அமரும் பதி கேள் அகமாம் எனுமிப்
பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பெரு தானவ நாசகனே
பொருள்: இமவான் என்ற இமயத்தின் அரசனின், மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, “நான்”, “எனது” என்ற மாயத்தின் மயக்கம் தீர என்னிடம் உண்மை பொருளைப் பேசியவா, உனது இந்த பெருங்கருணை மிக்க செயலை நான் என்னவென்று சொல்லுவேன்!
சக்தியானவள் உலகைக் காக்க பல்வேறு நேரங்களில் பல உருவத்தில் தோன்றி, தீமைக்கு எதிராக போராடி இருக்கிறாள், அவ்வாறு அவள் தோன்றி அழித்த அசுரர்கள் ஏராளம், ஆனாலும் தேவி மகாத்மியம், அவள் அழித்த சில அசுரர்களின் வரலாற்றைக் கூறி அவள் எவ்வாறு அந்த அசுரர்களை அழித்து உலகைக் காத்தாள் என்று சொல்லும். இங்கே அருணகிரிநாதர் முருகனை ஏன் பார்வதியோடு இணைத்து அதன் பின் அசுரர் குலத்தை அழித்தவனே என்று கூற வேண்டும்? அதற்கு இரண்டு பிரதான காரணங்களே உண்டு.
ஒன்று, உலகை படைத்த சக்தியின் புதல்வன், அவளைப் போலவே தானும் உலகைக் காக்க கிளம்பி விட்டான், அது மட்டுமல்ல சக்தி சில அசுரர்களை அழிக்க கிளம்பும் போது, அந்த போருக்கு ஏற்றவாறு உருவம், செயல்திறன், ஆயுதம், படைக்கலன்கள் கொண்டு கிளம்புவாள், உதாரணமாக சண்ட முண்டர்களை வதைக்க காளியாகவும், மகிஷாசுரனை அழிக்க மகாலட்சுமி ஸ்வரூபமான துர்க்கையாகவும், சும்ப நிசும்பர்களை அழிக்க சரஸ்வதியின் அம்சமாகவும் அவள் வெளிப்பட்டு அந்த காரியங்களைச் செவ்வனே செய்கிறாள். காலத்திற்கு ஏற்றவாறு அந்த பராசக்தி வேண்டிய உருவம் எடுத்து காரியத்தை முடித்து, திரும்பவும் உருவமில்லா பெரு நிலையில் தன்னை நிறுத்திக் கொள்கிறது.
இவ்வாறாக பல்வேறு வடிவாக வந்த பராசக்தியின் குமரன் என்று சொல்லும் போதே, முருகனும் பராசக்தியின் கால தேச வர்தமானத்திற்கு ஏற்ற வாறு வந்த ஒரு வடிவம் என்று புரிய வைக்கவே இந்த பாடலில் அருணகிரிநாதர் பார்வதியின் குமாரன் என்று கூறுகிறார். மேலும் சக்தி வழிபாட்டில் பாலாம்பிகை அல்லது வாலை என்று சித்தர்கள் போற்றும் சிறிய பெண் குழந்தை வடிவில் இருக்கும் தெய்வம் பராசக்தியே அந்த குழந்தை வடிவம் என்று பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யானம் என்ற அத்தியாயத்தில் கூறப்படும். பராசக்தியே இந்த குழந்தை வடிவம் தாங்கி வந்து பண்டாசுரனின் முப்பது புதல்வர்களை அழித்தாள் என்று இந்த புராணம் கூறுகிறது, அதேபோல் நாம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயம், பரமேஸ்வரனின் சக்தியால் மட்டுமே இந்த அசுரர்கள் அழிய வேண்டும் என்ற வரம் வாங்கி வைத்திருக்கிறார்கள், இவ்வாறு இருக்கும் போது முருகனை ஏன் பார்வதியின் குமாரன் என்று அழைக்க வேண்டும், அதுவும் அழிக்கும் தொழில் செய்யும் சிவன் இருக்க சிவனின் குமாரனே என்று தானே அழைத்திருக்க வேண்டும்.
