செய்யுள் 12 செம்மான் மகளைத் திருடும்

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே.
விளக்கம் :
சிவந்த நிறமுடைய மானின் மகளைத் திருடும் என் பெருமான், முருகன் பிறப்பு இறப்பு அற்றவன். சும்மா இரு சொல் அற என்று என்னிடம் அவன் சொன்ன அக்கணமே இந்த உலகப் பொருள் ஒன்றையும் அறியவில்லை.

இந்த பாடலில் முதலில் சும்மா இரு சொல்லற என்ற பதத்திற்கு நாம் விளக்கத்தைப் பார்க்கலாம். மேலோட்டமாக பார்த்தால் அருணகிரிநாதர் “ அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே” என்று சொல்வதை இரு விதகமாக புரிந்து கொள்ள முடியும். ஒன்று முருகன் கூறிய மொழி அருணகிரிநாதருக்கு புரியவில்லை, அதனால் அவர் அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேன் என்று கூறுவதாக எடுத்து கொள்ளலாம், இன்னொன்று “அம்மா! பொருள் ஒன்றும் அறிந்திலனே” என்ற பதத்திலும் புரிந்து கொள்ள முடியும். இங்கே “அம்மா!” என்ற பதம் சற்று முக்கியமானது. இந்த பதமே இந்த பாடலில் மேலான தத்துவம் பொதிந்துள்ள இடம். இனி இந்த பாடலில் குறிப்பிடப்படும் நிகழ்ச்சியை சற்று நாம் பின்னோக்கி பார்க்கலாம்.
அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோபுரத்தின் மீதிருந்து தற்கொலை செய்து கொள்வதற்காக குதிக்கிறார், அப்போது அவரைக் காப்பாற்றிய முருகன், அருணகிரிநாதருக்கு உபதேசமாக “சும்மா இரு சொல்லற” என்ற வாக்கியத்தை சொல்ல, அருணகிரிநாதர் 12 வருடங்கள் சமாதி நிலையில் அமர்ந்து விடுகிறார். அவர் மறுபடியும் முருகன் வந்து சமாதி நிலையில் இருந்து கலைத்து தம் திருப்புகழை பாட வைக்கிறார், அருணகிரிநாதர் திருப்புகழ் அல்லது கந்தர் அனுபூதியை சமாதி நிலை அடைந்து பின்பு தான் பாடினாரே தவிர , திருப்புகழ் பாடி சமாதி நிலை எய்தவில்லை, அதனால் கந்தர் அனுபூதி முழுவதுமே அவரின் இறை அனுபவமும் , எவ்வாறு ஒரு சாதகனை அந்த அனுபவத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதே கந்தர் அனுபூதியின் ஒரே உயரிய நோக்கம்.
இந்த பாடலில் முருகன் என்ன உபதேசம் செய்தார் என்று நாம் புரிந்து கொள்வதற்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு எவ்வாறு உபதேசம் செய்தார் என்று பார்க்க வேண்டும். பிரம்ம தேவரின் குமாரர்களான சனகாதி முனிவர்கள், இறை நிலையை உணர சிவபெருமானிடம் சென்று விண்ணப்பித்து அவர் பாதம் பணிகின்றனர், சிவபெருமானும் தக்ஷிணாமூர்த்தி ரூபம் கொண்டு, தெற்கு நோக்கி ஒரு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து , சின் முத்திரை காட்டி இந்த முனிவர்களுக்கு உபதேசம் செய்கின்றார் , இந்த உபதேசத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன, ஒன்று குருவான சிவபெருமான் மிகவும் இளமையானவர் , சனகாதி முனிவர்களோ வயது முதிர்ந்தவர்கள் , இரண்டு இந்த உபதேசத்தில் எந்த ஒரு பேச்சோ, செய்கைகளோ இல்லை . சிவன் சும்மா இருந்தே முனிவர்களுக்கு உபதேசம் அளித்தார் , முனிவர்களும் புரிந்து கொண்டனர்.
சிவபெருமான் சும்மா இருப்பது என்பது , அவர் சமாதி நிலையில் இருப்பதாகும் , அந்த நிலையில் அவர் தியானத்தில் இருந்து , அவர் அருகில் இருந்த முனிவர்களும் சிவனின் சமாதி நிலையின் ஈர்ப்பால் தியானத்தில் சமாதி நிலை அடைந்து , அத்வைத நிலையை உணர்ந்தனர் , அதனாலேயே அங்கே பேச்சிற்கு வேலை இல்லாமல் போனது.
முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கும் , சிவபெருமான் சும்மா இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்ததைப் போலவே , தாமும் உபதேசம் செய்து சமாதி நிலையில் ஆழ்த்துகிறார்.
இந்த செய்கையில் இருந்தே தாமும் ஆறுமுக சிவம் தான் என்று சொல்லாமல் சொல்கிறார்.
இங்கு “பொருள் ஒன்றும் அறிந்திலேனே” என்ற பதத்தில் , தாம் சமாதி நிலையில் இருந்த பொழுது இந்த உலகின் பற்றுதல்கள் நீங்கி, உலக விஷயங்கள் தம்மை அணுகவில்லை ஆதலால் தாம் எந்த ஒரு உணர்வோ பற்றோ இல்லாமல் இருந்த நிலையை இங்கு விவரிக்கிறார், பின் வரும் பாடல்களில் இந்த அனுபவத்தையே பேசா அனுபூதி என்றும் குறிப்பிடுவார், மேற்கண்ட சமாதி நிலையில், கற்பவரான முனிவர்கள் , அருணகிரிநாதர் , கற்பிப்பவரான சிவபெருமான் , முருகன் , மேலும் கற்க படும் பொருளான இறை பற்றிய அறிவு , உணர்வு ஆகிய மூன்றும் ஒன்றாகி விடுகின்றது , இந்த அனுபவத்தில் தான் தாமும் இறைவனும் வேறு வேறு அல்ல என்ற அத்வைத நிலையில் சாதகன் நிலைத்து நிற்கிறான், அதன் பின்பு அந்த சாதகன் தமக்கு அத்வைத ஞானம் தந்த இறைவனின் கருணையை எண்ணி பலவாறு புகழ்கிறான், இங்கே அருணகிரிநாதர் திருப்புகழை இயற்றினார் , சமயக் குரவர்களோ தேவாரம் திருவாசகம் முதலிய பாடல்களை தந்தனர், இந்த பாடல்கள் அனைத்தும் இறை அனுபவத்திற்கு பிறகு அருளிய படியால் தான் இன்றளவும் மக்களிடம் நிலைத்து நிற்கின்றது மேலும் பயன் தருகின்றது.
இதே பாடலின் “அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேனே” என்ற பதத்தை “அம்மா !! பொருள் ஒன்றும் அறிந்திலேனே” என்று பிரித்தால் , முருகன் பரப்பிரம்ம ஸ்வரூபமாக நின்று உபதேசம் செய்தாலும் , அந்த பொருளை தம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லையே என்று அன்னையிடம் முறையிடுவதாகும் எடுத்து கொள்ளலாம். இந்த பாவத்தில் நாம் கந்தர் அனுபூதிக்கும் லலிதையின் நாமங்களுக்கும் உள்ள ஒற்றுமையை பார்த்தால் மேலும் சில புரிதல்கள் நமக்கு தோன்றும்.
இந்த பாடலில் செம்மான் மகள் என்று குறிப்பிடப்படுவது வள்ளியை, வள்ளியே இங்கு ஜீவாத்மாவின் ஸ்வரூபம், முருகனாகிய பரமாத்மா வள்ளியை கவர்வது , எவரும் அறியாமல் எதிர்பாராமல் ஒரு கணப்பொழுதில் ஒருவன் இறை நிலையை அடைவதையும் , அந்த பரமாத்மாவின் கருணையையும் காட்டும், மேலும் இறையை உணர்ந்த ஒருவனுக்கு அதன் பின் வரும் மாயையின் தடங்கல்கள் அனைத்தும் முருகன் வதம் செய்தது போன்று காணாமற் போகும் .
லலிதையின் நாமங்களில் “சிவ ஞான ப்ரதாயினி” என்ற நாமம் அவளே சிவாநுபவத்தை தருபவளாகவும் இருக்கிறாள் என்றும் , “குரு மூர்த்தி” என்ற நாமம் அவளே குருவாக இருந்து உபதேசம் செய்கிறாள் என்றும் , கடைசியாக “சிவசக்தி ஐக்கிய ரூபிணி” என்ற நாமம் அவளே சிவனாக இருக்கிறாள் என்றும் , தம்மை அடைந்தவர்களை சிவபதம் சேர்ப்பிப்பவள் அவள் தான் என்றும் கூறும் , இவ்வாறாக அவளே சாதகனை குருவாக அமர்ந்து,உபதேசம் அளித்து, அத்வைத நிலை காட்டுவதால் தானோ என்னவோ அருணகிரிநாதரும் “அம்மா ! பொருள் ஒன்றும் அறிந்திலேனே” என்று அவளிடம் முறையிட்டு இருப்பார், இதற்கு சான்றாக பல்வேறு இடங்களில் அவர் வள்ளியை முன்னிட்டு முருகனை வேண்டுவதும் , தமது திருவகுப்பின் தேவேந்திர சங்கவகுப்பில், லலிதையின் நாமங்கள் சாரத்தை கொடுத்ததில் இருந்தும் நமக்கு பல விஷயங்கள் புரிய வரும்.

Leave a comment