செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர்

செய்யுள் 9
மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப்
பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூறவேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே
பொருள்: கிரவுஞ்ச மலையை தகர்த்த கடுமையான வரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவரும் ஆன வேலவனே! தேன் கொண்ட மலர்களை அணியும் பெண்களின் மோக வலையில் சிக்கி ஊசலாடும் இந்த தடுமாற்ற நிலையில் இருந்து எப்போது மீளுவேன்”
இந்த பாடலில் “ஊசல்” என்ற வார்த்தை முக்கியம், ஏன் என்றால் இதற்கு முந்தைய பாடல்களில் சாதகன் ஜபம், தவம், வேதாந்தம், மகா வாக்ய உபதேசம் பெற்றாலும், இன்னும் எதுவும் உணர்வு பூர்வமாக கடவுளிடம் நெருங்கவில்லை, அவன் அறிந்தது எல்லாம் அறிவைக் கொண்டே, அதுவும் அவனுக்கு வாய்த்த ஒரு நல்ல குருவின் தயவால்.

இந்த நிலையில் சாதகன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் மாயை எது உண்மை எது என்று அறியும் அறிவை பெறுகிறான், ஆனாலும் அவன் மனம் மாயை என்று அறிந்தும் அதன் பால் சென்று விழுகிறது, விழுந்த பிற்பாடு அறிவு அவனை ஏளனம் செய்கிறது, இது ஒவ்வொரு சாதகனுக்கு நடக்கும் வெளியே சொல்ல முடியாத ஒரு உள்மன போராகும், இது மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் யுத்தம், சில நேரம் அறிவு வென்று அவன் கடவுள் பின் செல்கிறான், சிலநேரம் மனம் வென்று மாயை பின் செல்கிறான். அதனாலேயே இந்த இடத்தில் அருணகிரிநாதர் “ஊசல் படும்” என்ற பதத்தை உபயோகிக்கிறார். மேலும் இந்த ஊசலாடும் நிலை ஓய அவரே வழியும் சொல்கிறார்.
இந்த பாடலில் “மட்டூர் குழல் மங்கை” என்ற பதம் வெளிப்படையாக மனம் பெண்கள் பின் சுற்றுகிறது என்ற பொருளைக் கொண்டிருந்தாலும், இங்கேயும் ஆழ்ந்த கருத்தை வைத்தே அருணகிரிநாதர் இந்த பாடலைச் செய்திருக்கிறார், சித்தாந்தத்தில் “புருஷன் – ப்ரக்ருதி” என்ற இரண்டு பிரிவுகள் உண்டு, படைக்கப்பட்ட பொருள் அனைத்துமே ப்ரக்ருதி படைத்தது தான், ப்ரக்ருதி என்பது பெண்மை என்ற வட்டத்திற்குள் வரும் ஏன் என்றால் பெண்மை மட்டுமே படைக்க முடியும், இந்த பிரபஞ்சமே அதனால் பெண்மை தான், அது மட்டுமல்ல இந்த படைப்பில் உள்ள ஒவ்வொரு ஆன்மாவும் பெண் என்ற கருத்தே உண்டு, இங்கு பௌதீக உடலில் உள்ள ஆண் பெண் பேதம் பேசப்படவில்லை, மாறாக ஆன்மாவின் குண நலனே பேசப்படுகிறது, இங்கே உடல் சார்ந்த பேதத்தை கொண்டு குழப்பம் அடைய வேண்டாம்.
ப்ரஹ்மம் ஆனது “புருஷன்” எனவும், பிரம்மத்தின் சக்தி “ப்ரக்ருதி” ஆகவும் இருந்து இந்த படைப்பில் உள்ள உயிர்கள், ஜட பொருள்கள் ஆகியவற்றை தோற்றுவிக்கிறது, அது மட்டுமல்லாமல் ப்ரக்ருதியை ஆன சக்தியே மாயையாக இந்த உயிர்கள் அனைத்தையும் உண்மை நிலை அறிய விடாமல் கர்ம வினைக்கு ஏற்ப மாயையில் மூழ்கடிக்கிறது. இந்த மாயையின் தோற்றத்தையே தேன் வடியும் மலர் கொண்ட பெண்ணாக அருணகிரிநாதர் வர்ணிக்கிறார், எவ்வாறு ஒருவன் மோக வலையில் வீழ்ந்து பின்னால் நாசமடைகிறானோ, அவ்வாறே அவன் மாயையின் தூண்டுதல்களுக்கு ஆளாகி, அது மனதிற்கும் புலன்களுக்கும் தேன் போல் இருக்கும் என்று நம்பி ஏமாந்து அந்த வலையிலே பல பிறவிகள் சுழல்கிறான் – அபிராமி அந்தாதியில் பட்டர் “ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி” என்று இந்த நிலையையே கூறுகிறார்.
