செய்யுள் 26 ஆதாரம் இலேன் அருளைப் பெறவே

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒருசற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோத மனோ
தீதா சுரலோக சிகாமணியே.

பொருள் : வேதங்கள், ஆகமங்கள் தரும் ஞானத்தை நொடி பொழுதிற்குள் தர வல்லவரே, மனதிற்கு அப்பாற்பட்டவரே, மனதை அழிப்பவரே, தேவ லோக சிகாமணியே. என்னக்கு உன்னை விட்டால் வேறு ஆதரவு என்று ஒன்றும் இல்லை, உன் கிருபையை பெறவும் என்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை, நீயும் இதை பற்றி சற்றும் நினைக்கவில்லையே! என்னே ஒரு பரிதாபமான நிலை.

இந்த பாடலை இரண்டு வேறு கண்ணோட்டங்களோடு நாம் பார்க்கலாம். 1.இறைவனின் கிருபைக்கு ஆளாக முடியவில்லை அதனால் சாதகன் இறைவனை நோக்கி தன்னுடைய ஆற்றாமையும் பரிதாப நிலையையும் கூறுவது போல ஒரு கண்ணோட்டமும் 2. இறைவன் கிருபைக்கு ஆதாரம் இல்லையென்றாலும் சாதகனை நோக்கி தன் கிருபையை செலுத்துகிறான் என்றும் ஒரு கண்ணோட்டத்துடனும் பார்க்கலாம்.
சாதகன் இவ்வளவு நாட்கள் குருவிடம் தீட்சை பெற்ற பின்பு , ஆத்ம தியானம் செய்து சிறு சிறு அனுபவங்கள் பெற்றாலும், பூரண விடுதலை பெற முடியவில்லை, காரணம் பௌதீக கர்மங்களை கடந்தாலும் சூட்சும மற்றும் அதிசூட்சம கர்மங்கள் மனம் மற்றும் ஆன்மாவை விட்டு நீங்கவில்லை, அதற்கான முயற்சிகள் சாதகன் எவ்வளவு செய்தும், இறைவனை நோக்கி செல்லும் வேகம் தடை பட பல்வேறு காரணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, இறைவனின் இருப்பை சத்தியம் என்று உணர்ந்து கொண்ட ஒரு ஆன்மா எப்பாடு பட்டாவது இறைவனை அடைந்து விடும், இறைவனை நோக்கி செல்லும் ஒவ்வொரு செயலையும் கர்ம வினை தடுக்க பார்ப்பதும், அதை களைவதிலேயே நேரம் கடப்பதும், அகநானூற்றுத் தலைவி-தலைவன் பிரிவாற்றாமையினை விட கொடுமையாக இந்த சாதகன் உணருகிறான்.
இறைவனை அடைய சாதகனிடம் எந்த இரு ஆதாரமும் இல்லை, தவம் இல்லை நற்செயல்களினால் விளைந்த புண்ணியம் இல்லை, ஞானமும் இல்லாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறான், இறைவன் உள்ளான் என்ற உண்மை மட்டுமே சாதகனுக்கு புலனாகி உள்ளதும், இறைவனின் கிருபை இல்லாமல் இருப்பதும் அவனுக்கு இப்போது தான் விளங்குகிறது, கிருபை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியாத நிலைமை தான் சாதகனின் தற்போதய நிலை, இறைவனாக நினைத்தால் தான் அதுவும் இவனுக்கு புலனாகவும் அதனால் தான் “நீதான் ஒரு சற்றும் நினைந்திலை” என்று இறைவனிடமே அவனைப் பற்றி முறையிடுகிறான், அந்த இறைவன் நினைத்தால் என்னவெல்லாம் கொடுக்க முடியும் என்றால் “வேத , ஆகம ஞானம்”, “மனோ நாசம்”, “சுரலோகம்” என்னும் சுவர்க்கம் எல்லாமே சற்று நேரத்திற்குள் கொடுத்து விடுவான்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய பதம் “சிகாமணியே” என்பதை. சிகாமணி என்பது தலையில் “சிகை” என்று கூறப்படும் உச்சியில் சூடும் மணி, இங்கு சூடும் மணி எவ்வாறு ஆடம்பரம் ஆகும், சிகாமணி என்பது நாம் நினைப்பது போல் மகுடத்திலோ, நெற்றி பக்கத்திலோ இருந்தால் அதனால் ஒரு ஆடம்பரமும் அலங்காரமும் அரசர்களுக்கு உண்டு, சிகையில் அதாவது உச்சி தலையில் உள்ள மணியால் என்ன பயன், அது மணி தானா? என்று ஆராய வேண்டிய கட்டாயம் இந்த பாடலின் மூலம் அருணகிரிநாதர் அந்த கட்டாயத்திற்கு நம்மை ஆளாக்குகிறார்.
குண்டலினி சக்தியானவள், மூலாதாரம் தொடங்கி சஹஸ்ராரம் சென்று அடையும் இடம் உச்சி தலையே, அங்கு நாம் அதை மறைத்து வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே சிகை வைக்கும் பழக்கம் வந்தது, இந்த இடத்தில் உள்ள மணி என்பதே, சஹஸ்ராரத்தில் குண்டலினி பரப்ரஹ்ம தோடு கலக்கும் நிலை தான், இவ்வாறாக சிவ சக்தி ரூபமாக, புருஷ பிரகிருதி ரூபமாக, காமேஸ்வரன் காமேஸ்வரியாக, ப்ரகாஷ விமர்ஷ ரூபமாக விளங்குவதால் தான் முருகனை சிகாமணி என்று அருளாளர் அழைக்கிறார். இங்கு கவிதை சுவையை விட மறைந்திருக்கும் உண்மை சுவை தான் அதிகம்.
இறைவனின் கிருபை கிடைப்பதற்கு ஒரு காரணமும் தேவை இல்லை, ஒரு ஆதாரமும் நம்மிடம் இருக்க தேவை இல்லை, ஆதாரம் கொண்டு அருள இறைவன் ஒரு வியாபாரி அல்ல, இறைவனின் செயலுக்கு விளக்கம் காண முயல்வதும், கர்ம வினையின் மூலத்தை காண முயல்வதும் நூலைக் கொண்டு கடலை அளக்க நினைப்பது போல் வீண் பொழுதில் முடியும். இறைவனை ஏற்கனவே “நிஷ் காரணன்”, “நிஷ் பரிக்ரஹன்”, “நிராதாரன்” போன்ற நாமங்களில் இறைவன் காரணமின்றி இருப்பவன், அவனுக்கு யாரும் எதுவும் கொடுக்க தேவை இல்லை, அவனே எல்லாவற்றுக்கும் ஆதாரன் அவனுக்கு ஆதாரம் தேவை இல்லை என்பது எல்லாம் கண்டிருக்கிறோம், அவ்வாறான இறைவன் எப்படி கிருபை செய்ய ஆதாரம் தேடுவான், சிவ பெருமான் எலி ஓடும் போது விளக்கு திரி தூண்டப்பட்டதை கொண்டு எலியை மறுபிறவியில் மன்னனாக்குகிறார், இறைவனுக்கு ஆதாரம் ஏதோ ஒரு சிறிய செயலைக் காரணம் காட்டி பெரிய கிருபை புரிய வேண்டும் என்பதே , இதற்கும் காரணம் அவன் வகுத்த “cause and effect” கொண்ட கர்ம வினைக் கொள்கையே.

