செய்யுள் 23: அடியைக் குறியாது அறியாமையினால்

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக்ரம வேல் மகிபா குறமின்
கொடியைப் புணரும் குணபூதரனே.

பொருள்:
அழகிய வேலை உடையவனே , மின்னல் கொடி போன்ற குறமகளைச் சேர்பவனே, முருகா ! அறியாமையினால் நான் உன் பாதங்களைத் தியானம் செய்யாமல் இவ்வாறே முடிந்து விடுவேனோ, இது நியாயமோ ? நீதியோ?

இந்த பாடலில் சாதகன் அறியாமை வசம் பிடி பட்டு, ஆன்மீக வாழ்வில் முன்னேற முடியவில்லையே என்று அரற்றுவது போல் அருணகிரிநாதர் பாடலைச் செய்திருக்கிறார்.பாடல் 22ல் ஆன்மிக வாழ்வில் முன்னேறிய ஒருவன் எவ்வாறு அடுத்த கட்டத்தில் முன்னேற்றம் இல்லை என்றும் இறைவனை நினைக்க கூட முடியவில்லை என்றும் அழ முடியும்? அப்படியென்றால் பாடல்கள் முரண் படுகிறதே, ஒருவேளை பாடல்களின் பதிவுகள் தவறாக இருக்க கூடுமோ என்ற சிந்தனைகள் வரக்கூடும்.
ஆனால் அருணகிரிநாதர் பாடலின் பதிவை அவ்வாறு அமைக்கவில்லை மேலும் இங்கு முரண்பாடும் இல்லை, அதற்கான காரணத்தை கீழ்கண்ட சித்தாந்தத்தை கொண்டு விளங்கிக்கொள்ளலாம்.
மனிதனுக்கு ஐந்து சரீரங்கள் உண்டு அவை முறையே அன்ன மய கோசம் என்று கூறப்படும் பௌதீக உடல், பிராண மய கோசம் என்று கூறப்படும் உயிர் மூச்சினால் ஆன உடல் , மனோமய கோசம் என்று மனதினாலும் அதன் எண்ணங்களாலும் ஆன உடல் , விஞ்ஞான மய கோசம் எனப்படும் புத்தியினால் ஆன உடல், ஆனந்த மய கோசம் எனப்படும் ஆன்மாவின் சக்தியால் உணரப்படும் உடல். இவ்வாறு பஞ்ச சரீரங்கள் எடுக்கும் ஒரு மனிதனுக்கு இவை அனைத்தையுமே இயக்க கர்ம வினை வேண்டும். பொதுவாக ஒரு மனிதன் வாழ்ந்து இறக்கும் போது அன்ன மய கோசமான உடலும் , பிராண மய கோசமான பிராண வாயு அல்லது உயிர் மூச்சும் தான் செயலற்று போகிறது ,மற்றைய மூன்று கோசங்களும் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன அவைகளே அடுத்த பிறவி எடுக்கும் வரை காத்திருந்து கர்மவினைகளை தொடர்கதையாக அனுபவிக்கிறது , பௌதீக உடலுக்கு இவ்வளவு ஆண்டுகள் என்ற வாழ்க்கைக் கணக்கு இருப்பது போல் மற்றைய உடல்களுக்கும் உண்டு, பொதுவாக மனோ மய கோசமானது பல ஆயிரம் வருடங்களுக்கு வாழும் , அதுவே கர்ம வினைகளின் பதிவுகளை உள்ளடக்கி அது தீரும் வரை பிறவிகளில் மனதிற்கும் உடலிற்கும் இன்ப துன்பங்களை கொண்டு சேர்க்கும்.
இந்த பதிவுகளை மூன்று விதமாக மேற்கொண்டும் பிரிக்க முடியும், அவை பௌதீக பதிவு அல்லது உடல் அனுபவிக்கும் கர்மங்கள் , சூக்ஷம பதிவு அல்லது மனம் அனுபவிக்கும் கர்மங்கள் , இறுதியாக காரண பதிவு அல்லது எல்லா வினைகளுக்கும் ஆன மூல காரணம், இதையே பஞ்ச கோசங்கள் போல் , மூவகை சரீரமாக பிரிக்கும் சித்தாந்தம் உண்டு அவை முறையே ஸ்தூல உடல் , சூக்கும உடல் காரண உடல் என்று வழங்கப்படும்.
ஒரு வினையின் பௌதீக வெளிப்பாடு ஸ்தூல மற்றும் பிராண உடல் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் , சூக்கும வெளிப்பாடு மனம் மற்றும் புத்தி அனுபவிக்கும் இன்ப துன்பங்கள், இவை அனைத்திற்கும் காரணமான வினையே ஆன்மாவை மறைத்து காரண சரீரத்தில் அமர்ந்து, ஆனந்த மய கோசத்தை எட்ட விடாமல் செய்யும். இந்த காரண சரீரத்தில் இருக்கும் கர்ம வினையே மாயை என்றும் வழங்க பெறுகிறது. இந்த மாயையே கடவுளின் மாயா சக்தியாக இருந்து முதிர்ந்த ஆன்மாக்களை கடவுளிடம் கொண்டு சென்று, மற்றைய ஜீவன்களை மீண்டும் சம்சாரத்தில் இட்டு முதிர வைக்கிறது.
இந்த மாயையே சக்தி, இந்த சக்தி நினைத்தால் ஒழிய பரப்ரஹ்மம் ஆன சிவ பரம்பொருளை அணுக முடியாது, சக்தியின் ஒப்புதல் இல்லாமல் முக்தி எனும் ப்ரஹ்மத்துடன் இணைவது இயலாது , ஏன் என்றால் ஜீவனை தன் மயமாக்கி தானே பிரம்மத்துடன் இனைந்து ஜீவனை இணைக்கிறாள் சக்தி.