இவ்வாறு மாயையில் சிக்கி தவிக்கும் ஒருவன் எவ்வாறு அதில் இருந்து வெளியில் வர முடியும்? அதற்கு வழியை முருகனின் செயல்களில் இருந்தே கூறுகிறார், சூரபத்மனை அழிக்க செல்லும் வழியில் கிரவுஞ்ச மலை குறுக்கிடுகிறது, அந்த மலையை கடக்க எண்ணிய தேவர் படைகள் அந்த மலையில் இருந்த குகைகளில் மாட்டி வழி தெரியாமல், அசுரர் மாயையில் சிக்கி விடுகின்றனர், அந்த தேவர்களை காக்க, முருகன் வேலை விட்டு அந்த மாயையை நீக்கி, மலையை அழித்து தேவர்களை காக்கிறார், காக்கும் முருகன் எப்படி இருக்கிறார் என்றால் “கடுமையாக” வேலை செய்கிறார், “பயமில்லாமல்” போராடுகிறார், மேலும் “துன்பம் இல்லாமல்” இந்த வேலையில் ஈடுபடுகிறார்.
இங்கே தேவர்கள் என்று சொல்லப்படுவது நம்முடைய நல்ல எண்ணங்களை, கிரௌஞ்ச மலை நம் கர்ம வினைகளை குறிக்கும், அதன் குகைகள் ஆழ் மனதில் புதைந்துள்ள ஆசைகளை குறிக்கும், இந்த ஆசைகளினால் தான் நல்ல எண்ணங்கள் இருந்தாலும், கர்ம வினைகளால் அதன் மாயைகளில் சிக்கி தவிக்கும் ஆன்மா கடவுளை அடைய முடியாமல் தவிக்கிறது. இந்த இன்னல் தீர, முருகனின் வேலே உதவுகிறது, முருகனின் வேல் அறிவையும் குறிக்கும், அதே சமயம் பராசக்தியையும் குறிக்கும், பரா சக்தியே ப்ரக்ருதியாக இருந்து மாயையை செய்வித்தாலும், அவளே முருகன் கைவேலாக இருந்தும், அறிவாக இருந்தும் சாதகனை முருகனிடம் அழைத்து செல்கிறாள், அந்த சக்தியே சாதகனின் துன்பம் தீர கர்ம வினைகளை அழிக்கிறது. சாதகன் கடவுளிடம் அன்பு மேலிட, கடவுள் தன் சக்தியின் வழியாக ஏற்படுத்திய மாயையை, சக்தியாலேயே களைந்து அந்த ஆன்மாவை தன்னுள் சேர்த்து கொள்கிறார், அதனை உணர்த்தவே இந்த பாடலில் அருணகிரிநாதர் கிரவுஞ்ச மலை வதத்தை இந்த பாடலில் வைத்துள்ளார்.
மேலும் ஒரு சாதகன் எவ்வாறு ஆன்மீக வாழ்வில் இருக்க வேண்டும் என்றும் இந்த உதாரணத்தின் மூலம் அறிவுறுத்துகிறார், முருகனை போல் தன்னுடைய பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட வேண்டும், மாயையின் வலையில் ஊசலாடினாலும் பயமில்லாமலும், துவண்டு போகாமலும், தன்னுடைய அறிவு என்னும் வேல் கொண்டு ஆழ் மன ஆசைகளை களைந்து கர்ம வினைகளை அழிக்க வேண்டும், மனம் ஊசலாடினாலும், அறிவின் துணை கொண்டு ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை சாதகனுக்கு உணர்த்தவே இந்த பாடலின் கடைசி இரண்டு வரி.
கடவுளின் குணங்களாக “நிட்டூர”, “நிராகுல”, “நிர்பயா” ஆகிய வார்த்தைகள் இங்கு பயன்படுத்த படுகிறது. லலிதா சஹஸ்ரநாமத்தில் “நிராகுலா – துன்பம் இல்லாதவள், ஆகுலம் என்றால் குழப்பம் என்று பொருள், குழப்பம் இருக்கும் இடம் இறுதியில் துன்பத்திலேயே முடியும், அவ்வாறான குழப்பம் இல்லாததால் லலிதை துன்பம் இல்லாதவள் ஆக இருக்கிறாள்”, அது போலவே ஒரு சாதகன் குழப்பம் இல்லாமல் ஆன்மீக வாழ்வில் சென்றால் தான் துன்பம் இல்லாமல் முன்னேற முடியும்.
“பயாபஹா” என்ற நாமத்தில் பக்தனின் பயத்தை போக்கி அவனை “நிர்பயனாக” ஆக்குகிறாள், அதே போல் அவள் அசுர சக்திகளிடம் கடுமையாக நடந்து கொள்வதை “விஶுக்ரப்ராணஹரணவாராஹீவீர்யனந்தி³தா – விஷுக்ரன் என்ற அசுரனை கொன்ற வாராஹி ஆக இருக்கிறாள்”, “விஶுக்ரப்ராணஹரணவாராஹீவீர்யனந்தி³தா – விஷங்கன் என்ற அசுரனைக் கொன்ற மாதங்கி ஆக இருக்கிறாள்” என்ற நாமங்களில் தீய எண்ணங்கள் மற்றும் செயல்களின் வடிவாக விளங்கிய அசுரர்களை கொன்றவள் என்று பொருள்படும்படி அனுபூதியில் முருகன் எவ்வாறு “நிட்டூரனாக” இருந்து கடுமையாக நடந்து கொண்டாரோ, அவ்வாறே லலிதையும் தீயவைகளை களைய கடுமையாக நடந்திருக்கிறாள்.
கடந்த பகுதியில் நாம் எவ்வாறு அருணகிரிநாதர் முருகனும் மற்ற தெய்வங்களும் பரபிரம்மத்தின் வேறு வேறு வடிவங்களே என்று கூறி, வேதாந்த கல்விக்கும் குருவிற்கும் உள்ள தொடர்பைக் காட்டி எவ்வாறான குருவை நாட வேண்டும் என்று காண்பித்தார், இனிவரும் பாடல்களில் அருளாளர் ஒருசாதகனின் மனோநிலை எவ்வாறு இருக்கும் என்றும் அவன் அந்த நிலைகளை எப்படி போக்கி கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

Leave a comment