இந்த பாடலில் அருளாளர் அந்த சிறிய வினை கூட என்னிடம் ஆதாரம் இல்லை, இருந்தும் நீ கருணை புரிந்தாயே முருகா என்றும், அவனின் கருணையானது, வேத ஞானம், மனோ நாசம், சுரலோகம் போன்ற அனைத்தையும் அளித்தது மட்டும் அல்லாமல், அவனையும் உணரச் செய்யுமே என்று சாதகனை ஒரே பாடலில் புலம்பவும் வைத்து, இறைவனின் கருணையையும் உணர செய்கிறார்.
லலிதையின் சஹஸ்ர நாமத்தில் ஶோப⁴னாஸுலபா⁴க³தி- எளிதாக அடைய கூடியவள், நிஜாஜ்ஞாரூபநிக³மா – வேதங்களின் ஞானமாக விளங்குபவள், ஸ்வர்கா³பவர்க³தா³ – ஸ்வர்கத்தையும், மோட்சத்தையும் கொடுப்பவள், ஸத்³ய꞉ப்ரஸாதி³னீ – உடனே கிருபையை அளிப்பவள்,அவ்யாஜ கருணாமூர்த்தி காரணம் இன்றி கருணை புரிபவள். இவ்வாறு லலிதையின் சஹஸ்ரநாமமும் கந்தர் அனுபூதியும் ஒரே பரம்பொருளை பேசுவதை இந்த பாடலிலும் காணலாம்

Leave a comment