யாமோதிய கல்வியும் எம்மறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.
விளக்கம் : நாம் கற்ற கல்வி, அறிவு எல்லாமே வேலவன் தந்த கொடை, அதனால் இந்த பூவுலகின் மீதுள்ள மையல் போய், உண்மை பொருளான பரமாத்மாவை எப்போதுமே நினைத்து கொண்டும், இறைவனின் புகழை பாடிக்கொண்டும், அவரின் நாமத்தை ஜபம் செய்து கொண்டும் எப்போதும் இருப்போமாக.
ஆன்மீக வாழ்வில் “ஸ்வாத்யாயம்” என்று ஒரு ஒழுக்கம் உண்டு, அதாவது ஆன்மீக விஷயங்களை, புத்தகங்களை தினந்தோறும் ஒரு சாதகன் படிக்க வேண்டும், மேலும் இவ்வளவு நாட்களாக குருவானவர் அவனுக்கு பல்வேறு ஆன்மீக தத்துவங்களை விளக்கியுள்ளதை நாம் சென்ற பாடல்களிலும் பார்த்தோம், இவ்வாறாக பெற்ற கல்வியும், தாம் படிக்கும் புத்தகங்களும் சாதகனுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு மாறுபட்ட மற்றும் மேம்பட்ட புரிதலையும் கொடுக்கும், அதனாலேயே சனாதன தர்மத்தில் எந்த ஆன்மீக நூலையும் பல முறை ஓதும் பாராயண நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக பெற்ற கல்வியை சாதகன் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
இனியே – இனிமேல்
பூமேல் மையல் போய் – இந்த மாயம் கொண்ட உலகிலுள்ளது எல்லாம் உண்மை என்று நம்பி வாழும் மயக்கத்தை விட்டு
அறம் மெய் புணர்வீர் – இந்த பிரபஞ்சத்தின் அத்துணை படைப்புகளுக்கும் ஆதாரமாய் இருப்பது ஒரே பரம் பொருளே, அந்த ஒற்றை பொருளே பல்வேறு நாம ரூப பேதங்கள் கொண்டு உலகில் எல்லாமுமாய் இருக்கிறது என்ற புரிதலை கொள்வீராக
நாமேல் நடவீர் நடவீர் – அப்படிப்பட்ட பரம்பொருளின் புகழை எப்போதும் பாடிக்கொண்டு, அந்த இறைவனின் (முருகனின்) நாமத்தை ஜபித்து கொண்டு இருப்பீராக
ஆன்மீக வாழ்விலும் சில சங்கடங்கள் உண்டு, சிலர் தமக்கு தெரிந்த உண்மையான தத்துவ விளக்கங்களை பிறருக்கு சொல்லிக் கொடுக்க மாட்டார்கள், இதுவும் ஒருவிதமான அகந்தையே, பின்வரும் பாடல்களில் “கரவாது கல்வி உளார்” என்று அருணகிரிநாதர் இதை கூறுகிறார். இவ்வாறாக இருப்பவர் பின்சென்று என்னதான் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டாலும், நமக்கு உண்மை தெரிய போவதில்லை அதனாலேயே அருணகிரிநாதர் “தாமே பெற வேலவர் தந்ததனால்” என்று கூறுகிறார், நமக்கு வேண்டிய கல்வியை நமக்கு வேண்டிய நேரத்தில் நம் பக்குவம் அறிந்து சரியாக போதிப்பது முருகன் ஒருவனாக மட்டுமே இருப்பார். அதனால் “தாமே” என்ற பதத்தை இங்கு வைக்கிறார்.
“தாமே” என்ற சொல்லுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு, சாதகனுக்கு முருகனே “தாமே” – அதாவது தன்னையே பொருளாக கொடுக்கிறார். இந்த பொருளிலேயே மாணிக்கவாசகர் “தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை” என்ற பொருள்பட பாடுகிறார். அபிராமி பட்டரும் “எனக்கு வம்பே பழுத்த படியே” என்று அபிராமியிடம் சொல்கிறார். இறைவனை நோக்கி தூய அன்பில் சாதகன் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனை அவனை நோக்கி மிகவும் வேகமாக இழுக்கிறது, பல சமயங்களில் இறைவன் வலுவில் வந்து சாதகனை ஆட்கொள்கிறார், அவ்வாறு தான் அருணகிரிநாதரையும் முருகன் வலுவில் வந்து தடுத்து ஆட்கொள்கிறார். அதனால் தான் “தாமே பெற வேலவர்” என்ற பதம் இங்கு வருகிறது. இதற்கு இன்னொரு விளக்கமும் உண்டு, சீடன், குரு, தெய்வம் மூன்றும் வேறு வேறு அல்ல, அதனால் குரு கொடுக்கும் மந்திரத்தை எப்போதும் ஜபம் செய்யும் சீடன், குருவைப் போலவே அந்த தெய்வத்தை தானும் அடைகிறான், தானும் தெய்வநிலை எய்துகிறான், இங்கு தெய்வ நிலை என்பது வேதங்கள் கூறும் மகா வாக்கியங்களை தான் உண்மை என்று உணர்வது, தானே பரமாத்மா என்று உணர்வது
இவ்வாறாக அநுபூதியுள் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளது.
லலிதையின் நாமங்களில் “ஆத்ம வித்யா” – தானே ஆத்ம ஞானமாக இருப்பவள், “மகா வித்யா” – விதைகளுக்கெல்லாம் பெரிய வித்தையாய் இருப்பவள் , “ ஸ்ரீ வித்யா” – புனிதமான ஞானமாக இருப்பவள், “சுத்த வித்யா” – வேதங்கள் கூறும் மகா வாக்கியங்களின் ஒளிரும் ஞானமாக இருப்பவள்”
“சிவஞான ப்ரதாயினி” – லலிதையே குருவாக இருந்த சிவ ஞானத்தை அருள்பவள், அதன் மூலம் தம்மையே தம் அடியார்க்கு கொடுப்பவள். லலிதையின் மேற்கண்ட நாமங்கள் இந்த பாடலில் வரும் “தாமே பெற வேலவர் தந்ததனால்” என்ற வரிக்கு ஏற்ற பொருள் கொண்டு வரும்.
மேலும் “நாம பாராயண ப்ரீத்தா” – இறைவனின் நாமங்களை பாடுவதில், ஓதுவதில் பிரியம் உள்ளவள் என்ற நாமம் “நாமேல் நடவீர்” என்ற வரிக்கு பொருள் தந்து பறைசாற்றும்.
இவ்வாறாக லலிதா சஹஸ்ரநாமமும் கந்தர் அனுபூதியும் ஒரே பரம்பொருளை அடைய சாதகனுக்கு ஒரு வழி அமைத்துக் கொடுக்கிறது, இந்த இரு கிரந்தங்களையும் பல முறை பாராயணம் செய்யும் ஒரு சாதகனுக்கு மெய்ப்பொருள் விளக்கத்தை தானே புரிய செய்து, இறைவனை அடைய வழி வகுக்கிறது.
கடந்த பகுதியில் ஆசையை பற்றியும் , உண்மைக் கல்வி என்ன என்றும் பார்த்தோம்,இந்த பகுதியில் ஆத்ம தியானம் மற்றும் உண்மையான செல்வம் என்ன என்றும் அருணகிரிநாதர் விளக்குவதை பார்க்கலாம் .
