செய்யுள் 3 வானோ புனல்பார்

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில் நான் மறையோ
யானோ மனமோ எனை ஆண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே.
விளக்கம்
ஷண்முக பெருமானே!, மெய்ப்பொருள் ஆவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின் உண்மை நிலையான ஞானமா? வேதம் கூறும் பொருளா? நானா? என் மனமா? என் அகந்தையா, இல்லை என்னை ஆட்கொண்டு அகந்தை உருகும் இடமான “தான் ஆ”, இல்லை நீயே தான் இவை எல்லாவற்றிற்கும் பொருளா?

இரண்டாம் பாடலில் “எல்லாமற என்னை இழந்த நலம்” என்று வேண்டிய சாதகனுக்கு பக்தி நெறி காட்டிய அருணகிரிநாதர், மூன்றாம் பாடலில் வேதாந்தம் வழியாக அதே பொருளை விளக்குகிறார், இந்த பாடலில் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்வது, பக்தியும் வேதாந்தம் வழியாக ஞானத்தில் முடியும் என்பதே, உபநிஷத் என்று சமஸ்கிருதத்தில் கூறப்படும் வேதாந்தம் ஆனது, எந்த ஒரு பொருளின் மெய் பொருளைக் காண அதன் உண்மை நிலையை ஆராய, “நேத்தி நேத்தி” என்றால் “இல்லை இல்லை” என்ற கோட்பாட்டை கடைபிடிக்கிறது எந்த ஒரு பொருள் எப்பொழுதும் மாறாத தன்மை கொண்டு இருக்கிறதோ அப்பொருளே மெய்ப்பொருள் ஆகும், மற்றவை எல்லாம் அந்த மெய்ப்பொருளின் மாறுபட்ட தோற்றங்களே.
எந்த ஒரு சித்தாந்தையும் மெய்ப்பொருள் காண வேண்டுமானால் அதை அறிவின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதன் ஸ்தூல தன்மையை மறுத்து அதன் உண்மையான சூட்சும தன்மையை காண வேண்டும், உதாரணமாக ஒரு நாற்காலி இருக்கிறது என்றால் , அதன் பௌதீக வடிவம் தான் நாற்காலி, அதுவும் மனிதர்கள் தங்கள் மொழியில் வைத்த குறியீடு அல்லது பெயர் தான் “நாற்காலி”, ஆனால் உண்மையில் அதற்கு பெயர் என்ற ஒன்று இல்லை , அதே போல் இந்த பெயரை தாண்டி யோசித்தால் அங்கே வெறும் மரத்தால் ஆன ஒரு பொருள் தான் உண்டு, அதுவும் வெறும் மரம் மட்டும் தானா இல்லை , மரத்தினுள் சில நார்கள் பின்னி பிணைந்து ஒரு வடிவம் தருகிறது , மேலும் அந்த மரத்தின் உள்ளும் ஈரம் உண்டு , காற்று சென்று வர நுண்ணிய இடை வெளி உண்டு , மேலும் மெல்லிய உஷ்ணமும் உண்டு , இந்த மரத்தின் வடிவமோ மண்ணில் இருந்து சத்துக்களை உள்ளடக்கிய வடிவமே , இப்படியாக “இல்லை” கோட்பாட்டின் முதிர்ச்சி, கடைசியாக மரத்தின் உள்ளே உள்ள அணுகுவியலையும் அந்த அணுக்களை இயங்கும் சக்தியையும் சென்றடையும். இவ்வாறாக பஞ்ச பூதத்தின் வெவ்வேறு பரிமாணங்களின் கலவையே இந்த உலகத்தின் பொருட்கள் எல்லாம்,
எவ்வாறு சிவப்பு, நீலம், மஞ்சள் வண்ணங்கள் சேர்ந்து பல லட்ச வண்ணங்களாக உருவாகிறதோ, அவ்வாறே முக்குணங்கள் என்று சொல்லப்படும் “சத்வம், ரஜஸ், தமஸ்” ஆகியவற்றோடு பஞ்சபூத கலவையோடு சேர்ந்து பல நூறு கோடி வடிவங்களும், உயிர்களும் இந்த உலகில் உண்டாகிறது.
