செய்யுள் 15 முருகன் குமரன் குகன்

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.

விளக்கம் : முருகா!, குமரா! குஹா! என்று நான் என்று கண்களில் நீர் மல்க உன் மந்திரங்களை கூற போகிறேன்? அந்த உணர்வை நீ எப்போது கொடுப்பாய். விண்ணுலகம் , மண்ணுலகம் இரண்டிலும் நீக்கமற நிற்கும் குருவே, இரு லோகத்தினராலும் வணங்க படுபவரே, எட்டு திவ்ய குணங்களை உடைய பரப்ரஹ்ம பொருளே.

“ஆடும் பரிவேல்” என்ற பாடலில் அருணகிரிநாதர், சாதகனுக்கு நாம ஜெபத்தை அறிமுகம் செய்தார், பின் வந்த பாடல்களில் வேதாந்த விளக்கங்கள் , சமாதி நிலை , குருவின் நிலை,குரு என்பவர் யார் ,உண்மை குருவை எவ்வாறு கண்டு பிடிப்பது போன்றவற்றையும்,குருவின் மூலமாக மெய்ப் பொருள் விளக்கம் மந்திர உபதேசம் எவ்வாறு கிட்டும் என்றும் விளக்கினார். இந்தப் பாடலில் மீண்டும் மந்திர ஜபத்தை பற்றி பேசுகிறார்.இதற்கு காரணம் என்ன? சாதகன் ஆரம்பத்தில் செய்த ஜபமானது உணர்வு பூர்வமான ஜபம் அல்ல, அவன் இறை மீதிருந்த பற்றால் , இறையின் கருணையால் , குருவின் கிருபையால் மந்திர உபதேசம் பெறுகிறான் , ஆனால் அவன் செய்த ஜபமோ எந்திர கதியில் தான் இருந்தது , அங்கு இறைவனின் மீது ஒரு அன்பு இருக்கவில்லை ,மாறாக இறையின் மீது ஒரு பயம், ஏதோ எட்டாத ஒரு பொருள் போன்ற மனப்பாங்கே இருந்தது . ஆனால் குருவின் கிருபையால் வேதாந்த பொருள் புரிய ஆரம்பிக்கும் போது , இறையின் கருணை புரிய தொடங்கும் போது பயம் மறைகிறது , மாறாக தீராக் காதல் உருவாகிறது, இந்த காதலைத் தான் சம்பந்தர் “காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என்று குறிப்பிடுகிறார் . இங்கும் காதலால் கசிய தான் வேண்டும், இங்கு எப்போதும் ஒரு செயற்கையான தேவை இருப்பதில்லை, மாறாக சாதகன் இறையின் செயலை நினைக்க நினைக்க, நாமத்தை ஓத ஓத மனம் எனும் கல் உருகி, கண்கள் வழியாக வினை வழிந்தோட வேண்டும்.
முந்தைய பாடலில் “மெய் வாய் விழி நாசியொடு” என்ற வரியில் இதே தத்துவம் தான் வருகிறது, இறை நாமம் ஓத, கண்கள் நீர் சொரிய , வாய் நாமத்தால் இனிக்க, செவிகள் அவன் புகழை என்றும் கேட்க,மெய் தன்னை மறந்து அவன் திருவடி தியானத்தில் அமர, நாசியின் வழியாக யோக பயிற்சிகள் தானே அரங்கேறும். இந்த நிலை தான் சில சம்பிரதாயங்களில் “பாவ சமாதி” என்று குறிப்பிட படுகிறது. இதே நிலை தனக்கு எப்போது வாய்க்கும் என்று சாதகன் இறைவனிடம் இறைஞ்சுகிறான்.
இந்த பாடலில் மூன்று நாமங்கள் பிரதானப் படுத்த படுகின்றன அவை முறையே முருகன், குமரன், குகன். முருகனுக்கு எத்தனையோ நாமங்கள் இருக்க ஏன் இந்த மூன்று நாமங்களை மட்டும் அருணகிரிநாதர் குறிப்பிட வேண்டும், சரவணபவ, வச்சத்பூவே போன்ற மந்திரங்களை குமார தந்திரமும் ஆகமங்களும் பெருமை வாய்ந்ததாக கூறப்படும் போது, அருணகிரிநாதர் அது தெரியாமலா இந்த மூன்று நாமங்களை பெருமை படுத்தி இருப்பார்.