இந்த பாடலை சற்றே ஆழ சிந்தனை செய்தால், அருணகிரிநாதர் இங்கே வைத்துள்ள மறை பொருள் விளங்கும். அருணகிரிநாதர் தன் பல்வேறு திருப்புகழ் பாடல்களில் எந்த மதத்தையும் இழிவு படுத்தியது கிடையாது, மேலும் சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று எல்லா தெய்வங்களையும் ஒன்று சேர்த்து தான் பாடியிருப்பார், அது மட்டுமல்ல அவர் வாழ்ந்த காலத்தில் முகலாயர் ஆட்சியும் இருந்தது, அதையும் விட்டு வைக்காமல் “அவா மருவி” என்ற திருப்புகழில் “சுர அதிபதி மால் அயனும் மாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே” பாடியிருப்பார் . அதாவது இந்திரன், திருமால் , பிரமன் ஆகியோர் சுவாமிமலை வாழும் முருகனுக்கு சலாம் செய்வதாக பாடுவார் , சலாம் என்பது இஸ்லாத்தை சேர்ந்தவர்கள் செய்யும் வணக்கம், இதை அருணகிரிநாதர் பாட இங்கே என்ன காரணம்? அதேகாரணம்தான் இந்த பாடலில் முருகனை சக்தியின் புதல்வனாக அழைப்பது.இந்த பாடலில் கடைசி வரிக்கும் முதல்வரிக்கும் மிக முக்கியமான தொடர்பு உண்டு.
எல்லாம் வல்ல ஒரு சக்தியே காலத்திற்கு ஏற்றவாறு மக்களிடம் வேறு வேறு உருவம் தாங்கி வருகிறது என்ற ஒரு விளக்கத்தை சாதகனுக்கு கூறவே இந்த வரியை இங்கு வைக்க முதற் காரணம்.
இரண்டாவது காரணம் திருப்புகழில் அவர் எவ்வாறு எல்லா மதமும் ஒரு கடவுளை நோக்கி போகிறது என்று காட்டினாரோ அதையே இந்த பாடலிலும் அவர் வெளிப்படுத்துகிறார்,சக்தியின் குமரனும், சக்தியும் வேறு வேறு அல்ல ஒருவரே என்ற விஷயத்தை நிலை படுத்தவே சக்தி எவ்வாறு அசுரர்களை அழித்தாளோ அதேபோல் நீயும் அசுரர்களை அழித்தாய் என்று கூறுகிறார், இங்கு ஈசாவாஸ்ய உபநிஷத்தில் வரும் “பூர்ணம் அதஹ் பூர்ணம் இதம் பூர்னாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” மந்திரத்தை இங்கு மறைபொருளாக வைத்துள்ளார் , இந்த மந்திரத்தின் அர்த்தமானதை பின் வருமாறு புரிந்து கொள்ளலாம், ஒருவரிடம் அளவிட முடியாத செல்வம் இருப்பதென்று வைத்துக்கொள்வோம் , அச்செல்வதில் இருந்து எவ்வளவு செல்வம் எடுத்தாலும் எடுத்ததை விடவும் அவரிடம் செல்வம் பண் மடங்கு பெருகினால் , அங்கே ஒரு குறைவும் ஏற்பாடாது , அதே போல் எடுக்கும் செல்வமும் அளவிட முடியாமல் எடுக்க முடியும் , அதனால் மூலமும் அளவிட முடியாது , மூலத்தின் ஒரு பகுதியும் அளவிட முடியாது, இதே போல் தான் கடவுளின் ஒவ்வொரு அவதாரமும், வடிவமும். எல்லாம் ஒரே மூலம் தான் வெறும் பெயரும் வடிவமும் மட்டுமே வேறு வேறு.
