மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே.
அகமாடை மடந்தையர் என்றயரும்
ஜகமாயையுள் நின்று தயங்குவதே.
பொருள்: மகா மாயையாகிய இந்த உலக வாழ்வின் பற்று, மனம், புத்தி மற்றும் அஹங்காரம் மீது உள்ள பற்று போன்றவற்றை அழிக்க கூடிய ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமான் கூறியும் (ஜபம்)நான் வீடு, மனைவி, மக்கள் என்ற இந்த உலக வாழ்வில் நின்று தவிக்கிறேனே!
இந்த பாடலில் அருணகிரிநாதர், “மொழிந்து” என்ற வார்த்தையை கையாள்கிறார், மொழிந்து என்ற சொல்லிற்கு இயந்திர கதியில் சொல்வது என்ற பொருளே இங்கே வரும், முதலில் ஜபம் ஆரம்பித்த சாதகன், ஒரு குறிப்பிட்ட அளவு ஜபம் செய்தாலே இறைவனை அடைந்து விடலாம் என்று நினைக்கிறான், ஆனால் கொஞ்சம் போக போகத்தான் தெரிகிறது, அவன் வெறும் வாயளவிலே தான் இறைவனின் பெயரை சொல்கிறானே தவிர உள்ளுணர்வு பொங்கி அன்போடு சொல்லவில்லை என்று, பின்னால் வரும் பாடல்களில் “மொழிந்து உருகும்” என்ற பதத்தில் இதற்கு சான்றை தருகிறார்.
மஹா மாயையே இறைவனின் செய்கை தான், பந்த படுத்துவதும் அவனே, பந்தத்தில் இருந்து விடுவிப்பவனும் அவனே, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் விஷ்ணுவின் கனவே இந்த பௌதீக உலகம் என்றும், விஷ்ணுவின் மாயாசக்தியின் வெளிப்பாடே இந்த உலகம் மற்றும் உலகில் உள்ள ஜீவர்கள் அனைவரும் மாயையின் வெளிப்பாடே என்ற கருத்து உண்டு, ஆதலால் இறைவன் ஒருவனே எல்லாவற்றிற்கும் ஆதி காரணம் ஆகிறான், அதுபோலவே அவன்மட்டுமே இந்த மாயையைப் போக்க முடியும், ஆனால் அதற்கு சாதகனுக்கு தூய அன்பு இறைவனிடம் வேண்டும், இங்கே நான் இத்தனை லட்சம் மந்திர ஜபம் செய்தேன், கோடி உரு மந்திரம் ஓதினேன், நூற்றுக்கணக்கில் யாகங்கள் செய்தேன் என்று சொல்வது ஒன்றும் உதவாது, இதைத் தான் அருணகிரிநாதர் “மொழிந்தும் ஒழிந்திலனே” என்று கூறுகிறார், பலர் இவ்வாறாக எண்ணிக்கைகளில் இறைவனை அடக்கி விடலாம் என்று நினைக்கின்றனர், ஆகமங்களும் தந்திரங்களும் எண்ணிக்கை கொடுத்திருப்பது அந்த மந்திரம் ஜபம் செய்யும் சாதகனின் சித்தத்தில் நிலைபெறவே, சில லட்சங்கள் மற்றும் ஆயிரங்கள் ஜெபங்களில் பெரிய மாற்றங்கள் வேண்டும் என்று எதிர்பார்ப்பது உயரிய பர ப்ரஹம ஸ்வரூப தேவதைகளின் இடத்தில் எதிர் பார்க்க முடியாது.
லலிதையின் நாமங்களில் “மஹா மாயா” , “மாயா” என்ற நாமங்கள் லலிதையே மாயையாக கட்டுவிப்பவள் என்று கூறுகிறது, அவளே இந்த மாயையில் இருந்து விடுவிப்பவள் என்ற பொருளில் “பந்த மோசினி” என்ற நாமும், “மைத்ர்யாதி³வாஸனாலப்⁴யா” என்ற நாமத்தில் அவளை அன்பினால் மட்டுமே அடைய முடியும் என்றும் “துர்லபா” என்ற நாமத்தில் எளிதில் அடைய முடியாதவள் என்றும் தெரிகிறது.
மேலும் ஜபம், தவம், யாகம் போன்றவற்றை பெருமைக்காக செய்வதாலும் , தான் பக்திமான் என்று ஒரு அந்தஸ்தை சமூகத்தில் ஏற்படுத்தி கொள்ள செய்வதும் செய்யாமல் இருப்பதும் ஒன்றுதான், இந்த செயலும் ஒரு மாயையே, “பஹிர்முக சுதுர் லபா” என்ற நாமத்தில் பெருமைக்காக செய்யப்படும் ஆன்மீக காரியங்களால் இறைவனை அடைய முடியாது என்ற பொருள் வரும், இவ்வாறான செயல்கள் அனைத்துமே எந்திர கதியில் உணர்வு ஒன்றி செய்யாத ஒரு செயலாகவே அமையும், இவ்வாறான செயல்களால் இறைவனை அடைய முடியாமல் ஒரு சாதகன் மாயையில் சிக்கி தவிப்பதே “ஜக மாயையுள் நின்று தயங்குவதே” என்ற வரியில் அருணகிரிநாதர் கூறுகிறார்.
செய்யுள் 4 வளைபட்ட கைம் மாதொடு
