செய்யுள் 21 கருதா மறவா நெறிகாண

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசந்தர என்றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடனனே
பொருள் :
நினைவு, மறவாமை என்ற நிலையில் நான் நிலைத்திருக்க உன் இரண்டு திருவடிகளில் எனக்கு சரணாகதியை என்று தருவாய், எல்லோருக்கும் வரத்தை தருபவனே முருகா நீ! மயில் வாகனத்தைக் கொண்டவனே , பக்தர்களுக்கு வரம் தந்தே தீருவது என்ற விரதத்தைக் கொண்டவனே, சூரனை வேலால் பிளந்தவனே.

இந்த பாடலில் “கருதா மறவா நெறி” என்ற சொல் முக்தி நிலையை குறிக்கும், முக்தி நிலையில் இறைவனை நினைப்பதும் இல்லை மறப்பதும் இல்லை , அத்வைத நிலையில் இறைவன் வேறு ஜீவாத்மா வேறு என்ற வேற்றுமை எப்போதும் இருப்பது இல்லை, இந்த நிலையையே தமக்கு எப்போது வாய்க்கும் என்று அருணகிரிநாதர் இறைவனிடம் இறைஞ்சுகிறார் . அருணகிரிநாதரை காப்பாற்றிய போதும் , பின் அவரை திருப்புகழ் பாட உத்தரவிட்ட போதும் இறைவனை துவைத நிலையில் தான் உணர்ந்திருக்கிறார். ஆனால் முருகனே குருவாய் வந்து உபதேசம் தந்த பின்பு , மெய் பொருள் அறிவு ஏற்பட்ட பின்பு தான் இந்த இரண்டற கலக்கும் நிலையை பற்றி அவருக்கு தெரிகிறது , இதுவே முக்தி நிலை என்றும் அறிகிறார், அதனால் தான் கருதா மறவா நெறி வேண்டும் என்று கேட்கிறார்.அது எப்போது கிடைக்கும் என்று சாதகனுக்கு அடுத்த வரியில் உணர்த்துகிறார் அருளாளர்.

