் தாமே நீக்கமற நிறைந்திருக்கும் தன்மையை சாதகனுக்கு
புரிய வைத்து, முடிவில் தம்மோடு இணைக்கிறார், இந்த செயலே வினோதமான ஒரு அற்புதமும் கூட. லலிதையின் நாமமான “லீலா வினோதினி” பரம்பொருள், இந்த உலகை படைத்தல் , காத்தல் அழித்தல் முதலிய வேலைகளை ஒரு லீலையாக அனாயாசமாக செய்வதும் , அதுவும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் செய்து முடிப்பவள் என்றும் சொல்கிறது. இந்த அர்த்தம் பொதியும் விதமாக “உன்மேஷ நிமிஷாத்பன்ன விப்பன புவனா வளி” என்ற நாமம் உணர்த்துகிறது.
இவ்வாறு இறைவன் அறுகுணங்களைக் கொண்டு அதோடு ஆறு ஆதாரங்களில் இனைந்து, ஒவ்வொரு படியாக சாதகனை அழைத்து செல்கிறான். முடிவாக சஹஸ்ராரம் என்ற இடத்தில் எல்லா பற்றுகளும் அற்ற நிலையில் அவனுடைய ஆன்மாவைத் தம்முடன் இணைத்துக் கொள்கிறார், இவ்வாறு நிரந்தரமாக இணையும் பொழுது அது சாயுஜ்ய முக்தி எனப்படும் , ஆனால் மந்திர யோகத்தில் முன்னேறும் ஒருவர் அவ்வப்போது இந்த நிலையை அடைவது சமாதி எனப்படும் , சமாதியும் பல வகைப்படும், இவ்வாறு சமாதி கைவரப் பெற்ற ஒருவர் , அவ்வப்போது இறைவனை அடைந்தாலும் மீண்டும் தாம் கொண்ட கர்ம வினைக்கேற்ப மறுபடியும் உடலில் இருந்து இயங்குவர், அது உலக நன்மைக்காகவும் பல நேரங்களில் இருக்கும். முடிவாக நீண்ட நாட்கள் சமாதி நிலையில் தம்மை இருத்திக்கொள்ளும் ஒருவர், இறைவனுடன் நிரந்தரமாக கலப்பர்.
இவ்வாறான சமாதி யோகமானது , மந்திர ஜபம் முழுமை பெறும் போது ஈடேறும் , அப்போது ‘தான்’ எனும் பொருள் அழிந்து, நமக்கு நாமே விதித்துக் கொண்டுள்ள பல கட்டுகள் அவிழும் . இந்த கட்டுகள் நீங்குவதே “எல்லாமற என்னை இழந்த நலம்” என்று அருணகிரிநாதர் கூறுகிறார். மேலும் ஆறு ஆதாரங்களுக்கும் தலைவனாக இருப்பவன் அந்த முருகப் பரம்பொருளே என்று “சுர பூபதி” என்ற பதத்தில் கூறுகிறார். ஆறு ஆதாரங்களின் தலைவனாக சைவத்தில் சிவனும் , வைணவத்தில் விஷ்ணுவும் , சாக்தத்தில் சக்தியும் ஆதாரங்களுக்கு தலைவர் ஆகின்றனர், இவ்வாறு கெளமாரத்தின் தலைவனான முருகப்பெருமான் ஆறு இடங்களில் ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் கோவில் கொண்டுள்ளான். அவை:
1. திருப்பரங்குன்றம் — மதுரையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.
2. திருச்செந்தூர் — திருநெல்வேலிக்கு கிழக்கே (திருச்சீரலைவாய்) கடற்கரையில் உள்ளது.
3. பழனி — (திருவாவினன்குடி) திண்டுக்கல் நகருக்கு மேற்கே உள்ளது.
4. சுவாமிமலை — (திருவேரகம்) கும்பகோணம் அருகில் உள்ளது.
5. திருத்தணி — அரக்கோணம் அருகில் உள்ளது.
6. பழமுதிர்சோலை — மதுரைக்கு அருகில் உள்ளது.
இந்த கோவில்கள் யோக மார்க்கத்தில் , ஓவ்வொரு ஆதாரங்களையும் ஒரு சாதகன் கடந்து செல்ல வேண்டிய தத்துவங்களை உணர்த்தி அவனுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழி செய்யும் .
கந்தர் அனுபூதியில் சக்தி வழிபாடு எவ்வளவு இயைந்து வருகிறது என்று பார்த்து வரும் வரிசையில் , இம்முறை மூன்று மற்றும் நான்காம் செய்யுட்களில் எப்படி கந்தர் அனுபூதியும் லலிதா சஹஸ்ரநாமமும் இறைவனை அடைய ஒரே வழியைக் கூறுகிறது என்று பார்க்க இருக்கிறோம்.
செய்யுள் 1 – ஆடும் பரி வேல்
