செய்யுள் 16 பேராசை எனும் பிணியில்

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முதுசூர்பட வேல் எறியும்
சூரா சுரலோக துரந்தரனே.

விளக்கம் : ஆசை எனும் நோயில் நான் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறக்கின்றேனே, இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து, சூரபத்மனைக் கொன்று தேவலோகத்தைக் காத்த பெருமானே நீதான் என்னையும் காக்க வேண்டும்.

15 ஆம் செய்யுளில், பாவத்தோடு நாம ஜபம் செய்ய வேண்டும் என்ற வரத்தைக் கேட்ட அருணகிரிநாதர், இந்த பாடலில் பேராசை பற்றி பேசுகிறார். ஆசைக்கும் பேராசைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இங்கு பேராசை என்பது ஒருவன் தான் செல்வந்தன் ஆக வேண்டும் என்பதோ அல்லது நிறைய சொத்து, வீடு போன்றவற்றை சேர்க்க வேண்டும் என்று நினைப்பதோ அல்ல, சனாதன தர்மம் என்றுமே உலக வாழ்வு என்பது வேண்டவே வேண்டாம் என்று கூறிய வாழ்க்கை முறை அல்ல, மாறாக இக, பர சௌபாக்கியம் என்று இரண்டையுமே கடவுளிடம் வேண்டிய ஒரு தர்மமாகவே இருந்துள்ளது, இன்னும் இருக்கும்.

