அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்ரம வேளிமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.
பொருள் :
மிகவும் அரிதான மெய்ப்பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும் , வேதத்தின் மகா வாக்கியங்களின் அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தையும் எனக்கு உபதேசமாக கொடுத்தாயே முருகா ! எனக்கு அதற்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீ எண்ண வில்லையே ! இந்த பிறவி கடலை கடப்பதற்கு உரிய பெரிய கப்பலை போல் உள்ளவரே , எல்லோரும் விரும்பத்தக்கவரே ,தேவர்களால் விரும்பி தியானிக்க படுபவரே, ப்ரணவப்பொருளே!
இவ்வளவு நாட்கள் சாதகன் , ஒரு நல்ல குருவை அடைந்து மெய்ப்பொருள் விளக்கம் கேட்டு அறிய பெற்றான், அதன் பின் ஆத்ம தியானம் செய்ய முற்பட்ட பின் , அவனுக்கு சில தெளிவுகள் பிறத்தல் ஆயிற்று , அவ்வாறான தெளிவுகள் பெற்ற சமயத்தில் தான் , தமக்கு உபதேசம் கிடைக்க ஒரு தகுதியும் இல்லை என்றும் , அது குருவின் மற்றும் பரம்பொருளின் அளவில்லா மற்றும் காரணமில்லா கருணை ஒன்றினாலேயே என்று தெளிகிறான்.
இந்தப் பாடலில் தான் முதன் முதலில் அருணகிரிநாதர் உபதேசத்தை பற்றி பேசுகிறார் , இவ்வளவு நாட்கள் சாதகன் குருவை அடைந்து இருந்தாலும் அவனுக்கு மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கப்பெற்று ஆத்ம தியானம் அறிவிக்கப்பட்டிருந்தது, இப்போது தான் உபதேசம் கிடைக்கப்பெறுகிறது, கடவுளை உணர்ந்த ஒரு குருவோ அல்லது கடவுளோ தான் உண்மையான உபதேசம் நல்க முடியும் , மற்றவை எல்லாம் நம் ஆன்மீக வாழ்வில் முன்னேற வெறும் கை காட்டிகளே, இந்த உபதேசமானது பலவகைப்படும், இவ்வகைகள் சாதகனுக்குள் பாயும் இறை சக்தியின் தீவிரத்தை பொறுத்து மாறுபடும் , இந்த வகைகளை காணும் முன்னர் உபதேசம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
உபதேசம் என்பது தன் ஆன்ம சக்தியை குரு சீடனுள் பாய்ச்சுவது , இந்த பாய்ச்சல் ஆனது “சக்தி பாத்” என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது , மந்திர உபதேசம் செய்யும் போது , குருவானவர் தம் ஆன்ம பலத்தை சீடனிடம் செலுத்துகிறார் , இவ்வாறு செலுத்துவதர்க்கு பல்வேறு மார்க்கங்கள் உண்டு , கண்களாலே செலுத்துவது ,ஸ்பரிசத்தால் செலுத்துவது , எங்கேயோ இருக்கும் குரு வேறு இடத்தில் உள்ள சீடனுக்கு உபதேசம் கொடுப்பது என்று பலவகைப்படும். ஒரு சாதகனுக்கு எவ்வாறான உபதேசம் வேண்டும் என்பதை குருவே முடிவு செய்வார், இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது குருவானவர் இறைவனை உணர்ந்தவர் , இறைவனின் மானிட வடிவமாகவே இருப்பவர் என்பதை, இந்த உபதேசம் என்பது செல்வத்தினாலோ, மிக்க படித்த கல்வியினாலோ கிடைப்பது அல்ல என்று தெளிவு கொள்ள வேண்டும். இவ்வாறான உபதேசம் தீவிர தீவிர ,தீவிர மத்ய,தீவிர மந்த ,மத்யாதி தீவிர,மத்திய மத்திய ,மத்திய மந்த என்று வகைப்படுகிறது. ஒருவரின் கர்ம வினைகளை கொண்டும் அவர்களுக்கான உபதேச வகைகள் மாறுபடும்.இனி இந்த உபதேசங்களின் விளக்கத்தைக் காண்போம்
தீவிர தீவிர – பரம்பொருள் ஒருவனை ஆட்கொள்ள நினைத்து விட்டால் , அவனை நோக்கி தன் சக்தியை பாய்ச்சும், இந்த சக்தியை தாங்கும் சக்தி எந்த உடலுக்கும் கிடையாது , இந்த வகையில் அந்த சாதகன் சக்தியின் பாய்ச்சலில் அப்போதே முக்தி அடைகிறான் , அவன் உடல் பரம்பொருளாலேயே மாய்க்கப்படுகிறது , உடல் இருந்த அடையாளம் கூட மிஞ்சாது .இந்த உபதேசத்தில் மந்திர ஜெபத்திற்கோ , த்யானத்திற்கோ வேலை இல்லை , தூய அன்பு மட்டுமே இதைச் செய்யும் , இவ்வாறான சாதகர்கள் வெளி உலகிற்கு பைத்தியம் போல் தெரிவார்கள். இந்த உபதேசம் கிடைப்பது அரிதிலும் அரிது
தீவிர மத்திய – இந்த உபதேசத்தின் போது , சாதகன் உடனே கடவுளை உணர்கிறான்,ஆனால் இந்த உணர்தலுக்கு பின்னும் உடலோடு வாழ்கிறார் , இந்த உணர்தல் கொண்டவரே பரமேஸ்வரனின் அருளால் மற்றையோரையும் பரம்பொருள் உடன் இணைக்க பாடுபடுகிறார் , இவரே மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பாலமாக அமைகிறார்.
