செய்யுள் 11 கூகாஎன என்கிளை

கூகாஎன என்கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே.
பொருள்:
நாகாசலம் என்று கூறப்படும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் வேலவனே, நான்கு வகை கவி பாடும் திறனை அளிப்பவரே, என் மனைவி மக்கள் சொந்தங்கள் எல்லாம் கூவி அழாதவாறு எனக்கு மெய்ப்பொருள் உபதேசம் செய்தவரே .

இந்த பாடலில் அருணகிரிநாதர் மெய்ப்பொருள் பேசியவா என்று தான் கூறுகிறாரே தவிர , உபதேசம் அருளியவா என்று கூறவில்லை ஏனென்றால் உண்மையான உபதேசம் பின் வரும் இருபதாம் பாடலில் தான் வரும் , இங்கு மெய்ப்பொருள் என்பது , ஒரு குரு தன் சீடனிடம் வேதாந்த உண்மைகளான ஆன்மா அழிவற்றது, உடல் நீ அல்ல , ஆன்மாவே நீ என்று கூறி, நீ இந்த பிறவியிலேயே கடவுளை அடைவாய் என்று உறுதி அளிப்பதே மெய்ப்பொருள் பேசுவது , இவ்வாறு ஒரு குருவின் உறுதிமொழி உள்ள சாதகன் தான் சாதாரணமாக இறக்க போவதில்லை , ஆதலால் குடும்பத்தார் அவன் உடலை சுற்றி அமர்ந்து அழும் நிலை வராது என்றும் தெளிவடைகிறான் , ஏன் என்றால் கடவுளை உணர்ந்த ஒருவன் தன் மரணத்தை ஏற்கும் நிலை மகத்தான ஒரு செயலாக இருக்கும் , ஏன் என்றால் பரம்பொருளில் மொத்தமாக ஒடுங்கும் நேரமே ஒருவனது பிறவியின் பயனாகும் , ஆதலால் உடலிற்கு வரும் மரணம் இந்த சாதகனை பொறுத்த வரை வரவேற்க தக்க ஒரு நிகழ்வாக இருக்கும் ,அவன் சுற்றத்தாரும் அந்த சாதகன் அடைந்த நிலையைக் கண்டு பெருமிதம் கொள்வாரே அன்றி அழுவதற்கு வாய்ப்பில்லை .
இந்த பாடலில் அருணகிரிநாதர் திருச்செங்கோட்டு வேலவனை பற்றி பாடுகிறார் , மேலும் இந்த மலை மீதிருக்கும் வேலவனை பல பாடல்களில் புகழ்வதில் இருந்து செங்கோட்டு வேலவன் அருணகிரிநாதரை எவ்வாறு ஆட்கொண்டிருக்கிறார் என்று புலப்படும், இங்கு அருளாளர் முருகனை நான்கு கவி தியாகா என்று கூறுவதற்கு காரணம் , முருகனே தமிழ் கடவுளாக இருந்து அருணகிரிநாதருக்கு நான்கு வித கவிதைகளாலும் தன்னைப் பாட வல்லமை தந்ததை உணர்த்துகிறார், இந்த நான்கு கவிகளும் அதன் விளக்கமும் பின்வருமாறு
1. ஆசு கவி – ஒரு பொருளை பற்றி எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல் பார்த்த உடன் பாடுவது
2. மதுர கவி – இசையோடு இனிமையாக பாடுவது
3. சித்திர கவி – ஒரு சித்திரத்தை அமைத்ததற்கு ஏற்ப பாடுவது
4. வித்தார கவி – மிகவும் விரிவாக ஒரு பொருளைப் பற்றி பாடுவது
இந்த நான்கு வகைக் கவிதைகளாலும் , அருணகிரிநாதர் முருகனை பாடி மகிழ்ந்திருக்கிறார்.
