கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர்வேல புரந்தர பூபதியே.
பொருள் : சூரபத்மன் , அவனுடைய குலம் , கிரவுஞ்ச மலை ஆகியவற்றை உன்னுடைய கூறிய போர் வேலால் துளைத்து இந்திரனுக்கு தேவலோகத்தை மீட்டுக்கொடுத்த பெருமானே , கூரிய வேல் போன்ற கண்களை உடைய மங்கையர் உடன் சேர்ந்த எனக்கு, உன் திருவருளை தந்து உய்விக்க மாட்டாயா?
சாதகன் ஆத்ம தியானத்தில் ஈடுபட ஆரம்பித்த பின் , அவனுடைய சம்ஸ்காரம் அல்லது வாசனைகள் / கர்மா ஆனது இதுவரை இல்லாத அளவு வீறு கொண்டு எழும், அவனுடைய வினைகள் அந்த சாதகனை இறைவனிடம் செல்ல விடாது தடைகைளை உருவாக்கும். இங்கு கூர்வேல் விழி மங்கையர் என்ற பதத்தில் அருணகிரிநாதர் மூன்று பொருள்கள் படுமாறு பாடலை அமைத்து இருக்கிறார் 1. சாதகன் பெண்களின் பால் கொண்ட ஆசையினால் அவர்களுடன் களிப்புற்ற நினைவுகள் அவனை தியானம் செய்ய முடியாமல் அந்த ஆசைகள் மேல் எழுந்து மேலும் அவனை வினைகளைச் சேர்க்க உந்துகிறது, இந்த “சேர்வேன்” என்று அருளாளர் சொல்வது , இவரே சென்று பெண்களின் பால் விழுவதும் தம்மால் அதை தடுக்க முடியவில்லை என்றும் இறைவனிடம் முறையிடுகிறார், இங்கு அவர் வினையின் பயனால் சேர்வேன் என்று சொல்லவில்லை , அதேபோல் “சேர்வேன்” என்ற பதம் நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் இரண்டையும் சொல்கிறார், இதிலிருந்து தம்மால் தம் ஆசைகளையும் தம் மனதையும் கட்டு படுத்த முடியவில்லை, என்ற இயலாமையும் , என்னை போன்ற ஆட்களுக்கும் உன் அருள் தருவாயா என்று முருகனின் பாதங்களில் சரண் அடைகிறார் 2. மங்கையர் கொங்கையிலே சேர்வேன் என்ற பதம், ஒரு ஜீவன் பல முறை பிறந்து தாயிடம் வளர்ந்து மீண்டும் பிறப்பெடுக்கும் முடிவில்லா வட்டத்தை குறிக்கிறது, இந்த பொருளுக்கு ஆதாரமாக திருப்புகழில் “எருவாய்” என தொடங்கும் பாடலில்
“ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமாயழியாதே”
பல பிறவிகள் எடுத்தும், பல தாய்களின் உதரத்து உதித்தும் தாம் இன்னும் இறைவனை அடையவில்லை என்று சாதகன் முறையிடுவதும் இங்கு பொருந்தும். 3. கூர் வேல் விழி மங்கை என்ற பதம் சித்தாந்த விளக்கத்தில் “ப்ரக்ருதி” என்று கூறப்படும் மாயையையும் குறிக்கும், இதேயே சைவ சித்தாந்தம் மாயா மலம் என்று கூறும், மாயா மலம் அகல வேண்டும் என்றால் அதற்கு இறைவனின் கருணை ஒன்றினால் மட்டுமே இயலும், ஏன் என்றால் மாயையும் இறைவனின் ஒரு அங்கமே, அறிவும் அறியாமையும் இரண்டுமே இறைவனின் படைப்பே, இறைவன் கருணை கொண்டால் ஒழிய அறியாமையும் அகலாது, அறிவும் ஏற்படாது, அதனால் தான் சாதகன் இங்கு இறைவன் தம் மீது கருணை கொள்ள வேண்டும் என்ற முறையிலும், தம் செய்கை அனைத்துக்கும் காரணம் இறைவன் ஒருவனே என்றும் சற்று புத்தி பூர்வமாக புரிந்த பின்பு(இன்னும் அனுபவம் கிட்ட வில்லை ) முருகனிடம் தம்மை இந்த மாயா மலத்தில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தனை செய்கிறான்.
