செய்யுள் 4 வளைபட்ட கைம் மாதொடு


வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்
தளைபட்டழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டெழு சூருரமும் கிரியும்
தொளைபட்டுருவத் தொடு வேலவனே.
பொருள்:
வேலவா! அன்று சூரனுக்கு எதிரான போரில், அவன் மார்பையும், க்ரௌஞ்ச மலையையும், அசுர சேனைகளையும் அழிக்க வேலை வீசி எறிந்தவனே, இன்று நான் உன்னை அடைய என் மனைவி மக்களே தடையாக இருக்கிறார்களே, இந்த தடையும் அழியுமா? இவ்வாறு என்னை இந்த சூழலில் கைதியாக வைத்திருப்பது உனக்கு தகுதியான செயல் தானா? இந்த செயல் தகுமா?

மூன்றாம் பாடலில் வேதாந்த பொருள் கற்று உணர தலைப்பட்ட சாதகன், இப்போது ஆன்மீக பாதையில் முன்னேற எத்தனிக்கும் போது பல தடைகளை சந்திக்க நேரிடும், முதலாவதாக தன்னுடைய சொந்தக் குடும்பமே தடையாக அமையும், ஏனென்றால் ஒருசாதகன் முன்னேற தன்னுடைய ஆன்மீக தேடலில் நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும், ஆனால் ஏற்கனவே தன்னுடைய நேரத்தின் பெரும்பான்மை பகுதியை தன்னுடைய குடும்பத்தின் நலனிற்காகவும் அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் செலவழிக்க கடமை பட்டுள்ளான், இப்போது ஆன்மீக தேடல் ஆரம்பித்த உடன் அதுவே அவனுக்கு தடையாக தெரிகிறது. இங்கு அருணகிரிநாதர் சொல்லாமல் ஒரு விஷயத்தையும் சொல்லி இருக்கிறார், அதாவது வலைப்பட்ட கை மாது என்பது மனைவி என்ற அர்த்தம் மட்டும் அல்ல, அது தாயையும் குறிக்கும், ஒருவன் பல பிறவிகளில் தாய் வயிற்றில் பிறந்து, பின் தானும் மக்களைப் பெற்று, ஜென்ம ஜென்மங்களாக கடனை ஏற்படுத்தி கொண்டு அதன் வலையில் சிக்குவது என்று தீரும் என்று தான் அருணகிரிநாதர் கேட்கிறார், நம் வாழ்வின் ஒவ்வொரு சொந்தமுமே ஏதோ ஒரு வகையில் நாம் அவருக்கு கடன் பட்டிருப்பதாலேயே ஏற்படுகிறது, இந்த கடன் தீரும் போது, அந்த ஆத்மா இறைவனை அடைகிறது.
இங்கு சாதகன் என்ற சொல் ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும். ஆன்மீகத்தில் ஒரு தடை உடைந்த பின் அதை விட வலிமையானதும், நுண்ணிய அடுத்த தடையும் புலப்படும் , இது ஒருவன் நூறு ஆடைகள் அணிந்திருப்பது போன்றது, ஒரு ஆடை கழிந்தால் தான் அடுத்தது தெரியும், இவ்வாறு ஒருவன் இறைவனை அடைய முயற்சிக்கும் போது, இறைவனே அவனைத் தேடி வருகிறான். இந்த பாடலில் “வளைப் பட்ட கை மாது” என்பதை ஒருவன் பிறவி கடலில் தவிப்பதையும், உலகில் பிறந்து உழலுவதையும் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் மாறாக அருணகிரிநாதர் ஒருவனை “கிருஹஸ்தாஸ்ரமம்” என்று சொல்லப்படும் இல் வாழ்க்கையை தவறாக பாடினார் என்று கொள்ள முடியாது, இங்கே தாய், மனைவி மக்கள் என்று கடன் பட்டு உள்ளேனே என்னை இவ்வாறு விழ வைத்தது நீதானே இது உனக்கு அழகா முருகா? என்று கேட்கும் தொனியில் தான் கொள்ள வேண்டும்.
