செய்யுள் 18 உதியா மரியா உணரா

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
வதிகாவல சூர பயங்கரனே.
விளக்கம் :
பிறப்பு – இறப்பு இல்லாதவரும் , உணரவோ மறக்கவோ முடியாதவரும் பிரமானாலும் பெருமாளும் அறிய முடியாத பரிசுத்தமான சிவ பெருமானின் புதல்வரே , ஒப்புயர்வற்றவரும் , மிகப்பெரியவரும் , பயமற்றவரும் , இந்திரனின் உலகமான அமராவதியின் காவலரும், சூர பத்மனுக்கு மரண பயத்தை கொடுத்தவருமான முருக பெருமானே.

அருணகிரிநாதரின் காலத்தில் சைவ , வைஷ்ணவ சமயங்களிடையே கருத்து வேறுபாடுகளும் , கௌமார சமயமும் தனியாக பிரதானமாக இருந்தது, இந்த பாடலில் சிவனாரை முழுமுதற் தெய்வமாக அறிமுகம் செய்து, அவரின் புதல்வரான முருகப்பெருமானும் ஆறுமுக சிவம் என்றும் , பரம்பொருள் பல வேறு ரூபங்களில் உள்ளது என்றும் முன்னிறுத்துகிறார். அருணகிரிநாதர் தம்திருப்புகழ் பாடல்களிலும் சைவ, வைணவ,சாக்த, காணபத்ய மற்றும் கௌமார சமயங்களை இணைத்தே பாடியிருக்கிறார். அருளாளர் இவ்வாறு எல்லா சமயங்களையும் இணைத்து பாடுவது இறைவனின் நாம ரூப பேதங்களைக் கடந்து, எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று தான் என்ற கோட்பாட்டை நிலை படுத்தான். யார் யாருக்கு எந்த ரூபமும் நாமமும் பிடிக்கிறதோ, அந்த ரூபத்திலேயே அந்த பரம்பொருள் சாதகனை சென்று ஆட்கொள்கிறது. அதற்காக நான் கண்ட ரூபமே, நான் கொண்ட நாமமே பிரதானம் என்று ஒரு சாதகன் சொல்ல முடியாது, இறைவனை உணர்ந்த ஒரு சாதகன் அவ்வாறு சொல்லவும் மாட்டான், மாறாக எந்த ரூபத்திலும் இறைவனை அவனுடைய குணங்களை அனுபவித்து ஆனந்தம் அடைவான். அந்த மாதிரியான ஒரு ஆனந்த அனுபவமே இந்த பாடலில் அருணகிரிநாதரால் பெற பெற்று சாதகர்களுக்கு ஐமுக சிவமும் அறுமுக சிவமான முருக பெருமானும் ஒன்றென்று நிலை நிறுத்துகிறார்.
இறைவனின் குணங்கள் பல்வேறு இடங்களில் கந்தர் அனுபூதியில் காணக்கிடைக்கிறது. இந்த பாடல் முழுக்கவே இறைவன் புகழ் என்றே சொல்லலாம், அதனாலேயே இந்த பாடல் தனித்துவம் பெற்ற பாடல். இறைவன் மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணம், அவருக்கு பிறப்பு இறப்பு என்ற ஒன்று இல்லை, மேலும் இறைவனை முழுவதுமாக உணர்வதோ, அவரின் செய்கைகளுக்கு அர்த்தம் காண்பதோ இயலாது, இதையே “பேசா அனுபூதி” என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
ஒரு சமயம் பிரமனும், விஷ்ணுவும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று விவாதிக்க, அதற்கு முடிவு எட்ட முடியவில்லை, அதனால் இருவரும் யுத்தம் செய்து யார் பெரியவர் என்று முடிவெடுக்க எத்தனித்தனர். இந்த யுத்தமும் பல நாட்கள் ஆகியும் யாரும் வெற்றி அடையவில்லை, இதைக் கண்ட சிவனார், இந்த பிரச்சனைக்கு தீர்வு செய்ய வேண்டி, ஒரு ஜோதியே உருவாக விண்ணிற்கும் மண்ணிற்கும் நின்றார், இவரின் அடியையோ முடியையோ யார் முதலில் காண்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராக கருதப்படுவார் என்று பிரமனிடமும், விஷ்ணுவிடமும் கூற, பிரமன் அன்னப்பறவையாக உருவெடுத்து மேலே பறந்து சென்று முடியைக்காணாவும், விஷ்ணு வராஹமாக உருவெடுத்து மண்ணிற்கு கீழே செல்லவும் ஆரம்பித்தனர், இவர்கள் பலகாலம் இவ்வாறு சென்றும் இறைவனின் ஆதி அந்தத்தை காண முடியவில்லை, முடிவில் சிவன் இவர்களுக்கு