
ஆன்மீக வாழ்வின் முதல் படியில் தொடங்கி இறைவனை உணர்ந்து கலப்பது வரை ஒவ்வொரு படியாக ஒரு சாதகனுக்கு விளக்கி அவன் வாழ்வையும் வளத்தையும் உயர்த்துவது கந்தர் அனுபூதி, இதையே மற்ற சமய நூல்களும் செய்யும். முதல் படியாக ஒவ்வொரு சாதகனுக்கும் அவனுடைய குரு இறைவனின் நாமத்தை உபதேசிக்கிறார். சமயங்கள் மாறினாலும் இந்த வழக்கம் மாறாது.நாம ஜெபத்தை முதற்கொண்டு பூஜை,யோகம் முடிவாக ஞானம் என்ற படிக்கு இட்டுச் செல்வதே முதல் படியான மந்திர உபதேசத்தின் வேலை.
ஆடும் பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே.
பொருள்: கஜமுகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற யானை முருகப்பெருமானின் சகோதரனே, ஆடுகின்ற மயில் வேல், அழகான சேவல் என்று உன்னைப் பாடும் பணியையே என் வாழ்வு முழுதும் நான் செய்யும் பணியாக அருள்வாய்
முதற் பாடலில் விநாயகரை துதி செய்து அவர் அருள் பெற்று, இலக்கிய மரபையும் பூர்த்தி செய்த பின், பாட்டுடைத் தலைவனாக முருக பெருமானை எடுத்ததும் பாடாமல், மறுபடியும் கணேசரை ஏன் பாடுகிறார், மேலும் முருகனைப் பாடாமல் முருகனின் மயில், வேல் மற்றும் சேவலை ஏன் பாட வேண்டும். இதிலிருந்தே நமக்கு தெரிவது, முதல் பாடலில் பரப்ரஹ்மத்தை கணேசர் மூலம் காட்டி, அந்த ப்ரஹ்மம் முருகனே என்று கூறி, இரண்டாம் பாடலில் மரபோடு இயைந்து கணேசரை பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.
ஆடும் என்ற சொல்லே, அ-கார, உ- கார, ம-மகார சப்தம் கொண்டு ஓம் என்ற பிரணவத்தை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் வேல் மற்றும் மயில் சேர்ந்து “ஓம் வேலு மயிலு” (அ) “ஓம் வேலும் மயிலும் துணை” என்ற மந்திரத்தின் உட்பொருளே இச்செய்யுளின் முதல் வரி. இந்த கருத்தையே “வாதினை அடர்ந்த” என்ற திருப்புகழில் “ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப தறியேனே” – மயிலை தனி மந்திர ரூப நிலை என்று கூறுகிறார். ஓம் என்கின்ற பிரணவத்தை மட்டுமே தனி மந்திரமாக ஜபம் செய்ய முடியும், மற்றய மந்திரங்களை ஓம் இன்றி ஜபம் செய்ய கூடாது என்ற விதியும் உண்டு. அதனாலேயே தோகை விரித்து ஆடும் மயிலான ஓம்காரம் பரப்ரஹ்ம ரூபமான முருகனின் வாகனமாக அமைகிறது.
திருமூலர் கீழ் கண்ட பாடலில் “சிவ நாமங்கள் ஓதியே” என்று நாம ஜபத்தின் மகிமையை உணர்த்துகிறார். நாம ஜெபத்தினாலேயே தான் பரா சக்தியின் கணவனான சிவனை சேர்ந்து இருந்தேன் என்றும் சொல்லுகிறார். மேலும் ஓதியே என்ற வார்த்தை மூலம் அவர் வேத மந்திரங்களையும் ஓதி சிவபெருமானை வழி பட்டது தெரிகின்றது. இவ்வாறு நாமத்தின் மகிமை அநேகம்.
சேர்ந்திருந்தேன் சிவ மங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தன்துறை
சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே
இனி நாம் சற்று லலிதா சஹஸ்ரநாமம் உருவான விதம் பற்றி பார்க்கலாம். மகாதிரிபுரசுந்தரி தன்னுடைய தர்பாரில் ஒரு நாள் வாக் தேவிகளான வசினி, காமேஸ்வரி, அருணா,விமலா,ஜெயினி,மோதினி,சர்வேஸ்வரி, கௌலினி ஆகியவர்களை நோக்கி, தமக்கு ப்ரீத்தி ஏற்படும் படி தம் நாமங்களை பாட சொல்கிறாள். இங்கு நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், சாக்தத்தில் பர ப்ரஹ்மம் என்று சொல்லப்படும் பராசக்தி, தாமே எல்லாமுமாக இருப்பவளை யார் ப்ரீத்தி செய்ய முடியும், அவளை நாமங்கள் சொல்லி இந்த பிரபஞ்சம் வணங்கினால் வணங்குவோர்க்கு ப்ரீத்தி ஏற்படும் அன்றி, அவள் எப்போதுமே திருப்தியாக “நித்ய திருப்த்தா” என்று இருக்கிறாள். அவளுக்கு யாரிடமும் எதுவும் வாங்கவும் தேவையில்லை அதையே “நிஷ் பரிக்ரஹா” என்ற நாமத்தில் அறிய முடிகிறது.