தேவேந்திரன் அசுரர்களை எதிர்த்து தாமே பல முறை போர் புரிகிறான், முடிவில் பல தேவர்களை சூரபத்மன் சிறையிலடைத்து விடவே, தேவேந்திரன் சூரனுக்கு பயந்து ஒழிந்து வாழ வேண்டிய நிலை வருகிறது , பதுங்கிய தேவேந்திரன் இறைவனை நோக்கி தவம் இருக்க, சில காலம் கழித்து பரம்பொருள் ஷண்முக வடிவம் தாங்கி வந்து, சூரருடன் போர் புரிந்து தேவலோகத்தை மீட்டு தேவேந்திரனுக்கு அளிக்கிறது. இங்கு தேவேந்திரன் எவ்வாறு சூரபத்மனுடன் போராடி தம்மால் வெல்ல முடியாமல் தோற்று முடிவில் இறைவனின் திருவடி பற்றி அவரே வந்து சூரனுடன் போர் புரிந்து இந்திரனுக்கு வெற்றி பெற்று தந்தாரோ, அதேபோல் இந்த சாதகனுக்கு தன் இடையூறுகளைக் களைந்து வெற்றி பெற்று தருமாறு கேட்பதே இந்த பாடல்.
கூர்வேல் விழி கொண்ட மங்கையரிடம் இருந்து, தம்மைக் காக்க கிரவுஞ்ச மலையை இடித்த, சூரனை கொன்ற நெடிய போர் வேலின் துணையை வேண்டுகிறார் அருளாளர். மங்கையரிடம் சேரும் வினையானது , இறைவனின் அருள் சேர்வதால் தொலைந்து போகும், கூர்வேல் பார்வைக்கு எதிராக இறைவனின் போர் வேலானது சாதகனைக் காக்கும்.
நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்னவென்றால் , இறைவனின் வேலானது சக்தியின் மறு வடிவமாகும், பராசக்தி தன்னிலிருந்து வடிவமைத்துக்கொடுத்த வேலே முருகன் கைக்கொண்டு போர் செய்தார், இங்கு சாதகர் அந்த பரா சக்தியின் துணையைத்தான் கூர்வேல் விழி பார்வைக்கு எதிராக கேட்கிறார், இங்கு நுட்பமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பராசக்தி தான் இறைவனின் மொத்த இயக்கத்திற்கும் காரணம் , அவளே மாயையாக இருந்து மறைக்கவும் செய்கிறாள், ஞானசக்தி வேலாக இருந்து, குருவாய் அமர்ந்து சாதகனை சேர்க்கவும் செய்கிறாள், சக்தி மாயையை விலக்க நினைத்தாலொழிய இங்கு எந்த ஒரு சாதகனும் இறைவனை அடைய முடியாது. அதனால் தான் அருணகிரிநாதர் மிக அதிகமாக பராசக்தியின் வடிவமான வேலையும், வள்ளியையும் பாடுகிறார், முருகனை பர பரப்ரஹ்மமாக நிர்குண பொருளாகவே தியானிக்கிறார்.
லலிதா சஹஸ்ர நாமத்தில் “ஸம்ʼஸாரபங்க நிர்மக்³ன ஸமுத்³த⁴ரண பண்டி³தா” என்ற நாமம் பிறவிகளில் வரும் துயரை எவ்வாறு களைவது என்ற ஞானம் லலிதைக்கு மட்டுமே உண்டு என்ற பொருளில் வரும் , இந்த பாடலிலும் பராசக்தியான வேல் மட்டுமே பிறவி துயரைக் களைய வல்ல பொருளாக அருணகிரிநாதர் பாடுகிறார்.
லலிதை “ராக ஸ்வரூப பாஷாட்யா” என்ற நாமத்தில் ஆசைகளை பாசக் கயிறு கொண்டு அடக்கி ஆள்பவள் என்ற பொருளில், சாதகனுக்கு ஆத்ம தியானத்தின் போது கர்ம வினையால் எழும் ஆசைகளை இறைவன் பால் இழுத்து அடக்கி ஆள்கிறாள் , இங்கும் கூர்வேல் விழி பார்வைக்கு மாறாக போர்வேலிடம் கருத்தைச் செலுத்த அது இறைவனிடம் சாதகனை அழைத்துச் செல்கிறது.