தீவிர மந்த – இந்த உபதேசம் பெற்ற ஒருவர், ஆன்மீக வாழ்வில் மேல் நிலைகளுக்கு சென்று இந்த பிறவியின் முடிவில் முக்தி அடைகிறார்.
மத்திய அதிதீவிர – இந்த உபதேசமானது மந்திரம் , யோக பயிற்சிகள் போன்றவற்றை குருவிடம் கற்று , நெடுங்காலம் தவம் செய்த பின் குரு மற்றும் இறையருளால் முக்தி அடைவது.
மத்திய மத்திய – இந்த வகையில் உள்ள சாதகர்கள் மேற்கூறிய உபதேசம் பெற்றும், உலக வாழ்விலும் நன்றாக வாழ எண்ணம் இருக்கும் , பிறவியின் முடிவில் மேல் லோகங்களில் நீண்ட காலம் வாழ்ந்து பின் இறைவனோடு இணைவார்கள்
மத்திய மந்த – இந்த சாதகர்கள் குருவை அடைந்து மிகுந்த காலம் உலக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் வாழ்ந்து , பிறவி முடிந்து மீண்டும் பிறந்து ஆன்மீக வாழ்வில் மட்டுமே ஈடுபட்டு முக்தி அடைவார்கள்.
மேற்கூறிய உபதேச வகைகள் ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்தது அல்ல, மாறாக சாதகனுக்கு ஏற்றவாறு இந்த உபதேசங்கள் கிடைக்கிறது.இவ்வாறு ஏதோ ஒருவகையில் சத்குருவிடம் தீக்கை பெற்ற ஒருவன், குரு, மந்திரம் , இறைவன் மூவரும் ஒருவரே! தான் , குரு மற்றும் இறைவன் மூவரும் ஒருவரே என்று உணரும் போது அவனுடைய முக்திக்கு கடவுளின் கருணை மட்டுமே காரணம் என்று எண்ணி அவரின் அருளை வியப்பதே இந்த பாடல் அதைத் தான் “அடியேன் உரிதா ” என்ற பதம் உணர்த்துகிறது.
இவ்வாறாக எந்த ஒரு சாதகன் உபதேசம் பெறுகிறானோ அவனே கடவுளின் அருகாமைக்கு செல்கிறான், எவ்வளவு சீக்கிரம் , எவ்வளவு அருகாமை என்பது அவனின் தவமும் ,கர்ம வினைகளின் தன்மையும் முடிவு செய்யும், உபதேசம் பெற்ற ஒரு சாதகன் எப்படியேனும் இரண்டு பிறவிகளுள் இறைவனை அடைந்து விடுகிறான் என்பது மேற்கூறிய உபதேச வகைகளில் இருந்து தெரிகிறது.
லலிதையின் நாமங்களில் “குரு மூர்த்தி” ஆக இருந்து தீக்கை கொடுப்பதும் அவளே, “தீக்ஷிதா” என்ற நாமம் இதை உணர்த்தும். மேலும் அவளே “நிர்வாண சுக தாயினி” என்ற நாமத்தில் சமாதியில் சாதகனை அமர்த்துகிறாள், சாதகன் மீண்டும் பிறந்து தான் மோட்சம் அடைய வேண்டும் என்றால் “பவ சக்ர ப்ரவர்த்தினி” என்ற நாமத்தில் பிறவி சக்ரத்தை நடத்துபவளாகவும் இருக்கிறாள், முடிவில் “முக்திதாயினி” என்ற நாமத்தில் சாதகனுக்கு முக்தி கொடுக்கிறாள்.
