மெய்யேஎன வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே.
பொருள்: இந்த உலக வாழ்வை உண்மை என்று நம்பி கர்ம வினைகளால் சூழ்ந்து நான் இங்கும் அங்கும் அலைகிறேனே, உடல், கைகள், திருவடி எல்லாமுமே சிவந்த வண்ணத்தில் இருக்கும் முருக பெருமானே , மயில் மீது வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து சேவை புரிவோனே என்னுடைய இந்த அலைச்சலை நீக்க மாட்டாயா
இந்த பாடலிலும் இதற்கு முந்தைய பாடல்களிலும் சாதகன் குருவை அடைந்து , உபதேசம் பெற்றும் , ஆத்ம தியானம் செய்தும் கர்ம வினைகள் விடாது துரத்துவதை அருணகிரிநாதர் எடுத்து காட்டுகிறார், நம்மில் பெரும்பாலானோர் குருவை அடைந்து உபதேசம் கிடைத்தாலே இறைவனை அடைந்தோம், நம் தொல்லை தொலைந்தது என்று நினைக்கிறோம் , இன்னும் பலரோ ஒவ்வொரு தெய்வத்தை வணங்கினால் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை உபதேசிக்கும் குருவை நோக்கி செல்கிறோம், எதிரிகள் தொல்லைக்கு உக்கிர தெய்வ வடிவங்களையும், செல்வ வளத்திற்கு லட்சுமி , ஸ்வர்ண பைரவர் என்றும் ஒவ்வொரு தெய்வமாக இலாக்கா பிரித்து வணங்க செல்கிறோம், இந்த அத்துணை வடிவங்களும் ஒரே பொருளின் பிரதிபலிப்பு தான், காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ற வாறு பரம்பொருள் வேண்டிய உரு தாங்கி வந்து சென்றது என்பதையும் அறிய மறுக்கிறோம். இறைவன் ஒருவனே என்ற கொள்கை ஆன்மீக வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரும் அறியவும் உணரவும் வேண்டிய ஒரு உண்மை, இந்த உணர்தலை நோக்கி செல்வதே உண்மையான ஆன்மீகம், சமயங்கள் பலவாக இருந்தாலும் அவரவர் சமயத்தின் வாயிலாக இறைவனை உணர்தலையே பெரியவர்கள் வகுத்து சென்றுள்ளனர். இங்கு இந்த கருத்தை சொல்வதற்கு காரணம் அருணகிரிநாதர் பயன்படுத்திய “அலைய” என்ற பதமே.
இங்கு அலைவது என்ற வார்த்தை பல பொருள்கள் பட வரும் 1. பிறவிகளில் சுழன்று அலைவது 2. பல்வேறு விதமான உயிர்களாக பிறந்து அலைவது 3.நன்மை தீமைகளுக்கு நடுவில் மாட்டிக்கொண்டு அலைவது 4. சமயங்களில் எது சிறந்தது எது நமக்கு நன்மை பயக்கும் என தெரியாமல் அலைவது 5.மந்திரங்கள் மற்றும் பல குருக்களை தேடி அலைவது 6.பல்வேறு பயிற்சிகளை செய்கிறேன் என்று அதற்கேற்ற வழிமுறைகளைக் கற்க அலைவது என்று எல்லா விதங்களிலும் நாம் அலைந்து திரிந்து தான் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இவை அனைத்தும் உண்மை என்றும் நம்பி வாழ்கிறோம்.இவ்வாறு நாம் அலைந்து திரிவதற்கு காரணம் வேறு ஒன்றும் அல்ல நம் கர்ம வினைகள் தான். இந்த வினைகள் எவ்வாறு செயல்படுகிறது என்று நாம் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் . இறைவன் ஆதியில் உலகை படைத்த போது சில விதிகளையும் சேர்த்து தான் படைக்கிறான் , இதுவே இயற்கை அல்லது இயற்கை விதிகள் என்று நம்மால் அறிய படுகிறது உதாரணம் பிறந்த அத்தனை உயிர்களும் ஒருநாள் இறந்து தான் ஆக வேண்டும். இதே போல் ஒவ்வொரு வினைக்கும் cause அல்லது காரணம் இருக்க வேண்டும் , இந்த மொத்த வினைத்தொகுப்பே cause and effect என சொல்லப்படும் காரண காரிய வெளிப்பாடு தான். இயற்கை இறைவனின் படைப்பில் எப்போதும் சமநிலையில் இருக்கும், எப்போதெல்லாம் சமநிலை தவறுகிறதோ , இயற்கை சமநிலையை நோக்கி எதிர்வினை செய்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு அகங்கார மையமாக வாழ்ந்து எண்ணற்ற நன்மை தீமைகளை செய்கிறோம், அந்த செயல்களுக்கு ஏற்ற வாறு இயற்கை நம்மை சம நிலைக்கு இட்டு செல்கிறது, ஒரு நல்ல செயலுக்கு நன்மையை நம்மை அடைய செய்கிறது , தீய செயலுக்கு தீமையை அடைய செய்கிறது, இங்கு நன்மை தீமையை அழித்து விடாது உதாரணமாக நாம் 10 நன்மைகளையும் 8 தீமையும் செய்தால் , 10 நல்லவற்றில் 8 தீமை நீக்கி , 2 நன்மைக்கு ஏற்ற செயல் மட்டும் திரும்பி வராது, 10 நற்செயலுக்கு 10 நன்மையையும் , 8 தீவினைக்கு 8 தீவினையும் வந்து சேரும் , இது தான் சம நிலை நோக்கி செல்லும் படி இயற்கை நம்மை இழுத்து செல்லும் பாதை , இதுவே விதி ,இந்த விதியும் இறைவன் அமைத்ததே.
