கெடுவாய் மனனே கதிகேள் கரவாது
இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே.
பொருள்: ஓ மனமே நீ ஒழிந்து போவாய், நீ நல்ல கதி சேர்வதற்கு, இவ்வளவு நாட்கள் மறைந்து வைத்த பொருள் எல்லாம் தானம் செய்வாய், அதோடு முருகனின் பாதங்களை எப்போதும் நினைத்திடு, அதுவே பல ஜென்மங்களில் சேர்த்த வினைகளை எல்லாம் தூளாக்கும், அதோடு சேர்த்து நீ செய்யும் காரியங்களில் நான் தான் செய்கிறேன் என்ற அகந்தையினை விடுவாய்.
அருணகிரிநாதர் இந்த பாடலில் “மனோ நாசம்” என்ற படியினை அடைவது எப்படி என்று விளக்குகிறார், ஒரு மனிதனுக்கு மனமே சகல துன்பத்திற்கும் காரணம், அந்த மனமானது அமைதியாக இருந்து விட்டால் மாளிகையோ மண்வீடோ, மனிதன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியும், ஒருவன் தன் மனதை சந்தோஷ படுத்துவதிலேயே தன் வாழ்க்கை முழுவதும் இழக்கிறான், தானும் தன் மனமும் வேறு வேறு என்ற உண்மையை அறியாமல் அவன் மனமே தான் என்று நினைத்து மனமகிழ்சிக்காக பல்வேறு செயல்களை செய்து துன்புறுகிறான். நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே வெறும் மனோ வியாபாரமே என்று தத்தாத்ரேயரும் பரசுராமரிடம் திரிபுர ரகசியத்தில் சொல்கிறார், இந்த மனதிற்கு அப்பால் தான் ஒருவரின் உண்மை தன்மை இருக்கிறது என்று உணர்த்தவே இந்த பாடல்.
மனம் என்பது எளிதில் மறையாது, சற்று சிந்தித்து பார்த்தல் மனம் என்பது வெறும் ஞாபகங்களின் குவியலே, தான் ஏற்கனவே கண்ட காட்சிகளை வைத்து மனம் கற்பனை செய்கிறது, மனம் என்பது கண் கண்ட காட்சிகள், உணர்வுகள் போன்றவற்றின் எச்சமான உருவமில்லா பிம்பங்கள் மட்டுமே, ஒருவன் பல்வேறு பிறவிகளில் சேகரித்த இந்த பிம்பங்களே அவனையும் அறியாமல் ஆழ் மனதில் ஊன்றி அவனை செயல்கள் செய்விக்கிறது, இந்த செயல்களே நல்லவை தீயவை என்ற படிகளுக்குள் அடங்கி கர்மா அல்லது விதி என்றழைக்கப்படுகிறது, ஒருவன் தன் மனதில் எப்பொழுது இந்த பிம்பங்களை சேர்ப்பதை நிறுத்துகிறானோ அப்போதே அவன் கர்மா சேருவது நிற்க தொடங்குகிறது, அதேபோல் ஏற்கனவே சேர்ந்த பிம்பங்களை அழிக்க தொடங்குகிறானோ அப்போது கர்மா கழியவும் ஆரம்பிக்கிறது, முடிவில் முற்றிலும் சுத்தமான தூய நீரோடை போல் மனதை பெறுகிறான், இதை நிர்மலமான மனம் என்றும், சித்த சுத்தி என்றும் அழைக்கிறோம்.
இவ்வாறான மனம் அமைதி அடைந்து, பிம்பங்கள் அழிக்க படவே மந்திர ஜபம், வேதாந்த ஞானம் தேவை படுகிறது, அதே போல் கையில் அளவுக்கு மீறி உள்ள பொருள் மனதை அமைதி அடைய விடாது, அதனாலேயே அருணகிரிநாதர் எதையும் மறைத்து வைக்காமல் தானம் செய் என்றும் சொல்கிறார். இங்கே தானம் என்ற சொல் பொருளுக்கு மட்டும் அல்ல, செய்யும் செயல்களில் “நான் தான்” செய்கிறேன் என்ற எண்ணத்தையும் விட வேண்டும், அவ்வாறு விட்டு விட்டு இறைவனின் பாதங்களை நினைக்கிறானோ, அவனுடைய கர்மம் இல்லாமல் போகிறது, அவனுக்கு விதி வேலை செய்யாது, மேலும் கடைசி வரியில் அருணகிரிநாதர் “விடுவாய் விடுவாய் வினை யாவையுமே” என்று சொல்லும்போதும், அகந்தையை விடு என்றதயே சொல்கிறார்.கீதையில் கண்ணனும் இதையே “கடமையை செய் பலனை எதிர்பாராதே” என்று ஒரு வரியில் சொல்கிறார்.
