செய்யுள் 6 திணியான மனோ சிலை

திணியான மனோ சிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியாஎன வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே.
விளக்கம் : கற்சிலை போன்று இறுகிய மனதில் உன் இரு கால்கள் படாமல், அந்த மனம் மலருமோ(இல்லை இறைவனின் திருவடி ஸ்பரிசம் இல்லாமல் சஹஸ்ராரம் என்ற தாமரை மலருமோ?), வள்ளியின் பாதம் பணிந்து இன்னும் என்னென்ன பணி செய்ய வேண்டும் என்று வேண்டி கேட்கும், வள்ளியின் மீது தணியாத அன்பு கொண்ட கருணை கொண்ட பரம்பொருளே!

இந்த பாடலில் அருணகிரிநாதர் இரண்டு முக்கியமான தத்துவங்களை கூறுகிறார், இப்பாடல் மேலோட்டமாக பார்த்தால், முருகன் வள்ளியம்மை மீது அழியாக் காதல் கொண்டுள்ளதாக மட்டும் தான் புரியும், ஆனால் எல்லாவித உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டவன் முருகன், அவனே இறைவன், பரம்பொருள் என்று முதற் பாடலிலேயே நிரூபித்த அருணகிரிநாதர் இந்த பாடலில் வள்ளியம்மை மீது இருக்கும் அன்பை கூற எந்த முகாந்திரமும் இல்லை, அப்படியென்றால் இந்த பாடலில் உள்ள மறை பொருள் தான் என்ன?
சைவ சித்தாந்தத்தில் சத்திநிபாதம் என்ற ஒரு நிலை உண்டு, அது என்னவென்றால், ஒரு ஆன்மாவின் பக்குவம் முதிர்ச்சி அடையும் போது, இறைவனின் ஆற்றல் அந்த ஆன்மாவை நோக்கி பாயும், இங்கே பாயும் என்ற வார்த்தை பயன்படுத்த பட்ட காரணமே, இறைவனின் ஆற்றல் படு வேகமாக அந்த ஆன்மாவை நோக்கி வந்து, அந்த உயிரை அவர் இடத்தில் சேர்க்க என்ன வேண்டுமோ அதைச் செய்யும், இந்த ஆற்றலே சக்தி அல்லது உமையவளின் அருள். இதுவே த்ரிகா சித்தாந்தத்தில் சக்தியே உயிர்களை இறைவனிடம் சேர்க்கிறாள் என்றும், இறைவன் எப்போதும் தாம் ப்ரஹ்ம ஸ்வரூபமாகவே இருந்து உயிர்களைச் சேர்க்கும் வேலையை உமையிடம் விட்டு விட்டான் என்றும் கூறப்படுகின்றது, ஆதலால் ஒவ்வொரு முழு நிலவு அன்றும் உமையவள் முதிர்ந்த ஆன்மாக்களை தன்னுடன் சேர்த்து, பின் புது நிலவு அன்று, இறைவனிடம் தானும் கலந்து, தன்னுள் உள்ள ஆன்மாக்களையும் கலக்கிறாள் என்றும் நம்பப்படுகிறது.
இனி சற்று அனுபூதியைப் பாப்போம், முதல் ஐந்து பாடல்களில் வள்ளியை பாடாத அருணகிரிநாதர் இங்கு பாட காரணம் என்ன? ஒன்று தான் முருகனின் அருள் வள்ளியின் மூலமே கிட்டும், வள்ளியம்மை முருகனிடம் அவன் அடியவர்களை கொண்டு சேர்ப்பாள். அதற்கு சான்றாக மேற்கூறிய சித்தாந்தம் நிற்கும், மேலும் லலிதையின் நாமங்களிலும் “சிவ ஞானப் ப்ரதாயினி” – சிவஞானத்தை அருள்பவள் என்ற பொருளில் லலிதைதான் சிவ தரிசனம் செய்விக்கிறாள், மேலும் “சஹஸ்ரார அம்புஜா ரூடா” என்ற நாமத்தில், சஹஸ்ராரம் என்ற ஆயிரம் இதழ் தாமரை மீது நிற்பவள் என்று கூறப்படுகிறது.
குண்டலினி யோகத்தில், சக்தியானவள் ஒவ்வொரு ஆதாரமாக கடந்து, அவள் பாதம் சஹஸ்ராரம் சென்று படும்போது, அந்த ஆயிரம் இதழ் தாமரை மலர்கிறது என்று லலிதா சஹஸ்ரநாமம் சொல்கிறது, இதையே அருணகிரிநாதரும் “உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ” என்று கேட்கிறார், இது சக்தி வழியாக தான் நடக்கும் என்பதால் முதல் முறையாக வள்ளியை பற்றி இங்கே பாடுகிறார்.
எந்த ஒரு சாதகன், சஹஸ்ராரம் வரை சென்று இறைவனை தரிசித்து விட்டானோ, அதற்கு மேல் உள்ள பரவெளியில் இறைவன் ஆன்மாவை தானே ஈர்த்து கொள்கிறார், ஆனால் சஹஸ்ராரம் செல்ல சக்தியின் கருணை தேவை, சிலர் சஹஸ்ராரமே இறுதி என்று நினைத்து விடுகின்றனர், ஆனால் அது பாதி பயணம் தான், அதற்கு மேல் சக்தி இறைவனிடம் நம்மை சேர்த்து விடுகிறாள், அதற்கு மேல் நடப்பதை யாராலும் விவரிக்க முடியாது, அருணகிரிநாதரும் “பேசா அனுபூதி” என்று பின் வரும் ஒரு பாடலில் அதைக் குறிப்பிடுவார்.
இந்த பாடலுக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மூலமும் ஒரு விளக்கம் உண்டு, பெருமாளை தரிசனம் செய்பவர்கள் முதலில் தாயாரை தரிசித்த பின்பே பெருமாளிடம் செல்வர், ராமானுஜரும் தன சரணாகதி கத்யம் என்ற பாடலில் மகாலட்சுமியிடம் சரணாகதி பண்ணிய பின்பே பெருமாளிடம் செய்கிறார். கிறிஸ்தவ மதத்திலும் இயேசுவின் அன்னை மேரியிடம் செய்யும் வேண்டுதல்களே அதிகம், இவ்வாறு சக்தியின் முக்கியத்துவம் பல்வேறு இடங்களில் வெளிப்படுகிறது.
இங்கே வள்ளி என்ற சக்தியின் ரூபம், மனிதர்களாகிய ஜீவாத்மாவை குறிக்கும், முருகன் பரமாத்மாவாகி, இந்த ஜீவர்களை தேடி வந்து ஆட்கொண்டு, ஜீவாத்மாக்களின் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து, முடிவில் தன்னில் சேர்த்துக் கொள்கிறார்.

Leave a comment