சைவ சித்தாந்தத்தில் பஞ்சாக்ஷரமான “நமசிவய” என்ற மந்திரம் ஸ்தூல பஞ்சாட்சரம் என்று அழைக்கப்படும், இந்த மந்திரம் உலக இன்பங்கள் அனைத்தையும் தர வல்லது, “சிவயநம” என்ற மந்திரம் சூட்சும பஞ்சாட்சரம் என்று அழைக்க படும், இந்த மந்திரம் மோட்சத்திற்கான வழி. இன்னும் மூன்று பரிணாமங்களில் பஞ்சாட்சரமானது “சிவய” காரண பஞ்சாட்சரம் எனவும், “சிவ” மஹா காரண பஞ்சாட்சரம் எனவும், “சி” முக்தி பஞ்சாட்சரம் எனவும் அழைக்கப்படும். இந்த மந்திரங்களே குருமுகமாக முறையான தீட்சையில் கொடுக்க படுகிறது.
இதே போல் “முருகன்” என்ற நாமம் அடியவர்களின் உலக தேவைகளை பூர்த்தி செய்கிறது, “குமரன்” என்ற நாமம் மனம் சார்ந்த ஆசைகளை களைந்து, வேண்டியவற்றை கொடுத்து, வேண்டாதவற்றை கெடுத்து சாதகனை ஆட்கொள்கிறது, இறுதியாக “குகன்” என்ற நாமம் இதய குகையில் உறையும் பரமாத்மாவான முருகனை உணரச் செய்கிறது, இந்த உணர்தல் அவ்வப்போது சில வினாடிக்கும் குறைவான நேரங்களில் நடக்கும் போது கண்கள் கசிந்து உருகி மனம் வெளியே செல்கிறது, மனதின் பாரம் குறைந்து உடலே லேசாக மாறுகிறது, இந்த அன்பு மிகுதி எப்போது கிடைக்கும் என்றே அருணகிரிநாதர் சாதகன் பால் இறைவனிடம் கோரிக்கை வைக்கிறார்.
இந்த பாடலில் மேலும் இரண்டு வார்த்தைகள் கவனிக்க பட வேண்டியவை அவை “எண்குண” மற்றும் “பஞ்சரன்”.
இறைவனின் எட்டு கல்யாண குணங்கள் ஆனவை, கீழ்வருமாறு, முருகனை வழிபடுவோர் இந்த குணங்களை நிச்சயம் பெறுவார்
1. யாரையும் சாராதவன் – சுதந்திரன் – லலிதையின் நாமத்தில் “ஸ்வதந்திரா, நிராதாரா” என்ற நாமங்கள் இதே பொருள் கொடுக்கும்
2. தூய உடல் உடையவன் – இறைவன் எப்போதும் தூய உடலை உடையவன், இங்கு தூய்மை என்பது கர்ம வினை இல்லாத உடல், இந்த உடலே பூஜிக்கத்தக்க உடல்- லலிதையின் நாமத்தில் “அநவத்யாங்கி”, “பூஜ்யா” என்ற நாமங்கள் இந்த பொருள் கொடுக்கும்
3. இயற்கையாகவே எல்லாம் உணர்ந்தவனாக இருப்பவன்,
4. இயற்கையின் உணர்வு மேலிட இருப்பவன் – “சர்வக்ஞா” என்ற லலிதையின் நாமம் இதேயே குறிக்கும்
5. மாயை நீங்கிய நிலையில் இருப்பவன் – லலிதையே “மாயை” அவளே எல்லாவற்றிற்கும் காரணம், மாயை என்பதே இறைவனின் கைப்பாவை தான், மாயை இறைவனை என்றும் நெருங்க முடியாது , படைத்தவனை விஞ்சும் தன்மை படைக்கப்பட்ட பொருளுக்கு என்றும் கிடையாது
6. எல்லையில்லா கிருபை உடையவன் – “அவ்யாஜ கருணா மூர்த்தி” என்ற நாமம் லலிதை எல்லையில்லாக் கருணை கொண்டவள் என்று கூறும்
7. முழுமையான ஆற்றல் பெற்றவன் – “சர்வ சக்தி மயீ” என்ற நாமம் எல்லா ஆற்றலுக்கும் காரணம் லலிதை என்றே கூறும்
8. எல்லையற்ற ஆனந்தம் கொண்டவன் – “பரமானந்தா” என்ற நாமம் லலிதையே ஆனந்தத்தின் மொத்த வடிவாகவும், அவளுக்கு மேல் ஓர் ஆனந்த நிலை என்றே கூறும்.
பஞ்சரன் என்று அருணகிரிநாதர் கூறும் பதம், முருகனே சத்- சித்- ஆனந்த வடிவான பரம்பொருள்.லலிதையின் “சச்சிதானந்த ரூபிணி” என்ற நாமம் இதே பொருளைக் கொண்டே வரும். அருணகிரிநாதரும் ஸ்ரீ வித்யா கிரமமும் ஒரே பரம்பொருளை நோக்கியே சாதகனை இட்டுச் செல்கின்றனர். இவ்வாறு லலிதா சஹஸ்ரநாமமும் கந்தர் அனுபூதியும் ஒரே இறைவனை அடைய ஒரே மாதிரியான வழிகளைக் காட்டுகிறது.

Leave a comment