“வசனமிக வேற்றி” என்ற திருப்புகழில் அருணகிரிநாதர் “இசைபயில் ஷடாக்ஷர மதாலே இகபரசெள பாக்ய மருள்வாயே” என்று கேட்கிறார் , அப்படியென்றால் இகம் என்று குறிப்பிட படும் இந்த பூமியில் சௌபாக்கியம் வேண்டும் என்று கேட்பதும் ஆசை என்ற வட்டத்திற்க்குள் வந்து விடுமா? இதை நாம் சற்று ஆராய வேண்டும், இந்த பாடலில் அருளாளர் பேராசை எனும் பிணி என்று தான் கூறினாரே தவிர , ஆசை என்ற பதத்தை உபயோகிக்கவில்லை, ஆசை என்ற உந்துதல் இல்லை என்றால் இந்த உலகில் எந்த செயலும் நடைபெறாது, அப்படியானால் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்? இதை அறிந்தால் தான் இறைவனை அடையும் வழி சற்று தெளிவு பெரும் , “கரவாது இடுவாய்” என்ற பாடலில் ஆசை படவேண்டாம் என்ற அருணகிரிநாதர் இந்த திருப்புகழில் ஆசை படலாம் என்று கூறியது போல தெரிவது சற்று குழப்பமடைய செய்யலாம் , ஆனால் அருணகிரிநாதர் ஆசை என்று உபயோகப்படுத்தி அதனால் தமக்கு துன்பம் நேர்ந்தது என்று சொல்லும் பாடல்கள் அனைத்திலும் பேராசையை மட்டுமே சொல்கிறார். பேராசை என்பது ஆழ்மனத்தின் புதைந்துள்ள கர்மவினைகள், எத்துணையோ பிறவிகளின் பதிவுகள், இந்த பூமியில் சௌக்கியமாக வாழ நினைப்பது ஆசை அன்று, ஆனால் எல்லாம் தமக்கே, நான் தான் எல்லாம், எனக்காகவே என் சுற்றம், என் விருப்பப்படியே எல்லாரும் நடக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதுவும், நமக்கு நாமே விலங்கிட்டு நம்முடைய சுதந்திரத்தை கெடுத்து கொள்வதும் இந்த ஆழ் மன ஆசைகளினால் தான், அருணகிரிநாதர் முன்னர் சொன்னது ஸ்தூலமான ஆசைகளை, இந்த பாடலில் சொல்வது ஒரு படி உள்சென்று மனதில் உள்ள சூட்சுமமான ஆசைகளை, பின்வரும் “தூசா மணியும்” என்ற பாடலிலும் “ஆசா நிகளம்” என்று ஆசை விலங்கை பற்றி பேசுவார், அது ஆசையின் மூலமான கர்ம வினைகளை பற்றி வரும். இந்த பாடலில் அருணகிரிநாதர் சொல்வது மனதின் எண்ணற்ற பதிவுகளால் உண்டான தேவையில்லாத ஆசைகளை, அதுவே பேராசை எனப்படும், இந்த பேராசையானது ஆன்மீக வாழ்வில் உள்ளவர்களை அதி பாதாளத்தில் விழ செய்யும், உதாரணமாக சில மந்திரங்களை சற்று நாட்கள் ஜபம் செய்து சித்தி பெற்றவர்களுக்கு மூன்று காலங்களையும் உணர முடியும், சிலர் தேவதைகளோடு பேச முடியும், சில மந்திரங்களால் பரிவார தேவதைகளான பூத, வேதாள கணங்களைக் கொண்டு சில காரியங்களை சாதிக்க முடியும், மந்திரத்தில் விபூதி வரவழைப்பது, மனதில் உள்ளதை படிப்பது போன்ற சித்திகள் கைவரப் பெறுவார்கள், அதேபோல் எந்த மந்திர ஜபம் செய்தாலும், நெறிமுறைகளை பின்பற்றி செய்யும் சாதகனுக்கு சில சித்திகள் கைவரப்பெறும், ஆனால் அதைக் கொண்டு உலக வாழ்வில் வித்தை காட்டி, பொருள் ஈட்டியோ, மக்களை தன் வசம் தேவை இல்லாமல் இழுப்பதோ ஒரு சாதகன் செய்வானாயின், அது ஆன்மீக வாழ்விற்கு ஒரு முற்று புள்ளியாகி விடும், இவ்வாறு செய்யும் சாதகர்களை குரு என்று நம்பி ஏமாறும் மக்கள் ஏராளம். இவ்வாறான பேராசை என்ற நோய் தம்மை அணுகாமல் காக்க வேண்டும் என்றுதான் அருணகிரி நாதர் கேட்கிறார், மாறாக உலக வாழ்வே வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. பாம்பன் ஸ்வாமிகளும் அவருடைய குமாரஸ்தவத்தில் “ இக பர பதயே நமோ நமஹ” என்று இரண்டு வாழ்வையும் கேட்கிறார்.
அருணகிரிநாதர் இங்கு கிரவுஞ்ச மலையை அழித்த வேலவனை தம்மைக் காக்குமாறு அழைக்கிறார், பேராசை என்பது மலை போன்று எழுந்து நின்று, அகந்தையினால் தான் இவ்வாறு செய்கிறோம் என்ற உண்மையை மறைக்கிறது, மேலும் இந்த ஆசையே அகந்தையையும் மறைத்து அதற்கு மேலும் வலு சேர்க்கிறது, இவ்வாறாக வளர்க்க பட்ட அகந்தை பல பிறவிகளாக ஆன்மா இறைவனை அடையாமல் தடுக்கிறது, மாறாக இறைவனே வந்து ஆசையை அழித்து அகந்தையை களைந்தாலொழிய ஆன்மா கடைத்தேறாது, அதனாலேயே அருணகிரிநாதர் கிரவுஞ்ச மலையை வேல் கொண்டு தகர்த்த வேலவனை, தன்னுடைய வேலால் தம் ஆசை மலையை தகர்க்க சரணடைகிறார், சரணாகதி தத்துவம் இங்கே மெதுவாக அரங்கேறுகிறது.
இந்த பாடலில் அருணகிரிநாதர் ஓரா வினையேன் என்று சொல்வது, வினைகள் தம்மை எப்போதும் சூழ்ந்து இருக்கும் நிலையை, இந்த வினைகள் எப்பொழுதுமே சூழக்காரணம், ஆசைகளினாலேயே, ஒருவனின் உடலில் ஏற்படும் நோய், உடல் இருக்கும் வரை மட்டுமே, மனதில் ஏற்படும் குறை கூட களைவதற்கு வழி உண்டு, ஆனால் “உழல” என்ற சொல்லில் பேராசையை ஆனது பல பிறவிகள் தம்மை சூழ்ந்து வருவதை சொல்கிறார், ஆசை மட்டும் தேவி மகாத்மியத்தில் கூறும் “ரக்தபீஜன்” என்ற அசுரனைப் போல, எவ்வாறு ரக்த பீஜன் தன்னுடைய ஒவ்வொரு துளி உதிரத்தில் இருந்து, தம்மை போலவே பராக்ரம மான அசுரனை உண்டு பண்ணினானோ , ஆசையும் ஒன்று தீர்ந்தால் அதை போலவே வலிமையான மற்றுமொரு ஆசையை உண்டு பன்னியே செல்கிறது, இவ்வாறு பல பிறவிகள் சேர்த்த இந்த ஆசை கடலே கர்ம வினைக்கு மூல காரணமாக அமைகிறது, அபிராமி அந்தாதியில் பட்டர் “ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி” என்று இதே பதத்தை பயன் படுத்துகிறார்.ஆகவே ஆசையானது ஒரு ஆன்மாவை பல பிறவிகள் தொடர்ந்து வந்து துன்பம் தரும் பண்புடையது என்பதை நிரூபித்து, நாம ஜெபத்தில் பாவனை சேர்த்து, ஆசை களைய முருகனிடம் சரணாகதி செய்வதே இந்த பாடலில் அருளாளர் சொல்லும் உட்கருத்து.
லலிதையின் நாமங்கள் ஆயிரத்தில் “நிஷ்காமா” என்ற நாமம் லலிதை ஆசைகள் அற்றவள், அவளை துதித்தால் ஆசைகள் நமக்கும் இல்லாமல் போகும் என்ற பொருளிலும், பரப்ரஹ்மம் ஆசைகள் அற்ற ஒரு வஸ்து என்ற பொருளிலும் இந்த நாமம் வரும். இந்த நாமம் “பர சௌபாக்கியம்” அருளும். அதே போல் “காமதாயினி” என்ற நாமம் ஆசைப்பட்டதை எல்லாம் அருள்பவள் என்ற பொருளிலும், ஆசை படுவதை நாம் மற்றவர்க்கு கொடுத்து விட முடியும் என்ற பொருளிலும் வரும், இந்த நாமம் “இக சௌபாக்கியம்” அருளும் நாமம், இவ்வாறு அனுபூதியும் லலிதையின் நாமங்களும் இக பர சௌபாக்கியம் அருள்வதை நாம் காண முடிகிறது

Leave a comment