வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடியந்தமிலா அயில்வேல் அரசே
மிடியென்று ஒருபாவி வெளிப்படினே.
விளக்கம் :
ஆதி அந்தமில்லா அரசே முருக பெருமானே, சிவபெருமான் தந்த வஜ்ர வேலை கையில் வைத்திருப்பவரே, அறியாமை என்னும் வறுமை ஆகிய பாவம் வெளிப்படின், அழகு, செல்வம், மன உறுதி, ஒழுக்கம், பிறந்த குடியின் சிறப்பு, குலத்தின் கெளரவம் எல்லாம் ஒருவனை விட்டு போய்விடுமே!
இந்த செய்யுளுக்கு முந்தைய செய்யுளில், ஆத்ம தியானத்தை அருணகிரிநாதர் உபதேசிக்கிறார், இந்த ஆத்ம தியானம் செய்ய முற்படும் சாதகனுக்கு, அதை செய்ய ஆரம்பிக்கும் போது தான் தெரிகிறது அறியாமை என்னும் ஒரு பொருள் தன்னை ஆட்டி வைக்கிறது என்பது, இந்த அறியாமை என்னும் இருளே காமம், குரோதம் முதலான ஆறு குறைகளுக்கு காரணம் ஆகிறது , ஒருவனுக்கு அறியாமை விலகினால் அவன் கோபமோ பொறாமையோ கொள்ள மாட்டான், ஆனால் இந்த அறியாமை என்னும் மாயையே ஒருவனை கீழ் நிலைக்குத் தள்ளி, கர்ம சக்கரத்தில் சுழற்றி மேன்மேலும் பிறவி எடுக்க வைக்கிறது, ஆன்ம தியானம் செய்யும் போது அறியாமை தான் முதலில் விழித்துக் கொண்டு, சாதகனை மேலே செல்ல விடாமல் தடுக்கும், அதற்கான அத்துணை முயற்சிகளையும் எடுத்து எல்லாவிதமான முட்டுக்கட்டைகளையும் சாதகனுக்கு இடும்.
இந்த சமயத்தில் தான் சாதகன், தன் குருவினை நாடி தன்னுடைய ஆன்ம தியானத்திற்கு உதவுமாறு கேட்கிறான், அப்போது குருவானவர் தன் ஆன்ம பலத்தை சீடனின் மீது பாய்ச்சுகிறார், இந்த செய்கையே உண்மையான உபதேசமாகும், இந்த சக்தியாலும், குருவின் கிருபையாலும் சாதகன் மேலும் சாதனையில் முன்னேற முடிகிறது. இந்த பாடலில் கூறப்படும் “மிடி” , “பாவி” என்ற பாதங்களுக்கு விளக்கம் அறிந்தால் தான், அருணகிரிநாதர் ஏன் ஆத்ம தியானத்தில் தடைகள் வரும், குருவின் கிருபை ஏன் வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடியும்.
மிடி என்பது வறுமையைக் குறிக்கும் ஒருசொல், வறுமை என்பது மூன்று வகைப்படும் 1. பொருள் இல்லாததால் வரும் வறுமை, 2. ஒழுக்கமின்மையினால் வரும் வறுமை 3. ஆன்மீக வறுமை. இதில் ஆன்மீக வறுமையே மிகவும் கொடியது. பொருள் இல்லையென்றால் ஏதாவது ஒரு வேலை, வியாபாரம் செய்து கடுமையான முயற்சி செய்தால் கண்டிப்பாக அந்த வறுமை ஒழியும், அதே போல் ஒழுக்கமின்மையால் வரும் கஷ்டங்களை மிகவும் முயற்சி செய்து தான் வெளியே வர முடியும், இருந்தாலும் இந்த வறுமையைக் கடப்பது அவ்வளவு சுலபமல்ல,எனினும் மிகுந்த பிரயத்தனம் செய்தால் இந்த வறுமையிலிருந்தும் மீளலாம், ஆனால் ஆன்மீக வறுமை இருந்து விட்டால் பல கோடி பிறவிகள் எடுத்தாலும், அது நம்மை விடுவதில்லை, அஞ்ஞானம் என்றும் அறியாமை என்றும் அது நம்மை துரத்தி ஒவ்வொரு பிறப்பிலும் பல கர்மவினைகளை சேர்த்து நம்மை வீடு பேறு அடைய விடாமல் செய்கிறது. மற்றைய இரு வறுமைகளைக் கூட நாமே முயற்சி செய்தால் நாம் அழிக்க முடியும், ஆனால் ஆன்மீக வறுமையை இறைவன் ஒருவனால், அவனது கிருபை இருந்தால் மட்டுமே அழிக்க முடியும், அதனால் தான் மாணிக்கவாசகர் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொல்கிறார்.
ஞான ரூபமாக கூர்மையாக இருக்கும் வேல், ஒன்றே நம் இந்த அறியாமை எனும் வினையை அழிக்க வல்லது என்று புரிந்த படியால் தான், அருணகிரிநாதர் சாதகன் பால், இந்த கோரிக்கையை முருகனின் வேலிடம் வைக்கிறார், வேலானது சக்தியின் சூக்ஷ்ம வடிவம், இறுதியாக சக்தியே அஞ்ஞானத்தை போக்க வல்லவள் என்றும், இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும், இன்னும் சொல்ல போனால் சக்தியே பர ப்ரஹ்மம் என்றும் கூறலாம் அதற்கு சான்றாக சற்றே இந்த கோட்பாட்டை உணர மாறுபட்டு சிந்திக்க வேண்டும், கீழ்வரும் சிந்தனை ஒரு சாக்தன் எவ்வாறு எங்கும் தன் இறையை காண்கிறான் என்று கொள்ளவே தவிர மற்றைய தெய்வங்களை குறைப்பதற்கல்ல.