இந்த மலைக்கு நாகமலை என்று பெயர் வர ஒரு காரணம் உண்டு , முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் , ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர், சக்தி மிக்கவர் என்று ஒரு போட்டி வந்தது , அந்த போட்டியின் நிபந்தனை ஆதிசேஷன் மேரு மலையின் மீது சுற்றிக் கொள்ள வேண்டும் , வாயு பகவான் தன் காற்றின் பலத்தால் ஆதிசேஷன் தான் பிடித்திருக்கும் பிடியை வலுவிழக்கச் செய்ய வேண்டும், இந்த போட்டியில் ஆதிசேஷன் வென்று விடவே, கோபத்தில் வாயு பகவான் காற்று சுழற்சியை நிறுத்தி விட்டார், உயிர்கள் அவதிப்பட ஆரம்பித்தன, அதன்பின் முனிவர்களின் அறிவுரையேற்று வாயு பகவான் காற்றின் சுழற்சியை மீண்டும் ஏற்படுத்தினார் , திடீரென நிகழ்ந்த காற்றின் சுழற்சியால் ஆதிசேஷனும், அவர் பிடித்திருந்த மேருவின் ஒரு பகுதியும் உடைந்து பறந்து பூமியில் விழுந்தது , அந்த ஒரு பகுதியே இன்று திருச்செங்கோடு மலையாக இருக்கின்றது , ஆதிசேஷனின் ரத்தம் படிந்ததால் மலை செந்நிறமாக காட்சி அளிக்கிறது , மேலும் மலை மீது குடிகொண்டுள்ள அர்த்த நாரீஸ்வரர் சொரூபமானது சிவ சக்தி ஐக்கியமாக இருப்பதும் , மலையில் கந்த பெருமான் இருப்பதும், மேலும் ஒரு தத்துவத்தை இந்த பாடலில் விளக்குகிறது.
அதாவது பரப்பிரம்மமாக சிவபெருமானின் ஆற்றலான சக்தியே இந்த உலகின் இயக்கம் அனைத்திற்கும் காரணம் , அந்த சக்தியும் சிவனும் வேறு வேறு அல்ல என்றும் , சக்தியே முருகனின் வடிவாக வந்ததை முந்தைய பாடல்களில் நாம் பார்த்தோம் , இங்கு முருகனே குருவாக அருணகிரிநாதருக்கு வந்து மெய்ப்பொருள் விளக்கம் மற்றும் உபதேசம் அளிப்பதும் , சக்தியே அந்த செயலையும் முருகனின் வடிவில் செய்து முடிவாக பரமேஸ்வரனுடன் இணைய செய்கிறாள் என்ற தத்துவத்தை இந்த பாடலில் மறை பொருளாக வைத்துள்ளார்.
இந்த பாடலின் வரும் செங்கோட்டு வேலவன் குருவாக அமைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு ,சக்தி வழிபாட்டில் ஸ்ரீ சக்கரத்தில் சக்தியை வழிபடும் கடைசி ஆவாரணத்திற்கு முன்பு , குருவை வழிபடும் வழக்கம் உண்டு, இதற்கு காரணம் குருவே சக்தியிடம் ஒரு ஆன்மாவை சேர்ப்பதாலும் , சக்தியே அந்த பக்குவமடைந்த ஆன்மாவை பரமேஸ்வரனிடம் சேர்ப்பதாலும் , இந்த முறை பின்பற்றப்படுகிறது . ஸ்ரீசக்ரத்தை மேரு என்று முப்பரிமாண வடிவத்தில் வழிபடும் வழக்கம் உண்டு , அதற்குக் காரணம் அம்பாள் மேரு மலையில் தன் ஸ்ரீ புரம் என்ற நகரத்தை நிர்மாணித்து மஹா த்ரிபுர சுந்தரியாக இந்த படைப்பை வழி நடத்தி செல்வதால் , அவளின் எந்திர ரூபமான வழிபாட்டிற்கும் மேரு என்று பெயர் .