லலிதையின் நாமங்களில் “சம்சார பங்க நிர்மக்ன சமுத்தரன பண்டிதா” என்ற நாமம், லலிதை ஒருவளே தம் பக்தர்களை இந்த பிறவி கடலில் இருந்து காப்பவள் என்று சொல்கிறது, மேலும் லலிதையின் பக்தர்கள் அவள் அன்றி மற்றவரை நினைக்காதவர்கள் ஆதலால், இந்த உலக வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்கள் அவர்களை எதுவும் செய்வதில்லை, அதே போல் அனுபூதி படிக்கும் அடியவர்கள் முருகனை மட்டுமே நினைப்பதால் அவருடைய வினைகளை அடியவரிடம் நெருங்காமல் இறைவன் காக்கிறான், மேலும் சாதகன் தன் இல்லற கடமைகளையும் குறைவற செய்ய வழி வகுக்கிறான். எந்த ஒரு ஞானியும் ஒரு சாதகனை தன் கடமைகளைத் துறந்து கடவுளை தேட சொன்னதில்லை, மேலும் தன் கடமைகளை இழிவு படுத்தியதும் இல்லை.
கடவுளிடம் ஒரு எல்லை தாண்டி பழகுபவர்கள், இறைவனை வசை பாடுவதும் உண்டு, அதை “நிந்தா ஸ்துதி” ஸ்துதி என்று சொல்லுவோம், அவ்வாறே அருணகிரிநாதர் பல இடங்களில் முருகனை நிந்தா ஸ்துதி செய்துள்ளார், அவரே “செந்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான்” என்று முருகனை அலங்காரத்தில் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது வரியில் “கிளைபட்டெழு சூருரமும் கிரியும்”
என்று சூரபத்மன் மரமாக நின்று முருகனின் வேலால் துளை பட்டதை பாடினாலும் , இங்கும் ஒரு மறை பொருளை உள் வைத்திருக்கிறார், இந்த பிறவியை கடல் என்று சொல்வது போல காடு அல்லது ஆரண்யம் என்றும் சொல்லும் வழக்கம் உண்டு , எவ்வாறு ஒரு காட்டில் மரக்கிளைகள் ஒன்றோடு ஒன்று பிண்ணி
சூரிய ஒளி கூட கீழே விழாமல் மறைக்குமோ , அவ்வாறு நம் வினைகள் ஆனது , மற்றவர்கள் வினைகளோடு பின்னி நம்மை கடன் பட்டவர் ஆக்குவது மட்டும் அல்லாமல் , நம் ஆன்மீக வாழ்க்கைக்கும் பெரும் தடையாக உருவெடுக்கிறது, இதனால் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வினை தீரும் முன்னே மேலும் வினை சேர்த்து இறக்கிறோம், இதேயே “பவ ஆரண்யம்” என்று சமஸ்கிருதத்தில் சொல்வோம், இந்த வினைக்காட்டை வேரோடு அழிக்கும் கோடாரியாக இருப்பதால் “பவ ஆரண்ய குடாரிகா” என்று லலிதையை வாக்தேவிகள் புகழ்கிறார்கள் .
லலிதை , இந்த சம்சாரம் என்னும் காட்டில் தீ ஏற்பட்டால் , எவ்வாறு ஒரு மனிதன் அவதியுறுவானோ அந்த காட்டு தீயை அணைக்க அம்ரிதத்தை
பொழிபவள் என்று “பவதா வஸுதா வ்ருஷ்டி” என்ற நாமத்தில் கூறப்படுகிறாள்.
சூரபத்மன் இந்த பாடலில் நம் அகந்தையின் உருவமாகவும், கிரவுஞ்ச மலை நம் கர்ம வினையாகவும் உருவகப்படுத்த படுத்துகிறது, முருகனின் கை வேல் ஞானத்தின் உருவம் என்று எல்லோரும் அறிந்ததே, எப்படி சூரபத்மன் மற்றும் அவன் தம்பியும் முருகனின் வேலால் வீழ்ந்தனரோ அவ்வாறு ஞானம் பிறந்தால் ஒருவனது கர்மமும், அகந்தையும் அழிந்து, இறைவனடி சேர்வர், இதையே அருட்செல்வர் மறைமுகமாக விளக்கியுள்ளார்.
இந்தப் பாடலில் அருணகிரிநாதர் ஒரு சாதகனுக்கு ஏற்படும் தடைகளையும், தடைகளிர்க்கான காரணத்தையும், அந்த தடையை எவ்வாறு இறைவனே வந்து களைந்து காக்கிறான் என்று கூறி சாதகனை அடுத்த நிலைக்கு தயார் படுத்துகிறார்.
கந்தர் அனுபூதிக்கும் லலிதையின் நாமங்களுக்கும் உள்ள ஒற்றுமையை பார்த்து வருவதின் தொடர்ச்சியாக, இம்முறை நாம் அனுபூதியின் 5 மற்றும் 6 ஆம் செய்யுள்களை ஆராய்ந்து, அருணகிரிநாதர் எவ்வாறு சாதகனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றார் என்று பார்ப்போம்.
செய்யுள் 3 வானோ புனல்பார்

Leave a comment