“இருதாள் வனசம்” என்ற பதம், முருகனின் திருவடிகளில் சரணாகதி அடைவதை குறிக்கிறது. எப்போது ஒரு சாதகன் இறைவனிடம் பூரண சரணாகதி அடைகிறானோ அப்போது அவனுக்கு முக்தி நிலை வாய்க்கப்படுகிறது. இந்த பூரண சரணாகதியே அவனுக்கு ஏற்ற உபதேசத்தையும் பெற்று தருகிறது. இங்கு சாதகன் – இறைவன், இறைவனின் பாதம், முக்தி இந்த மூன்றுமே ஒன்றுதான் என்பதை உணர்கிறான் , இந்த ஒற்றுமையினாலேயே தான் சனாதன தர்மத்தில் இறைவனின் பாதங்கள் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
இந்த பாடலில் தியானத்தின் நிலைகளையும் அருணகிரிநாதர் சாதகனுக்கு விளக்குகிறார்,ஆத்ம தியானம் செய்ய ஆரம்பித்த சாதகன், அந்த பயிற்சியில் மேலும் மேலும் முன்னேறி ஆழமாக தியானம் செய்ய வேண்டும், அவ்வாறான த்யானத்தில் சாதகன் தன்னை மறந்து அதாவது தான் என்ற அகங்காரம் அற்று போய், இருப்பது இறைவன் மட்டுமே, இந்த ஜீவாத்மாக்கள் அனைத்தும் இறைவனின் அம்சம் மட்டுமே என்பதை உணர்வதே கருதா மறவா நெறி.
மேலும் இந்த அனுபவமானது இறைவன் தன்னுடைய அபார கருணை ஒன்றினால் மட்டுமே நிகழும், அந்த கருணைக்கு ஆட்பட வேண்டியே இந்த அத்துணை முயற்சிகளும், இந்த முயற்சிகள் கூட பொய்த்து போகலாம் , ஆனால் இறைவனின் கருணையானது ஏதாவது ஒரு காரணத்தை முன் நிறுத்தி சாதகனுக்கு அருளி விடும் , அதற்காகவே ஒரு சாதகன் தன்னால் முடியுமோ முடியாதோ என்று எண்ணாமல் இறைவனை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். இந்த ஒரு காரணத்தினாலேயே இறைவன் வரதன் என்ற நாமத்தில் அழைக்கப்படுகிறான் , வேண்டுபவர் வேண்டிய விதம் வரங்களை அள்ளி கொடுக்கிறான், லலிதையின் நாமமான “வாஞ்சிதார்த்த ப்ரதாயினி” என்று இதை விளக்கும் பொருளுடன் வருகிறது.
வரமளிக்கும் முருகன் மயில் மீது விரைவாக வந்து அளிப்பதாக இங்கு சொல்லப்படுகிறது, கேட்பதை மட்டுமல்ல கேட்பதை கேட்ட மாத்திரத்தில் கொடுப்பதே இறைவனின் இன்னொரு வரப்ரதான குணமாக காட்டப்படுகிறது, கேட்பது உலக வாழ்விற்கு தேவையான பொருளோ ஆன்மீக வாழ்வின் முன்னேற்றமோ முருகன் உடனே கொடுக்கிறான், கேட்கும் வகை அறிந்து ஒரு சாதகன் கேட்க உடனே அளிப்பது இறைவனின் தன்மை, இந்த கருத்தை முன் நிறுத்தும் வகையில் தான் ஸ்ரீ வித்யா மந்திரங்களில் “அஷ்வாரூடா” என்ற தேவி குதிரை மீது வேகமாக வந்து அருள் புரிகிறாள் என்ற அவளின் மந்திரம் கூறுகிறது , “சம்பத்கரி” என்ற தேவியும் யானை மீது வந்து செல்வம் நல்குகிறாள் என்று அவளின் மந்திரம் மற்றும் த்யான ஸ்லோகங்கள் கூறும்.
இந்த இரண்டு தேவிகளுமே பண்டாசுரன் உடன் ஏற்பட்ட போரில் முன்னின்று பெரும் பகைகளை கலைந்தனர், அதே போல் முருகனின் மயில் போர்க்களத்தில் செய்த தீர செயல்களை “வேல் வகுப்பு” மற்றும் “மயில் வகுப்பு” போன்ற பாடல்களில் அருணகிரிநாதர் பதிவு செய்துள்ளார்.
சில காலம் முன் வாழ்ந்த பாம்பன் ஸ்வாமிகளும் மயிலை வேண்டி முருகனை அழைத்து வர சொல்கிறார் “அஸ்வாரூடா” “சம்பத்கரி” என்ற தேவிகள் இருவரும் முறையே குதிரை மற்றும் யானை படையை நடத்தி பண்டாசுரனுடன் நடக்கும் போரில் லலிதைக்கு துணையாக நிற்கிறார்கள்.
சூரபத்மன் உடன் நடந்த போரில் சூரன் மா -மரமாக உருவெடுத்து பூமிக்கும் மற்ற லோகங்கள் அனைத்திற்கும் ஒருசேர படர்ந்து விரிந்து தொல்லை கொடுக்கிறான் , அவனை வேலை வீசி இரண்டாக பிளந்து அழிக்கிறார். மரம் வீழ்ந்த பின்னும் அசுரன் உருவெடுக்க இரண்டாம் முறை வேல் அவனை இரு கூறாக பிளந்து கடலில் எரிந்தது. இந்த செயலை சற்று உற்று நோக்கினால் மகிஷாசுரவதத்தில் துர்கை எருமை உருவெடுத்த மகிஷனை அழித்த பின்னும் அசுரன் தன் சுய உருவில் வர வாளால் அவனை வெட்டுகிறாள். இவ்வாறு சக்தியின் வெளிப்பாடு முருகனாகவும் , முருகனே ஆறுமுக சிவமாகவும் இரண்டற விளங்கும் நிலையை அனுபூதி மற்றும் சக்தியின் பல்வேறு கிரந்தங்களை ஒத்து நோக்க தெளிவற தெரியும்.

Leave a comment