செய்யுள் 14 கைவாய் கதிர்வேல் முருகன்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்
மெய்வாய்விழி நாசியொடும் செவியாம்
ஐவாய்வழி செல்லும் அவாவினையே.
பொருள்:
கைகளிலே வேல் தாங்கிய முருகபெருமானின், கழல் அணிந்த பாதங்களைப் பற்றி, மனமே நீ ஒழியவாய், நீ ஒழிந்தால் தான் ஆன்மா நல்வழி செல்லும். உடல், வாய், கண்கள், நாசி மற்றும் செவியான பஞ்ச இந்திரியங்கள் வழியாக மனதின் ஆசைகளை மனமே நீ ஒழித்து விடுவாயாக.

12 மற்றும் 13 ஆம் செய்யுள்களில் குருவானவர் சீடனுக்கு ஆன்மீக அனுபவம் எவ்வாறு இருக்கும் என்று ஒரு முன்னோட்டம் தான் காண்பிக்கிறார், அந்த அனுபவமே இறுதியாகாது, இந்த இடத்தில் தான் பல்வேறு சாதகர்கள் இறை நிலையை அடைந்து விட்டதாக எண்ணி மாயையில் மீண்டும் அகப்பட்டு விடுகின்றனர், இந்த முன்னோட்டமான சமாதி நிலை எந்த மார்கத்தில் உள்ள ஒரு சீடனுக்கு எப்போதாவது ஏற்படுவது உண்டு, இந்த சமாதி நிலையை இன்னும் பிற யோக பயிற்சிகளாலும், செயற்கையான சில பொருட்களாலும் ஏற்படுத்த முடியும், இந்த தந்திரத்தை அறிந்த சில போலி ஆன்மீகவாதிகளால் இன்றளவும் மக்கள் பெருந்திரளாக ஏமாற்ற படுகின்றார்கள், இவ்வாறான அனுபவங்களை அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்திலும் சிலர் ஏற்படுத்தியிருக்க கூடும், அதனாலேயே என்னவோ அருணகிரிநாதர் 14 ஆம் பாடலில், உண்மையான சமாதி நிலை அடைந்த சீடன், குருவின் கிருபையால் அந்த அனுபவத்தை நேரில் பெற்றிருந்தாலும், மீண்டும் அவன் உலக மாயையில் விழுவதை தடுக்க முடியாது என்பதை உணர்த்தவே இந்த பாடலைச் செய்ந்திருக்கிறார்.
உண்மையான குரு வாய்த்தும், சமாதி அனுபவம் எய்தியும் இந்த நிலை வரக் காரணம் என்ன, அப்படியென்றால் குரு உண்மையானவர் இல்லையா, இல்லை சாதகன் தான் கண்ட அனுபவம் பொய்யானாதா, என்ற கேள்விகள் எழுகின்றது. நாம் இந்த கேள்விகளுக்கு கண்டிப்பாக விடை காண வேண்டும், விடை தெரிந்தால் தான் மேலும் உள்ள பாடல்களின் அர்த்தமும், அருணகிரிநாதர் எவ்வாறு இதை ஒரு இறை வழிபாட்டு முறையாக கந்தர் அனுபூதியை அமைத்திருக்கிறார் என்றும் புரியும்.
இந்த பாடலில் அருணகிரிநாதர் மறுபடியும் மனோ நாசத்தைத் தான் பேசுகிறார், ஏற்கனவே “கெடுவாய் மனனே” என்று 7 ஆம் பாடலில் மனோ நாசத்தை அறிமுகம் செய்த அருளாளர் மறுபடியும் இங்கு பேசக் காரணம் என்ன, 7 ஆம் பாடல் மனோநாசத்தின் ஒரு கோட்பாட்டை அதாவது theory தான், ஆனால் இந்த பாடலில் தான் அருணகிரிநாதர் நடைமுறை விளக்கத்தை அளிக்கிறார். இங்கு நாம் கவனிக்க வேண்டிய பதம் “ஒழிவாய் ஒழிவாய்” என்று இரு முறை கூறுவதை, மனம் என்பது நாம் ஏற்கனவே முந்தைய பாடல்களில் வெறும் எண்ணக் குவியல் என்பதைக் கண்டோம், ஆனால் இந்த எண்ணக்குவியலுக்கு தான் எத்துணை பலம், ஒருவரை நல்லவர் ஆக்குவதும், சமயத்தில் தீயவை செய்ய வைப்பதும் இந்த எண்ணங்களே, இந்த எண்ணங்களின் அடிப்படை மனமே, மனம் இயங்கும் வரை தான் ஒருவரை கர்ம வினை தொடர முடியும், மனம் அடங்கினால் அல்லது இல்லாமல் இருக்கும் நிலையே இறை நிலையை அடைய உதவும், முந்தைய பாடல்களில் குருவின் கிருபையால் மனம் ஸ்தம்பித்து இறை நிலையை சற்று நேரம் உணர முடிந்தது, ஆனால் ஒரு சாதகன் தன் சொந்த முயற்சி இல்லாமல் இறை நிலையினை தக்க வைத்துக் கொள்ள முடியாது, இந்த முயற்சியினை செய்யவே சரியான வழிகாட்டுதலை குரு கொடுப்பார், ஆனால் குருவே சாதகனுக்காக அந்த முயற்சியை செய்ய முடியாது, ஏன் என்றால் ஒவ்வொரு ஆன்மாவும் பல்வேறு கர்ம வினைகளைச் சுமந்து தான் பூமிக்கு வருகிறது, குருவானவர் வினைகளை ஒரே பிறவியில் போக்க வழி சொல்லுவார், மேற்கொண்டு அதற்கான முயற்சிகளை சாதகன் தான் எடுக்க வேண்டும், இந்த முயற்சியில் தளராமல் இருக்க குருஅவ்வப்போது தன் கருணையின் மிகுதியால் சாதகனுக்கு தன் தபோ பலத்தால் ஆன்ம அனுபவங்களை தருகிறார்.