இதையே கணிதத்தில் சொன்னால் முடிவிலியில் முடிவிலி குறைந்தால் எஞ்சுவது முடிவிலி தான், அவ்வாறே கடவுளும் முடிவிலி தான் , இந்த வேதாந்த விளக்கம் தெளிவு பெறவே இந்த இரண்டு வரிகள் .
லலிதா சஹஸ்ரநாமத்தில் “நிருபாதி” – எந்த வரையறை மற்றும் அளவீட்டுக்குள்ளும் வராதவள் என்ற பொருள் பொதிந்த வரும், இந்த நாமமும் இந்த இரண்டு வரிகளை ஒத்து வரும்.
இனி முதல் இரண்டு வரிகளை பார்ப்போம், இங்கேயும் இரண்டு மஹாவாக்கியங்களை ஒளித்து வைத்துள்ளார், நான்கு வேதங்களும் ஒவ்வொரு முக்கியமான கருத்தை சொல்லும் அதில் யஜுர் வேதம் “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்ற வாக்கியமும், சாம வேதம் “தத்வமசி” என்ற வாக்கியத்தையும் சொல்லும். முதலில் இந்த வாக்கியங்கள் எவ்வாறு ஒரு சீடனுக்கு போய் சேருகிறது என்று பார்ப்போம். ஆன்மீக வாழ்வில் முன்னேற முயலும் ஒருவன் ஒரு குருவை பணிந்து, தன் நிலை கூறி, தன்னை அவரிடத்தில் ஒப்புவித்து பிறவியில்லா பெரு நிலை நோக்கி தம்மை அழைத்து செல்லுமாறு விண்ணப்பிக்கிறான், குருவும் அவனின் தற்போதய நிலை ஆராய்ந்து அவனுக்கு ஏற்றவாறு மந்திர, யோக, இயம, நியமங்களை உபதேசிக்கிறார், சீடனின் முயற்சியும் அவனின் முன்னேற்ற நிலை, வேகம் போன்றவற்றை ஆராய்ந்து அதன் பின் அவனுக்கு அவ்வப்போது பயிற்சிகளில் மந்திரங்களில் வேண்டிய மாற்றம் செய்கிறார், இவ்வாறான குருவே சத் குரு என்று அழைக்கப்படுகிறார், சத்குரு என்பது ஒரு நிலை அது ஒரு பட்டம் அல்ல. மேலும் ஒரு சத்குருவானவர் சீடனின் கடைசி நிலை வரை உடன் இருப்பார், அவனின் செல்வத்தின் மீதோ தமக்கு கீழ்ப்படிந்து அவன் நடக்கிறானா என்றோ அவரின் எண்ணம் இருக்காது, இன்னும் சொல்லப்போனால் இங்கே பணபரிவர்த்தனை என்ற ஒரு செயல் ஒரு ரூபாய் என்ற அளவிலும் நடக்காது, இந்த மாதிரியான ஒரு உறவு முறை இன்றும் இருக்கிறது, இப்படிப்பட்ட குருக்களும் இருக்கிறார்கள், எனினும் சீடனின் தகுதிக்கு ஏற்பவே குரு கிடைப்பார், ஒருவன் மந்திரத்தால் விபூதி வரவழைக்க வேண்டும் என்று நினைத்தால் அவன் குருவும் அதேபோல் அற்ப புத்தி கொண்ட ஒரு மனிதனாகவே அமைவார், ஆனால் சீடன் உண்மையாகவே முன்னேற வேண்டும் என்று நினைத்தால் தவறான குரு விதிவசத்தால் அமைந்தாலும், நல்ல குரு தாமே வலிய வந்து அவனை காப்பார். இங்கே குரு சீடனை பற்றி இவ்வளவு பேசுவதற்கு காரணம், உண்மையான குரு ஒருவராலேயே இந்த பாடலில் வரும் முதல் இரண்டு வரியை நடைமுறைக்கு கொண்டு வரமுடியும். இந்த பாடலில் “அகமாம் எனுமிப் பிமரம்” என்ற பதம் “அகம் ப்ரஹ்மாஸ்மி” – நானே பிரம்மம் என்ற பதத்தை குறிக்கும்- முதலில் ஒரு சாதகன் இந்த பதத்தை அறிவு பூர்வமாக புரிந்து கொள்கிறான், ஆனால் இது உணர்வு பூர்வமாக புரிந்தால் மட்டுமே அது உண்மையாகும், ஒரு உண்மையான கடவுளை உணர்ந்த சத்குரு இந்த உபதேசம் செய்யும் போது மட்டுமே அது உணர்வு பூர்வமான புரிதலாக மாறும், அதுவரை அது வெறும் தத்துவ குப்பையாகவோ அல்லது மிக்க படித்த மேதாவித்தனமாக வாதங்களில் வெல்ல மட்டுமே பயன் பெரும்.
