செய்யுள் 13 முருகன் தனிவேல் முனி

முருகன் தனிவேல் முனி நம்குருவென்று
அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.

விளக்கம் :
அது ஒரு உருவத்தில் இல்லை, அருவமாகவும் இல்லை, உள்ளது என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது, ஒருவேளை இருள் என்று சொல்ல முடியுமா என்றால் அதுவும் இல்லை, அதற்காக ஒளி என்றும் கொள்ள முடியவில்லை, இதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையே அந்த பரம்பொருள். இந்த பரம்பொருள் நிலையை உணர்வதற்கு குருவாக இருப்பது முருகனின் வேலே! அருள் உள்ளவர்களைத் தவிர இதை மற்றவர்கள் உணர முடியுமோ?

சைவ சித்தாந்தம், சாக்தம் ஆகியவைகளேயே பார்த்த நாம், இப்போது சற்று வைணவ பெரியார்களின் கூற்றையும் காண்போம். நம்மாழ்வார் பெருமாளை பற்றி கூறுகையில், கீழ்கண்ட பாடலை சொல்கிறார்

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,

காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,

பேணுங்கால் பேணும் உரு வாகும் அல்லனுமாம்,

கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

எம்பெருமான் , ஆணும் அல்ல , பெண்ணும் அல்ல , அதற்காக இரண்டு பாலிற்கும் சேராத இனமும் அல்ல, அவனை பார்க்கவும் முடியாது, அதற்காக இல்லை என்றும் கொள்ள முடியாது, ஆனால் அடியார்களுக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய வடிவெடுத்து அவர்களைக் காப்பான், இதனால் அப்பரமனை குறித்து எடுத்துரைப்பது கடினம் என்று கூறுகிறார்.
இந்த பாடலிலும் அருணகிரிநாதர், இதே விஷயத்தை தான் சொல்கிறார், இங்கும் அந்த பரம்பொருளே முருகனின் வடிவில் தோன்றி அருணகிரிநாதருக்கு அருளியது. முருகனே குருவாகவும் அமர்ந்து உபதேசம் செய்ததும், பரம்பொருள் செய்யும் செயலே ஆகும், ஆதலால் முருகன் வேறு, பரம்பொருள் என்று சொல்லப்படும் ப்ரம்மம் வேறு என்று கொள்வது அறியாமையில் கொண்டு சென்று விடும். சாதகன் தான் தேர்ந்தெடுக்கும் தெய்வ வழிபாட்டில் உண்மையான நம்பிக்கை கொள்ள வேண்டும் ,அவ்வாறு இருக்கும் பொழுது மட்டுமே அருணகிரிநாதருக்கு கிடைத்த காட்சி, அனுபவம் போன்றவை சாதகனுக்கு கிட்டும், பெரியவர்கள் பல்வேறு சமயங்களில் கூறிய கருத்து ஒன்றே, பரம்பொருள் ஒன்றே, நமக்கு முருகன், சிலருக்கு பெருமாள் மற்றையோருக்கோ சிவன் என்று வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும், மூல பொருள் ஒன்றுதான். சைவ, வைணவ சமய பேதங்களோ, ஜாதி மத பேதங்களோ மனிதன் தான் பார்கிறானே தவிர, தெய்வத்திற்கு இல்லை என்பது இந்த ஆழ்வார் பாசுரம் மற்றும் அருணகிரிநாதர் பாடலில் இருந்து தெளிவாக புரிகிறது.
இந்த பாடலில் மூன்று கருத்துகள் முன்னிலை படுத்த படுகின்றன.
1. தெய்வத்தை உணர அவரின் கிருபை வேண்டும்
2. தெய்வத்தின் உணர்தலை விவரிக்க முடியாது
3. தெய்வமே குருவாக வந்து உண்மையான சாதகனை வழி நடத்துகிறது