இந்த பாடலில் மனம் ஒழிவது என்பது , எண்ணக்குவியலும், அந்த எண்ணங்களால் ஏற்படும் ஆசைகள் ஒழிவதுமே தான், அதனாலேயே அருணகிரிநாதர் ஒழிவாய் என்ற பதத்தை இரு முறைகள் பயன் படுத்துகிறார். கண் முதலிய பஞ்ச இந்திரியங்களும் தங்கள் பங்கிற்கு வெளி உலகில் உள்ள பொருள்கள் மீது மனதில் ஆசையைக் கிளர்ந்து எழ செய்கின்றன, கண் காணும் பொருளெல்லாம் மனம் ஆசை கொள்கிறது, தம் செவிகளில் தம்மை பற்றி நல்ல மற்றும் உயர்ந்த கருத்தே உலகோர் பேச வேண்டும் என்று நினைக்கிறது, உடலோ எப்போதும் இன்புற்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறது, நாசி எப்போதும் நல்ல வாசனைகள், மனதிற்குப் பிடித்தவாறு நுகர வேண்டும் என்று நினைக்கிறது, வாயோ மனதிற்கு பிடித்த உணவை மட்டுமே உண்டால் தான் மகிழ்ச்சி உண்டு என்று முடிவு செய்து விடுகிறது, இந்த பஞ்ச இந்திரியங்களுக்கு இயல்பிலே ஒரு உணர்ச்சியும் இல்லை, மனதின் விருப்பத்தைக் கொண்டே இந்திரியங்கள் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று முடிவு செய்கிறது உதாரணமாக ஒரே மாதிரியான நாக்கின் அமைப்பு தான் மனிதர்களுக்கு உள்ளது, ஆனால் ஒருவருக்கு இனிப்பு பிடிக்கிறது, ஒருவருக்கு காரம் பிடிக்கிறது, நாவோ இது தான் பிடிக்கும் என்ற முடிவு சொல்வதில்லை, ஆனால் மனம் மட்டுமே இந்த செயலைச் செய்ய வைக்கிறது.
இவ்வாறாக மனம் ஒன்றே இறை நிலையை அடைய தடையாக இருந்து சாதகனை வெளி உலக மாயைகளில் ஈடு பாடச் செய்கிறது, மனம் அடங்கினால் மட்டுமே, சாதகன் உள் முகம் நோக்கி இறை அனுபவம் பெற முடியும், அதனால் தான் அருணகிரிநாதர் மனத்தை ஒழிவாய் என்று சொல்கிறார், மேலும் மனதை நாம் முயற்சி செய்து அழிக்க முடியாது, அது தானாகவே அழிய வேண்டும், அது எவ்வாறு நடக்கும்? அதற்கும் அருணகிரிநாதர் வழி சொல்கிறார்.
முருகனின் வேல் தாங்கிய உருவம், கழல் அணிந்த திருவடி இதை தியானம் செய்ய மனம் மெல்ல அழியும், ஆசைகள் எவ்வாறு பஞ்ச இந்திரியங்கள் மூலம் மனதிற்குள் வந்ததோ, அவை வந்த வழியிலேயே சென்று விடும், அதற்காகவே இந்த பாடல், இறைவனின் திருவடியின் மகிமை கூறவே இந்த பாடல், சாதகனை சரியாக வழிநடத்தவே இங்கு மனதை ஒழித்து ஆன்மாவை “உய்வாய்” என்று கூறுகிறார்.
லலிதையின் சஹஸ்ரநாமங்களில் “மனோ ரூபேக்ஷு கோதண்டா” என்ற நாமம், நம் மனதை லலிதையின் பால் சரணாகதியாக அர்ப்பணிக்க அவளே மனதை கரும்பைப் போல் இனிக்க செய்து வாழ்வை உய்விப்பாள் என்ற பொருள் கொண்டு வரும், மனமே அவளின் ஆயுதமாகவும் இருப்பதால், அவள் நம் மனதை நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு செய்கிறாள், மேலும் “பஞ்ச தன் மாத்ர சாயகா” என்ற நாமத்தில் நம் பஞ்ச இந்திரியங்களே அவளின் பஞ்ச மலர் அம்புகளாக இருக்கின்றது, இங்கும் அருணகிரிநாதர் பஞ்ச இந்திரியங்கள் வழியாகவே கர்ம வினை தொலைய வேண்டும் என்று கூறுகிறார், மனமும் உடலும் லலிதையின் சரணாகதி ஆகும்பொழுது, அவளே சாதகனுக்கு குருவாக அமர்ந்து மனதை திருத்தி, இந்திரியங்களை ஒழுங்கு படுத்தி சாதகனை தன்னுடைய உயர் வடிவான பர தியானத்தில் ஆழ்த்தி முடிவில் இறை நிலைக்கு உயர்த்தி, சாதகனை தன்னுடன் இரண்டற கலக்கிறாள். இவ்வாறு அனுபூதியும் லலிதையின் வழிபாடும் வேறு வேறு விஷயங்களை சொல்லவில்லை என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி.

Leave a comment