பின் எதற்கு இவ்வளவு பெரிய சபை, அச்சபையில் எட்டு வாக்தேவிகள், கலை மகளே எட்டு வடிவம் கொண்டு, பாடியது போல சஹஸ்ர நாமத்தை பாட வேண்டும். இது அனைத்தும் சாதகர்களுக்காக தான், நாம ஜெபத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்ற முறையில் தம் நாமங்களை தம் பக்தருக்காக அவளே பாட சொல்லி கேட்டு வாங்கி கொடுக்கிறாள். அதிலும் அந்த நாமங்கள் அவளின் ரூப லாவண்ய வர்ணனையில் ஆரம்பித்து, அவளின் வீர செயல்களை கூறி, தந்திர முறை படி யோக பயிற்சிகளை விளக்கி, ஞான மார்கத்தில் முடிவு பெரும். இதை
பல்வேறு லலிதையின் நாமங்களில் அறியலாம். மேலும் லலிதை நாமங்களை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறாள் என்று “நாம பாராயண ப்ரீத்தா” என்ற பதத்திலும் அறிய முடிகின்றது.
மேலும் லலிதையை பல்வேறு தேவர்கள், முனிவர்கள் மந்திர ஜெபம் செய்து வழிபட்டுள்ளனர். இதை “மனு வித்யா – மனுவினால் வழிபட பட்டவள், “சந்திர வித்யா” – சந்திரனால் வழிபட பட்டவள், “புதார்ச்சிதா” – புதனால் அர்ச்சிக்க பெற்றவள், “சிவாராத்யா” – சிவனால் ஆராதிக்க பட்டவள் , “மஹா வித்யா” – இருக்கும் மந்திரங்களில் தாமே மஹா மந்திரமாக இருப்பவள். “சர்வமந்த்ர ஸ்வரூபிணி” – எல்லா மந்திரங்களின் உட்பொருளாக இருப்பவள் என்ற நாமங்களில் அறிய முடிகிறது. சஹஸ்ரநாமத்தின் மூலமே நமக்கு நாம ஜெபத்தின் மகிமை கூறியது மட்டும் அல்லாமல், அவ்வாறு யார் யார் அந்த மந்திரங்களை கூறி வழிபட்டனர் என்று மனு தொடங்கி சிவ பெருமான் வரை அனைவரையும் பட்டியலிடுகிறது லலிதையின் ரஹஸ்யமான ஆயிரம் நாமங்கள்.
பொதுவாக ஒருவர் ஆன்மீக வாழ்வில் நுழையும் போது, எத்தனையோ கேள்விகளும், குழப்பங்களும் இருக்கும், அவ்வாறு பல தத்துவங்களை தம் இனம், மொழி, நாடு, சூழ்நிலைக்கேற்ப கற்பிக்க பட்டிருப்பர், இந்த செயற்கையான கற்பித்தல்கள் உண்மையான ஆன்மீகத்தில் நுழையும் போது தவிடு பொடியாகும். ஒரு நல்ல குரு இந்த செய்யலை சீடனுக்கு வலிக்காமல் செய்து அவனை முன்னேற்றுவார், இந்த தவறான செயற்கையான, வாழ்க்கையின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகளுக்கு ஆன்மீக வாயிலாக விடை தேட பலர் முயல்வர், ஆன்மீக வாழ்வே இயற்கையாக இறைவனைச் சென்றடைய ஒருவழி என்பதேயே மறந்து, வாழ்விற்கு எந்த ஒரு விதத்திலும் உதவாத மேலும் கஷ்டம் மட்டுமே தரும் பழக்க வழக்கங்களுக்கும் ஆன்மீகத்தில் விடை தேட முயல்வர், அவ்வாறு முயலும் போது தான் ஒருவர் எவ்வளவு தூரம் மாயையான ஒரு வாழ்வில் சிக்கி இருக்கிறார் என்பது தெரியும். இதை பறை சாற்றுவது போலவே “தத்துவ குப்பைகளை மறந்திட செய்திடப்பா” என்று கந்த குரு கவசத்தில் ஒரு வேண்டுதல் வருகிறது. இந்த தேவையில்லாத தத்துவ விசாரணை விலகி உண்மை தெரிய ஆரம்பிக்கவே நாம ஜபம் உதவும்.
சைவத்தில் திருமூலரும், சாக்தத்தில் பராசக்தியும், வைணவத்தில் ஆண்டாள் நாச்சியார் தம் திருப்பாவையில் “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி” என்று நாம ஜபத்தின் மகிமையை விளக்கி நாம ஜெபமே ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் என்று முதற் படி எடுத்து கொடுக்கின்றனர். இதையே முருக பெருமானும் அருணகிரிநாதரை ஆட்கொண்ட பின் தம் புகழ் பாடுமாறு கூறுகிறார். அப்படியிருக்க அருணகிரிநாதர் ஏன் திரும்பவும் “பாடும் பணியே பணியாய் அருள்வாய்” என்று கேட்க வேண்டும்.
இந்த வேண்டுதல் நமக்காக தான் அனுபூதி படிக்கும் ஒவ்வொருவரும் இதை படிக்க படிக்க, இறை நாமத்தை எடுத்து உபதேசம் செய்ய ஒரு நல்ல குரு அமைவார், அவரே இறைவன் நம்மீது வைத்துள்ள அன்பையும், கந்தர் அனுபூதியின் பலனையும் நமக்கு காட்டும்.