மனிதனும் தன் மூலத்தை ஆராய முற்படும் பொழுது, தன் உடலின் பஞ்ச இந்திரியங்கள் அல்லது அவைகளால் ஏற்படும் உணர்வுகளான பார்த்தால், கேட்டல், ருசித்தல், உணர்தல் ஆகியவற்றை கொண்டே ஆரம்பிக்கிறான்,ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு பொருளில் கரையும் போதே, இந்த ஐந்து உணர்ச்சிகளால் அந்த பொருளை விளக்க முடியாததை உணர்கிறான், அதே போல் ஒரு மனிதன் ஐந்து உடல்களால் ஆனவன், அன்னமய கோசம் எனப்படும் ஸ்தூல உடல், பிராண மாய கோசம் எனப்படும் காற்றினால் இயங்கும் உடல் உறுப்புகள், மனோமய கோசம் எனப்படும் மனது, விஞ்ஞான மாய கோசம் எனப்படும் அறிவு, கடைசியாக ஆனந்த மாய கோசம் எனப்படும் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட நிலை, இந்த நிலையை எய்துவதால் நிலையான பேரானந்தம் ஏற்படுவதாலேயே இது ஆனந்த மாய கோசம் என பெயர் பெற்றது,இந்த நிலைகளை விளக்கவே லலிதையின் நாமமான “பஞ்ச கோசாந்தரஸ்திதா” என்ற நாமம் வாக் தேவிகாளல் கூறப்படுகிறது. லலிதை எவ்வாறு எல்லா நிலைகளிலும் இருந்து இயக்குகிறாளோ, முருகப்பெருமானும் பஞ்ச கோசத்திலும் இருந்து இயக்குகிறார், இந்த ஐந்தாம் நிலையில் லலிதை முருகன் என்ற நாம பேதங்கள் அற்று எல்லாம் ஒன்றாகிறது.
அதனாலேயே லலிதையின் ரஹஸ்ய நாமம் “பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபிணி” என்று அடுத்த நாமத்திலேயே கூறுகிறது.
பொதுவாக ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வேதங்கள் பெருமாளைத் தேடுவதாகவும், பெருமாள் பாசுரத்தின் பின் செல்வதாகவும் கூறும் வழக்கம் உண்டு, இன்றும் வரதராஜ பெருமாள் உற்சவத்தில் பாசுரங்கள் பாடி ஒரு கூட்டம் முன் செல்ல, பெருமாள் பாசுரங்கள் பின் செல்ல, அவரின் பின்னே வேதம் ஓதிக் கொண்டு மக்கள் செல்வர். இவ்வாறு பெருமாள் வேதத்திற்கு அப்பாற்பட்டவர் என்றும், அதே சமயம் தூய அன்பினால் செய்யப்பட்ட பாசுரத்திற்கு தன் நிலை விட்டு இறங்கி வருவார் என்றும் சொல்லாமல் சொல்ல படுகிறது, அதே போல், இங்கே லலிதையின் நாமத்தில் “வேத ஜனனி” என்ற நாமம் லலிதை வேதத்திற்கு அப்பாற்பட்டவள் என்று தெரிகிறது, ஒருவர் படைக்கும் பொருள் எக்காலத்திலும் படிப்பவரை விட மேன்மையாக முடியாது, ஏன் என்றால் படைப்பவர் எப்பொழுதும் தாம் முன்பு படைத்ததை விட நவீனமாக அடுத்த படைப்பை கொடுப்பார், அதே போல் வேதம் எல்லாவற்றிலும் மேன்மை ஆனது தான்,ஆனால் வேதம் மட்டுமே உயர்ந்தது அல்ல, வேதத்தை தோற்றுவித்த அந்த சக்தியே உயர்ந்தது என்று தர்க்க ரீதியாகவும் பொருந்தும்.