ஒருவர் ஒரு பிறவியில் இந்த சமநிலை அடைய முடியவில்லை என்றால் பிறவிகள் தொடரும் , எப்போது இந்த வினைகள் சம நிலையில் இருக்கிறதோ அப்போது அந்த நிலையை “பூஜ்யம்” என்று அழைக்கிறோம் , இங்கு பூஜ்யம் என்றால் ஆங்கிலத்தின் zero அல்லது சூன்யம் அல்ல மாறாக சமம் என்று பொருள், இந்த சமநிலையை சமாதி , இறைவனின் அருகாமை என்றெல்லாம் பல்வேறு சமயங்களில் அழைக்கப்படுகிறது. அதனால்தான் மகான்களை சொல்லும் போது “பூஜ்ய ஸ்ரீ” என்ற பதம் உபயோகத்தில் வந்தது, ஏன் என்றால் அவர் நன்மை தீமைகளைக் கடந்தவர், இறைவனை அறிந்தவர் என்பதால். எல்லோரும் இந்த பூஜ்ய ஸ்ரீ பதத்திற்கு தகுதியானவர் அல்ல என்பதையும் இதில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த சமநிலை நோக்கி தாமும் முன்னேற வேண்டும், பிறவி, பொருள் , வினை இவற்றால் அலையக் கூடாது என்றும் இறைவனை நோக்கி வேண்டுதல் வைக்கிறார் அருளாளர்.
இந்த வேண்டுதல் எவ்வாறான இறைவனிடம் வைக்கிறார் என்று தான் நாம் இங்கு கவனிக்க வேண்டும், இரண்டாம் வரியில் இறைவனை வர்ணனை செய்யும்போது முழுவதும் செவ்வண்ணம் ஆக இருப்பதாகவே சொல்கிறார், இறைவனின் கைகள் அடியவர்க்கு வேண்டிய வரம் எல்லாம் கொடுத்து கொடுத்து சிவந்திருக்கின்றன, அவனுடைய வேலோ சூரனின் உதிரம் பட்டு சிவந்திருக்க, கால்கள் மோக்ஷம் கொடுத்து சிவந்திருந்தது. சிவப்பு என்ற வண்ணமே, தயை, கருணை, செயலின் வண்ணம் போன்றவற்றை குறிக்கும், முருகன் ஆக்க பூர்வமான கருணை கொண்ட கேட்பதைக் கொடுக்கும் பரம்பொருளின் வடிவம், அதனால் தான் இங்கு மோக்ஷம் வேண்டி இறைவனை செவ்வண்ணமாக தியானம் செய்து வேண்டியதை பெற வேண்டும் என்று அருணகிரிநாதர் சூட்சுமமாக உபதேசம் செய்கிறார், இறைவனை செவ்வண்ணத்தில் தியானம் செய்ய கேட்பதை கண்டிப்பாக கொடுப்பார் என்றும் இதிலிருந்து தெரிகிறது.
லலிதையின் த்யான ஸ்லோகமும் “அருணாம் கருணாம்” என்று தான் ஆரம்பிக்கும் அவளுடைய வண்ணம் சிவப்பு என்றே தியானம் கூறுகிறது, “சிந்தூராருண வர்ணாம், சகுங்கும விலேபனாம்” என்ற ஸ்லோகங்களும் லலிதையின் செவ்வண்ணத்தை தான் மேலாக பேசுகிறது, சஹஸ்ரநாமமும் “சர்வாருணா” – முழுவதும் செவ்வானம் ஆனவள், “நிஜாருண பிரபா பூர” என்ற நாமத்தில் சிவந்த மண்டலத்தில் நடுவில் இருப்பவள் என்றும், “அருண அருண கௌசும்ப” என்ற நாமத்தில் சிவப்பு உடை அணிந்தவள் என்றும், “பத்ம ராக ஸமப்ரபா” என்ற நாமத்தில் பவள வண்ணத்தினள் என்றும் , “ஆரக்த வர்ணா” என்ற நாமத்தில் ரக்த வர்ணத்தினள் என்றும் , “வித்திருமாபா” என்ற நாமத்தில் பவளம் போல் ஜொலிப்பவள் என்றும் மிகுந்த இடங்களில் லலிதையை சிவந்த வண்ணத்தில் தியானம் செய்வதும் ,
முருகனும் லலிதையும் வேறு வேறு தெய்வங்கள் அல்ல இருவரும் ஒரு பரம் பொருளின் இருவடிவமே என்று புலன் படும்.
இந்த பகுதியில் செய்யுள் 26,27ல் சாதகன் எவ்வாறு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறான் என்றும், இறைவனின் தன்மையை எவ்வாறெல்லாம் உணர்கிறான் என்றும் பார்க்கலாம்.