இறைவன் தன்னை இரண்டாக பிரித்தபோது, சக்தியிடம் மொத்த பொறுப்பையும், அதாவது பஞ்ச கிருத்தியங்கள் என்று சொல்லப்படும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளலை விட்டுவிட்டு, தான் எப்போதும் ப்ரஹ்ம ஸ்வரூபமாக பேரானந்த பெருவெளியில் எப்போதும் நிலைத்திருக்கிறான், சக்தியே மற்றைய எல்லா செயல்களையும் செய்கிறாள். இவ்வாறு இருக்கும் போது எந்த சக்தி வேலைகளை செய்கிறதோ அதை பரம்பொருளின் “விமர்ச” ரூபம் என்று குறிப்பிடுவதுண்டு, எப்போதும் ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருப்பதை “பிரகாச” ஸ்வரூபம் என்று குறிப்பிடுகிறோம், இவ்வாறு ஒன்றான பரம்பொருள் இரண்டாக பிரகாச விமர்ச ஸ்வரூபமாக இருப்பதையே சாக்தத்தில் லலிதா மகா திரிபுரசுந்தரி என்று கூறபடுகிறது, இவளே பக்குவம் அடைந்த ஆன்மாக்களை காத்து மேலே செல்ல ஊக்குவித்து, முடிவில் பரம்பொருளில் தானும் ஒன்றி அந்த ஆன்மாவையும் சேர்கிறாள், இவ்வாறு எந்த பொருள் எந்த மாறுதல்களும் இல்லாமல் ஓரிடம் இருக்கிறதோ அதுவே பரம்பொருள் என்று சொல்ல தகுதி வாய்ந்தது.
இப்போது சற்று நாம் கோவில்களில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை கவனிக்க வேண்டும்.சைவத்தில் கோவில் என்றால் நாம் தில்லை நடராஜர் கோவிலை தான் கொள்ள வேண்டும், இங்கு அர்த்த ஜாம காலத்தில், நடராஜ பெருமான் தான் பஞ்ச கிருத்யங்களையும் முடித்து, கோவிலை சுற்றி இறுதியாக பள்ளியறையில் வீற்றிருக்கும் அம்பிகையிடம் சேர்கிறார், இங்கு செயல் புரிவது பெருமான், பிரகாச ரூபமாக இருப்பது அம்பிகை, ஆதலால் அவளே ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருக்கிறாள் . விமர்ச ரூபமாக பெருமான் இங்கு மற்றைய வேலைகளை செய்கிறார், நான்கு கரங்களும் , தூக்கிய இடது திருவடி அருளலைச் செய்வதுமே அதற்கு சாட்சி, மாறாக சிவகாமசுந்தரி பெருமானின் நடனத்திற்கு சாட்சியாகவே அருகில் நிற்கிறாள், பரப்ரஹ்மத்தை போல், கீதையில் “நான் சாட்சி மாத்திரமாக மட்டுமே இருக்கிறேன்” என்று கண்ணன் சொல்வது போல.
இந்த காரணத்தினாலேயே, அருணகிரிநாதர் ஞானம் வேண்டி சக்திவேலிடம் கோரிக்கை வைக்கிறார், பிரம்மம் மட்டுமே பிரம்ம ஞானம் தரமுடியும், முருகனை அறிவை வேல் மட்டுமே தர முடியும், அந்த அறிவு மட்டுமே ஆன்மீக வறுமையை ஒழிக்க வல்லது. வேலே ஞானம் தருவதால் வேலே குருவின் ரூபமாக பார்க்க படுகிறது, ஒரு பாடலில் “முருகன் தனி வேல் நம் குரு” என்று அருளாளர் கூறுவார்.
லலிதையின் நாமங்களில் “சிவஞான ப்ரதாயினி”, “கைவல்ய ப்ரதாயினி” என்ற நாமங்கள், அவளே முக்திக்கு வேண்டிய ஞானத்தை அளிப்பவள் என்றும் ,”மகாலட்சுமி”என்ற நாமம் அவளே பொருளால் உண்டாகும் வறுமையை அழிப்பவள் என்றும் , “மஹா வித்யா”, “ஸ்ரீ வித்யா”, “ரமா” என்ற நாமங்கள் அவளே சரஸ்வதியாகவும், “ஸர்வார்த்த தாத்ரி”என்ற நாமத்தில் எல்லா செல்வங்களையும் தருபவள் என்றும் “ஸம்ப்ரதாயேஸ்வரி”என்ற நாமத்தில்
சம்பிரதாயங்கள் மட்டும் அல்ல ஒழுக்கத்தையும் காத்து தருபவள் என்று இந்த பாடலுக்கு ஏற்ப பொருள் கொண்டு அனுபூதியும் சஹஸ்ர நாமமும் சாதகனை ஒரு பாதையில் இட்டுச் செல்கின்றன.
கடந்த பகுதியில் ஆன்மீக செல்வம் என்றால் என்ன என்றும் ,பரம் பொருளின் குணநலன்களையும் பார்த்தோம், இந்த பகுதியில் 20 மற்றும் 21 ஆம் பாடல்களில் உள்ள உபதேச விளக்கம் மற்றும் தியானத்தின் நிலைப்பாடு என்னவென்றும் காணலாம். இந்த பாடல்கள் எவ்வாறு லலிதையின் ஆயிரம் நாமங்களில் அர்த்தம் பொதிந்து வருகின்றது என்பதையும் பார்ப்போம்.