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்பதில், தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அவனை வணங்க கூட முடியாது என்பதும், அவனின் கருணை இருந்தால் மட்டுமே எத்தனை தவம் செய்தாலும் அவனை அடைவது கடினம் என்றும் தெரிகிறது. இந்த பாடலில் “அருள் கொண்டு அறியும் தரமோ” என்று கூறுவதில் இருந்து, தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அவனை அறிய முடியும் என்று அருணகிரிநாதரும் கூறுகிறார்.
உருவம் இல்லை, அருவம் இல்லை, ஒளி இல்லை, இருள் இல்லை, உண்டு என்று சொல்ல முடியாது, இல்லை என்று சொல்ல முடியாது என்று கூறுவதில் இருந்து இறைவனை விவரிக்க முடியாது என்ற கருத்தை சாதகனுக்கு நிறுவுகிறார்.
முருகன் தனி வேல் நம் குரு, என்று சொல்வதில் இருந்து, குருவின் கிருபை இருந்தால், இறைவனை அடைய முடியும் என்றும், அந்த குருவே சாதகனை உய்விக்க வந்த இறைவனின் வடிவம் என்றும் கூறுகிறார். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் வந்ததும், அருணகிரிநாதருக்கு முருகன் வந்ததும், காளிதாசனுக்கு பராசக்தி வந்ததும் அந்த ஒற்றை பரம்பொருளே விரும்பும் தெய்வ வடிவம் தாங்கி, குருவாகவும் வந்து உண்மை நிலையின் முன்னோட்டத்தை சாதகனுக்கு காட்டி, மேலும் அவனை ஆன்மீக வளர்ச்சி பாதையில் இட்டு செல்கிறது.
இங்கு அருணகிரிநாதர் “தனி வேல் நம் குரு” என்று சொல்வதை நாம் சற்று ஆராய வேண்டும், வேலானது பராசக்தியின் வடிவமே என்று நாம் முந்தைய பாடல்களில் பார்த்தோம், இங்கும் பராசக்தியே ஆதலால் குரு வடிவம் தாங்கி, சிவஞானத்தை சாதகனுக்கு உணர்த்துகிறாள் என்று சொல்லாமல் சொல்கிறார் அருணகிரிநாதர்.
இந்த பாடலில் அருணகிரிநாதர், குருவின் சமீபத்தினால் அவரின் கிருபையோடு இறை அனுபவம் எவ்வாறு இருக்கும் என்று அறிகிறார், ஆனால் இதுவே முடிவன்று, ஒரு தொடக்கமே, குருவாகிய முருக பெருமான் தம்முடைய கருணையினால் இறை அனுபவத்தை அருணகிரிநாதருக்கு சமாதியில் அமர்த்தி உணர்த்துகிறார், இந்த அனுபவம் முற்றிலும் முருகனின் கருணையே அன்றி அருணகிரிநாதரின் தவப்பயன் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
லலிதையின் நாமங்களான “அவ்யாஜ கருணாமூர்த்தி” – காரணங்கள் ஏதும் இன்றி அளவற்ற கருணை உடையவள் , ஸாந்த்³ரகருணா- அளவில்லா கருணை உடையவள் “நிரத்யயா” – அறிய முடியாதவள்,”பரா” – எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவள், “பரதே³வதா” – இவளே தெய்வங்களுள் எல்லாம் தெய்வம்,”கு³ருமூர்தி” – குருவாக இருப்பவள, “அமேயா” – அளவிட்டு கூற முடியாதவள், போன்ற நாமங்களிலும் கந்தர் அனுபூதியில் இந்த பாடல் கருத்துக்களே மேலோங்கி நிற்கிறது.

இவ்வாறு அருணகிரிநாதர், மிகப்பெரிய விஷயங்களை நான்கு வரிகளில் அடக்கி சாதகனை ஆன்மீக வாழ்வில் மட்டுமல்ல உலக வாழ்விலும் கந்தர் அனுபூதியை ஓதினால் உயர்வடையும் படி இந்த பாடல் வரிகளை அமைத்துள்ளார்.

கடந்த பகுதியில் சாதகனுக்கு அருணகிரிநாதர் சமாதி நிலையையும், முருகனின் உபதேசம் எவ்வாறு இருக்கும் என்றும், கடவுளின் உண்மை நிலை எவ்வாறு இருக்கும் என்றும் 13 ஆம் செய்யுளில் விளக்கிய அருணகிரிநாதர் 14 மற்றும் 15 ஆம் பாடல்களில் ஆசையை வெல்வதற்கும், முருகனின் கடவுள் தன்மையையே அதாவது அவரது கல்யாண குணங்களையும் விளக்குகிறார்.

Leave a comment