எவ்வாறு வேதம் ஆனது பெருமாளிடம் ஒரு பக்தனை இட்டுசெல்லுமோ அவ்வாறே வேதம் ஆனது முருகனிடம் ஒருவனை கொண்டு சேர்க்கும், “வேத வேத்யா” என்ற லலிதையின் நாமமும், பராசக்தியை வேதத்தால் அறிய முடியும் என்று சொல்கிறது. இங்கே நாம் முக்கியமாக ஒரு விஷயத்தை பார்க்க வேண்டும், வேதத்தால் கடவுளை அறிய முடியும் என்று தான் கூறி இருக்கிறதே தவிர வேதமே கடவுள், வேதத்தில் கடவுள் அடக்கம் என்று கூறவில்லை, மேலும் வேதத்தால் மட்டும் தான் கடவுள் அறிய படுவார் என்றும் கூறவில்லை.
இங்கே நாம் வேதம் என்று சொல்வது, ஒரு குறிப்பிட்ட மத நூல் அல்ல, பல்வேறு மதங்கள் இறைவனை அடைய நிறைய கிரந்தங்களை வைத்திருக்கிறது, இவை அனைத்துமே வேதம் என்ற ஒரு சொல்லிற்கு உள்ளேயே அடங்கும். இவ்வாறான அனைத்து மதங்களின் வேதங்களைத் தோற்றுவித்த இறைவன் ஒருவனே அதனாலேயே “வேத ஜனனி” என்று சக்திக்கு பெயர், அதே போல் எந்த மதத்தின் வேதம் ஆனால் இறைவனை அடைய வழி காட்டுகிறதே தவிர, தாம் கூறும் பாதையே சிறந்தது என்று கூறவில்லை, இதிலிருந்து தெரிவது என்ன என்றால், கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வது போல் வெவ்வேறு காலகட்டங்களில் இறைவன் தோன்றி காலத்திற்கு ஏற்றது போல் உபதேசங்களை கூறி சென்று இருக்கிறான். ஆனால் உபதேசமே இறைவன் ஆக முடியாது, அவன் அதற்கும் அப்பாற்பட்டவன்.
அதனாலேயே அருணகிரிநாதர் “நவில் நான் மறையோ” என்று நிறுத்தாமல் “நேத்தி – நேத்தி (இல்லை -இல்லை” என்ற கோட்பாட்டின் படி கடைசியில் “தானோ பொருளாவது ஷண்முகனே” என்று எல்லாவற்றிற்கும் பொருளாக முருகனே இருக்கிறான் என்று கூறுகிறார். இதுவே வேதாந்தம் கூறும் பொருளும் ஆகும், சாதகன் நாம ஜபம் செய்து, பக்தி வழி நின்று, வேதாந்தமும் கற்க வேண்டும் என்று முதல் மூன்று நிலைகளைக் முதல் மூன்று பாடல்களிலேயே காட்டுகிறார் அருணகிரிநாதர்.
எல்லாமே முருகன் தான் என்றும் சொல்லும் பொருளிலேயே, ஆத்ம சொரூபமாக முருகன் இருக்கிறான் என்றும் சொல்கிறார், லலிதையின் நாமமான “ஆத்ம வித்யா” என்ற நாமம், பரா சக்தியே ஆத்ம ஸ்வரூபமாக இருப்பதும், அவளே ஆத்ம ஞானத்தை கொடுப்பவளுமாக இருப்பதை இந்த நாமம் காட்டும், அதே போல் முருகனே ஆத்மவித்தை அருள்பவனாக அருணகிரிநாதர் இந்த பாடலில் உணர்த்துகிறார்.
செய்யுள் 3 வானோ புனல்பார்

Leave a comment