காட்சி தந்து இருவரின் அகங்காரத்தையும் நீக்கி, பின்பு பழையபடி ஜோதியாகி, பின் குன்றி இப்போதிருக்கும் திருவண்ணாமலையாக மாறினார், இதுவே “அருணாச்சலம்” என்று கொண்டது, யாராலும் எட்ட முடியாத அதாவது அடி முடி காண முடியாததால் “அண்ணா” மலை என்றும், அடியவர்களின் “ருணம்” அதாவது கர்மவினைகளை களைவதால் “அருணாச்சலம்” என்றும் இந்த இடம் பெயர் பெற்றது, அப்படிப்பட்ட அருணாச்சலத்திலே தான் முருகன் அருணகிரிநாதருக்கு முதன் முதலில் காட்சி தருகிறார், மேலும் சிவனே முருகனாக வருவதும், எவ்வாறு அண்ணாமலையாருக்கு ஆதி அந்தம் காண இயலவில்லையோ அவ்வாறே இந்த அறுமுகசிவத்திற்கும் ஆதி அந்தம் இல்லை.
சிவனிடம் பெற்ற வரத்தால், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் தேவலோகத்தை கைப்பற்றி உலகிற்கும் பெருந்துன்பம் விளைவித்தனர், அவ்வாறு இருப்பவர்களை அழிக்க பரம்பொருளான சிவம் தன்னுடைய விமர்ச ரூபமான சக்தியை தோன்ற செய்து அந்த சக்தி வாயிலாக கந்த பெருமானை உலகிற்கு தந்து, அந்த சக்தியையே ஆயுதமாகவும் ஆக்கி, சூரபத்மனை அழிக்க அனுப்புகிறார், சிவன் தானே நேரில் சென்றால் சூரர்களை அழித்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கு தந்த வரத்தைக் காப்பாற்ற தான் செல்லாமல் தன் சக்தியை உருவாக்குகிறார் அதனாலேயே அவர் “விமலன்” மாசில்லாதவராக இருக்கிறார்.
முருகப்பெருமான் தன்னிடம் அடைக்கலம் ஆன தேவர்களைக் காத்து சூரபத்மனை அழித்து அமராவதியைக் காக்கிறார், இங்கு பெருமானின் நல்லதைக் காத்து தீயதை அழிக்கும் குணம் சொல்லப்படுகின்றது. இதன் தத்துவம் பின்வருமாறு
1. தெய்வீக குணங்களை கொண்டவர்களை இறைவன் காப்பாற்ற தானே வருகிறார்
2. கெட்ட குணங்களை அழிப்பதற்கு அவர் தயங்குவதில்லை
இந்த பாடலில் ஆத்ம தியானம் என்ற புதிய விஷயத்தை அறிமுகம் செய்கிறார், ஆன்மாவை பற்றி உபநிடதங்கள் சொல்லும்போது “ஆன்மா ஆதி அந்தம் இல்லாதது, எங்கும் வியாபித்திருக்கிறது, பாவமற்றது, எப்போதும் ஆனந்த மயமானது” என்று கூறும் , இவ்வாறாக ஆன்ம ரூபமாக எல்லோருள்ளும் இறைவன் இருக்கிறார், இந்த ஆன்ம தியானத்தை செய்யும் போது இந்திரியங்கள், மனம் மற்றும் அகங்காரம் ஆகியவற்றிற்கு மரண பயம் கொடுக்கின்றது, முடிவாக ஆன்ம தியானம் இந்த இந்திரிய மன ஆணவ மாயையிலிருந்து சாதகனை ஆன்ம தரிசனம் மூலம் இறைவனை உணர செய்கிறது, இந்த தத்துவத்தை சாதகனுக்கு உணர்த்தவே அருணகிரிநாதர் இந்த பாடலில் இறைவனின் குணங்களை வகைப்படுத்தி எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
லலிதையின் நாமங்களில் “ஆத்ம வித்யா” என்ற நாமம் ஆன்ம தியானத்தையும் குறிக்கும் பொருளிலும், “தேவ கார்ய சமுத்யதா” என்ற நாமம் தேவர்களை-நல்லவர்களை காக்க வந்தவள் என்றும்.”நிர்பவா” என்ற நாமம் பிறப்பிலாவதவள் என்றும், “நீர்நாஷா” என்ற நாமம் இறப்பில்லாதவள் என்றும், “நிரத்யயா” என்ற நாமம் அறிய முடியாதவள் என்றும். “நிஸ்துலா” என்ற நாமம் இந்த பாடலில் “அதிகா அனகா” என்ற ஒப்புயர்வற்ற தன்மையைக் குறித்தும், “பயாபஹா” என்ற நாமம் “அபயா” என்ற இந்த பாடலில் வரும், பயமற்ற தன்மையயும், பயம் போக்கும் குணத்தையும் குறித்து, அனுபூதியும் சஹஸ்ரநாமமும் வேறு வேறு அல்ல என்பதை நிரூபித்து சாதகர்களை வழி நடத்துகிறது.

Leave a comment