இந்த பாடலில் சாதகன் இறைவனை நினைக்க முடியவில்லை என்று கூறுவதற்கும் , மேற்கூறிய சித்தாந்தங்களுக்கு நிறைய தொடர்பு உண்டு. இத்துணை நாட்கள் சாதகன் ஸ்தூல மற்றும் சூக்கும சரீரங்களின் மீதுள்ள வினையின் வெளிப்பாட்டை கடந்து வந்து விட்டான், ஸ்தூல வினையை விட மனதில் உள்ள சூக்கும வினையை அறிவதும் கடினம் , கடப்பதும் கடினம், அதே போல் சூக்கும வினையை விடவும் அதற்கான காரண வினையை அறிவது மிகக் கடினம் , ஏன் என்றால் அந்த வினை எந்த பிறவியில் எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது , அது ஏன் இவ்வாறாக வெளிப்படுகிறது என்றே எல்லாம் அறிவதும் , அதற்கான காரணத்தை கடந்து இறைவனை த்யானிப்பதும் சூக்கும நிலை தாண்டி காரண சரீரத்தில் உள்ள வினை அவனை தியானம் செய்ய ஒட்டாமல் தடுக்கின்றது. இந்த காரணத்தினால் தான் செய்யுள் 22 ல் இறை அனுபவம் பெற்ற ஒருவன் செய்யுள் 23ல் புலம்புவதற்கு காரணம்.
இந்த காரண வினையானது, சற்றே இறை அனுபவம் கைவர பெற்ற பின் , தூண்டிய நாகம் போல் விழித்து எழுந்து சாதகனை இறை அனுபவம் பெற விடாமல் செய்யும் , இதற்கு காரணம் காரண சரீரத்தில் உள்ள பதிவுகளே, இந்த பதிவுகளே அறியாமை என்றும் கூறப்படும், இந்த அறியாமை போக வேண்டும் என்றால் சக்தியானவள் மாயையை நீக்கி சாதகனுக்கு ஞானம் அளித்து பரம்பொருளோடு இணைக்க வேண்டும்.
இந்த பாடலில் அருணகிரிநாதர் , தம்மால் இறைவனின் பாதத்தை தியானம் செய்ய இயலவில்லை என்று சொல்லும்போது இரண்டு பேர்களை துணைக்கு அழைக்கிறார் 1. வேல் 2. வள்ளி (விடு விக்ரம வேல், குறமின் கொடி) இங்கு வேல் குருவையும் , குறமகள் வள்ளி சக்தியையும் குறிக்கும், காரண சரீரத்தை கடக்க குருவின் ஆழமாக அகன்ற அறிவும், பாசங்களை களைய கூர்மையான ஞானோபதேசமும் உதவும் , இறுதியாக இங்கு வள்ளியை “மின்கொடி” என்று உருவகப்படுத்துவதில் இருந்து சக்தியின் வெளிப்பாடே வள்ளி என்று தெளிவாக தெரியும் படி பாடலை செய்திருக்கிறார் அருளாளர். குண்டலினி ரூபமாக சக்தி இருக்கும்போது அவள் ஒரு மின்னல் போல் இருப்பாள் என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும் , அபிராமி பட்டரும் “துதிக்கின்ற மின்கொடி” என்று கூறுவார், இங்கு இறுதியாக வள்ளி சாதகனுக்கு ஞானத்தை அளித்து முருகனிடம் சேர்கிறாள். இந்த பாடல் வள்ளியிடம் இறுதி ஞானத்தை கேட்கும் ஒரு பாடலாகவே அமையப் பெறுகிறது. லலிதா சஹஸ்ரநாமமும் இந்த பாடலை போன்றே சில பொருள்களோடு நாமங்களை கொண்டிருக்கிறது “மஹா மாயா” என்ற நாமம் சக்தியே மாயையாக இருப்பவள் என்றும், “மஹா புத்தி” அவளே எல்லா ஜீவனுக்கும் அறிவாக இருக்கிறாள் என்றும் , “பஞ்ச கோசந்தர ஸ்திதா” ஐந்து வகை சரீரமாகவும் “திரிபுரா த்ரிபுரேசி” என்ற நாமங்களில் மூன்று சரீரங்களில் உள்ள வினைகளை களைபவளும் அவளே, கொடுப்பவளும் அவளே என்றும்,”தடி³ல்லதாஸமருசி꞉” என்ற நாமத்தில் அவள் மின்னல் போன்றவள் என்ற பொருளில் வந்து ஒவ்வொரு பாடலிலும் முருகனும், பராசக்தியும் ஒருவரே என்று மீண்டும் மீண்டும் நிரூபனம் ஆகிறது. இவ்வாறாக கந்தர் அனுபூதி ஆறுமுக சிவமான முருகனை மட்டும் அல்ல சூட்சுமமாக சக்தியையும் இணைந்தே போற்றி வருகிறது.

இந்த பகுதியில் வரும் பாடல்களில் இறைவனின் கருணையை எவ்வாறு வேண்டுவது என்றும் எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் என்றும் அருணகிரிநாதர் அனுபூதியில் விளக்குகிறார்.

Leave a comment