அருணகிரிநாதர் இறைவனின் திருவடி தியானத்தை இங்கே அறிமுகம் செய்கிறார், நாம ஜபம், வேதாந்தம் ஞானம், இப்போது அடுத்த படியாக முதலில் திருவடி த்யானம் என்ற ஒரு செயல் முறை உபதேசத்தை இங்கே கொண்டு வருகிறார், இறைவனின் திருவடி தியானமே கர்ம வினைகளை அழிக்க வல்லது என்று இந்த பாடலில் கூறுகிறார், இந்த அர்த்தம் பொதியும் வகையிலே லலிதையின் நாமமான “நக²தீ³தி⁴திஸஞ்ச²ன்னனமஜ்ஜனதமோகு³ணா” வருகிறது. லலிதையின் கால் நகங்களின் இருந்து புறப்படும் ஒளியானது அவள் பக்தர்களின் தமோ குணத்தை அழித்து அவர்களை நல்வழி படுத்தும், நகங்களின் ஒளியே அவன் கர்ம வினைகளையும் அழிக்கிறது.
இறைவன் எதற்கும் ஆசை படாதவனாக இருக்கும் போது, அவனை அத்தனைக்கும் ஆசைப் படுபவர்களால் எப்படி அடைய முடியும்? அவனை எல்லா ஆசைகளையும் விட்டவர்கள் மட்டுமே நெருங்க முடியும், திருமூலரும் “ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடாயினும் ஆசை அறுமின்” என்று தான் கூறுகிறார், இறைவனை அடைவதற்கு திருமூலர் கூறுவது போல் மனதில் ஆசை அறுத்து, தான தர்மங்கள் செய்து அடைய வேண்டும் லலிதையின் நாமம் “மாத்⁴வீபானாலஸா” – எதற்கும் ஆசை படாதவள், எதன் மீதும் நாட்டம் இல்லாதவள் என்ற பொருள் கொண்ட நாமம் அருணகிரிநாதரின் இந்த பாடலில் வரும் “கரவாது இடுவாய்” என்ற பதத்தை உணர்த்தும்.
மேலும் இறைவன் மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று அனுபூதியில் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்வதே “கெடுவாய் மனனே” என்ற பதம், மனம் எப்பொழுதும் ஓடிக் கொண்டே இருப்பது சாதகனுக்கு துன்பமே தரும், அதனாலேயே அருணகிரிநாதர் மனம் கெட வேண்டும் அல்லது நாசம் அடைய வேண்டும் என்று கூறுகிறார், லலிதையின் நாமமான “மனோவாசாமகோ³சரா” – லலிதை மனம் வாக்கு முதலானவற்றிற்கு அப்பாற்பட்டவள் என்ற பொருளில் அருணகிரிநாதரின் முதல் வரியை சஹஸ்ரநாமமும் நிரூபிக்கிறது.
கடந்த பகுதியில் நாம் மூன்று பாடல்களில் ஜபம், தானம், திருவடி தியானம், சக்திநிபாதம், சரணாகதி தத்துவத்தின் முதல் நிலை ஆகிய நிலைகளை சாதகனுக்கு அருணகிரிநாதர் விளக்குவதைப் பார்த்தோம், அதன் தொடர்ச்சியாக இந்த பகுதியில் சில வேதாந்த விளக்கங்களும், வேதத்தின் உட்பொருளை எளிமையாக அருட்செல்வர் அருணகிரிநாதர் விளக்குவதையும் பார்க்கலாம்.