இங்கும் திருச்செங்கோடு மேருமலை ஆவதால் , அங்கு இன்றளவும் இருக்கும் ஆதிசேஷனின் உருவம் குண்டலினியை உருவகப்படுத்தி இருக்கிறது , அந்த மலையின் உச்சியில் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிக்கு அருகில் , வேலவனின் சந்நிதி அமையப்பெற்று, வேலவன் குருவாக அமர்ந்து சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபத்தை, தன்னை நாடி வரும் சாதகனுக்கு உணர்த்தி அவனை பரம்பொருளிடம் ஒன்ற செய்கிறார். முருகன் இங்கு குரு வடிவாக இருந்து மெய்ப்பொருளும் பேசி, சக்தியாக இருந்து ஆன்மாவை பரிசுத்தமாக்கி ஆறுமுக சிவமாக இருந்து அவனை தன்னுள் சேர்த்து பிறவிக்கடலில் இருந்து மீட்கிறார், இவ்வாறு யார் ஒரு ஆன்மாவை மீட்கிறாரோ அவரே உண்மையான குரு ,அவரே இறையின் உண்மையான தூதர், அந்த குரு எல்லோர்க்கும் தெரியும் படி இந்த செய்கையை செய்ய மாட்டார் , திருச்செங்கோடு முருகனின் இந்த தத்துவம் எவ்வாறு மறைந்து இருக்கிறதோ , அவ்வாறே அவரின் செய்கையும் உலகத்தாரிடம் இருந்து மறைந்து இருக்கும் , ஆனாலும் எந்த சாதகனை எப்போது எங்கு பார்க்க வேண்டும், எந்த மந்திரம் உபதேசம் செய்ய வேண்டும் என்று அத்துணையும் இந்த குரு முன்கூட்டியே தீர்மானித்து அந்த சாதகனை தன் பால் இழுப்பார், இந்த காரியங்கள் அனைத்தையும் குரு செய்வதற்கு ஒரே காரணம் , அவர் இறைவனை உணர்ந்த பின், சக்தியானவள் தன் பெரும் கருணையால் குருவின் மூலமாக மேலும் உயிர்களை பரமேஸ்வரனிடம் சேர்க்க உழைக்கிறாள் , இந்த செயல்கள் எதுவும் வெளியில் தெரிவது இல்லை. ஆகவே உண்மையான குருவை தேடி அலைய தேவை இல்லை , அவர் குறித்த சமயத்தில் நம்மை இழுத்து கொள்வார் , வெளியில் ஆடம்பரமாக படாடோபமாக இருக்கும் அத்துணை பேரும் குரு என்ற கொள்கைக்குள் அடங்க மாட்டார்கள், செங்கோட்டு வேலவன் போல் யார் வேலை செய்கிறாரோ அவரே குரு , இந்த விளக்கத்தையும் அருணகிரிநாதர் இந்த பாடலில் வைத்து , சாதகனை அவனுடைய குழப்பங்களில் இருந்து மேலும் சற்று விடுவிக்கிறார்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் குருமூர்த்தி, தட்சிணாமூர்த்தி ரூபிணி- குருவாக இருப்பவள் என்ற நாமமும், சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி- சிவம் சக்தி என்று இருவரும் சேர்ந்து பரப்பிரம்மமாக விளங்குபவள் என்ற நாமமும் மேற்கூறிய தத்துவத்திற்கு சான்றாக வரும்.
மேலும் கலா மாலா – அறுபத்து நான்கு கலைகளையும் மாலையாக அணிபவள், கலா நாதா – கலைகளின் அரசியாக இருப்பவள், காவ்யா லாப வினோதினி – கவிதைகளால் மகிழ்ச்சி கொள்பவள் என்ற நாமங்கள் அவளுக்கு நால்வகை கவிதைகளின் மீதுள்ள நாட்டமும், அவற்றால் அவளை அடைய முடியும் என்றும் உணர்த்துகிறது, இங்கு முருகனும் அருணகிரிநாதரை தம்மை பற்றி பாடுவதையே விரும்பியதும், அந்த பாடல் பாடும் வல்லமையையும் அவரே அந்த கலைக்கு அரசனாக இருந்து கொடுத்ததும் இந்த நாமங்களில் சக்தியும் முருகனும் ஒருவரே என்பதை நிரூபிக்கும், ப⁴வரோக³க்⁴னீ என்ற நாமம் அவளே இந்த பிறவிகடலில் இருந்து விடுவிப்பவள் என்ற பொருளில், சாதகனின் கடைசி நிகழ்வான மரணத்தையும் எளிதாக கடக்க வைக்கிறாள் என்று அர்த்தம் பொதிந்து வந்து இந்த பாடலுக்கு மேலும் விளக்கங்கள் தரும்.

கடந்த பகுதியில் சாதகன் 10,11 ஆம் பாடல்களில் தன்னுடைய மிக முக்கிய வேண்டுதல்களை இறைவனிடம் எவ்வாறு வைக்க வேண்டும் என்றும் ஒரு குரு மெய்ப்பொருள் விளக்கத்தை சாதகனுக்கு உபதேசத்திற்கு முன்பு எப்படி விளக்குகிறார் என்றும் பார்த்தோம் . இந்த பகுதியில் குருவின் உபதேசம் எவ்வாறு இருக்கும் என்றும் , குரு என்ற தத்துவத்தின் அனுபவத்தை சாதகன் எவ்வாறு உணர்வான் அல்லது உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அருணகிரிநாதர் விளக்குகிறார்.
செய்யுள் 10 கார்மாமிசை காலன்

Leave a comment