இந்த உண்மையான குரு உபதேசமே மெய்ப்பொருள் உபதேசம் என்று சைவத்தில் நம்ப படுகிறது. இந்த மெய்ப்பொருள் உபதேசமானது குரு சொல்லும் போது “அகம் ப்ரஹ்மாஸ்மி” என்று சொல்ல மாட்டார், அவர் “தத்வமஸி” என்றுதான் சொல்லுவார் ஏன் என்றால் கடவுளை உணர்ந்த ஒருவர் எல்லோர் உள்ளும் இருக்கும் கடவுளை மட்டுமே பார்க்கிறார் ஆதலால் சீடனிடம் அவர் ஏற்கனவே கடவுளை கண்டு விட்டதால், அவனிடம் “தத்வமஸி – நீயே அதுவாகத்தான்” இருக்கிறாய் என்று சொல்லுவார், எப்பொழுது ஒரு சீடன் இதை உணர்கிறானோ அப்போது தான் அவன் குருவிடம் சென்று “அகம் ப்ரஹ்மாஸ்மி – நானே பிரம்மம் அல்லது நானே கடவுள்” என்று உணர்வு பூர்வமாக சொல்கிறான், இந்த இடம்தான் அத்வைத அல்லது இரண்டற கலந்த நிலை என்றாகிறது.
இந்த பாடலில் இந்த மிகப்பெரிய இரண்டு தத்துவங்களைத் தான் அருணகிரிநாதர் விளக்குகிறார், இவை இரண்டும் இன்னும் உணர்வு பூர்வ வடிவம் அல்ல, இங்கே குருவின் லட்சணமும் சீடனின் தகுதியும், வேதாந்தத்தின் அறிவு பூர்வ விளக்கமும் ,அத்வைத சித்தாந்தமும் தான் கூறப்படுகிறது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் “தத்வமயி” என்ற நாமம் மூன்றாக பிரிந்து “தத் – அது, த்வம் – ஒவ்வொரு உயிரிடத்திலும் தான் என்ற உணர்வாக இருப்பது, மற்றும் அவளே அந்த உயிரின் உள் சித்தமாக உறைவது, அயி – அந்த உயிர்களின் அன்னையாக இருப்பது மற்றும் அந்த உயிராகவே இருப்பது” – இங்கும் வேத வாக்கியமான “தத்வமஸி” என்ற வாக்கியமே கையாளப்படுகிறது, இங்கு லலிதை குருவாகவே அமர்ந்து தன் பக்தனுக்கு “தத்வமஸி” என்ற உபதேசம் செய்கிறாள் என்று நம்பப்படுகிறது, அதுவே உண்மையும் கூட.
எப்பொழுது இந்த மெய் உபதேசம் நடந்து உண்மை புரிந்து உணர படுகிறதோ, அப்போது நான் நீ என்ற பேதம் போய், அகந்தை அழிந்து இறைவனையும் அறிய முடியும், அதை விளக்கவே இந்த பாடல்.
செய்யுள் 7 கெடுவாய் மனனே
