செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்

செய்யுள் 27
மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கிதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே.
பொருள் – மின்னலை ஒத்த வாழ்வை நான் இதுநாள் வரை விரும்பினேனே , இதுவே விதியின் பயனோ. பொன் போன்ற அருமை வாய்ந்தவரே , பொன் நிறத்தவரே , மாணிக்கம் போன்றவரே, உண்மை பொருளே, முக்தியளிக்கும் அருள் வடிவானவரே, அரசே மயில் மீது வரும் தேவாதி தேவனே, நீங்கள் இந்துமா எனக்கு இந்த நிலை !

சாதகன் ஒவ்வொரு பாடலிலும் சற்றே முதிர்ந்து வருவதும், அவனுடைய மன ஓட்டமும் , இறைவனின் மீதுள்ள புரிதலும் மாறி வருவதையும் நாம் காண முடிகிறது, போன பாடலில் இறைவனின் கருணை இல்லை என்று முதலில் புலம்பியும் , பின் இறைவன் கருணைக்கு காரணம் தேவை இல்லை என்றும் இரண்டாவது புரிதல் பிறக்கிறது. இந்த பாடலில் உலக வாழ்வை மாயை என்றும், இந்த வாழ்வும் கர்ம வினையின் பயன் என்றும் உணர்கிறான்.
மின்னல் போன்று ஒரு நொடியில் தோன்றி மறையும் வாழ்க்கையை நான் விரும்பினேன் என்று கூறும்போதே இறைவன் இந்த விதியை விதிக்கவில்லை என்ற உண்மை சாதகனுக்கு புரிகிறது, மேலும் அது விதி, அந்த விதியை விட்டு வெளியேற வேண்டும் என்றால் விதிக்கு அப்பாற்பட்டவராக இருக்கும் இறைவனை சரணடைய வேண்டும் என்றும் சாதகன் புரிந்து கொள்கிறான். இந்த விதியின் பயன் எவ்வாறு வருகிறது என்றும் அருணகிரிநாதர் சொல்லாமல் சொல்கிறார்.
ஒருவனுக்கு கர்ம வினை (நல் வினை , தீ வினை இரண்டும் ) எங்கிருந்தெல்லாம் உருவாகிறது – பொன் – பணம் , தங்கம் மீதுள்ள ஆசை, இங்கு மணி என்ற பதம் இருப்பதிலேயே உத்தமமான தரத்தில் உள்ள பொருள் என்று கொள்ள வேண்டும், ஆகவே முதல் தர பொருட்கள் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை, பலவித பொருட்களை அடைய வேண்டும் என்ற ஆசை ஆகியவையும், இறைவனின் அருளையும் இதனோடு சேர்த்து வேண்டும் என்று நினைப்பதுமே கர்ம வினைகளை சேர்க்கும் ஒரு காரணியாக இருந்திருக்கிறது என்பதை சாதகன் உணர்ந்து கொள்கிறான். இதனால் விதியின் பயனை உணர்ந்து ஏற்று கொள்வதும், இந்த நிலை மாற கருணைக் கடலாக இருக்கும் முருகனிடம் சரணைடைவது ஒன்றே என்றும் புரிதல் ஏற்படுகிறது.
26 மற்றும் 27 பாடல்கள் இரண்டிலும் சாதகன் இறைவன் அருளை வேண்டி மன்றாடுகிறேன், பல பிறவிகளில் பொருளை கெட்டவன் இப்போது அருளை மட்டுமே கேட்கிறான், இந்த செயல் அவனின் ஞானத்தை முதிரச் செய்வதோடு, வைராக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது.
இங்கு இறைவன் ஏன் அருளை கொடுப்பதற்கு கால தாமதம் ஆகிறது என்று நாம் பார்க்க வேண்டும்.
1. சாதகனுக்கு பூரண சரணாகதி வாய்க்கவில்லை – செய்யுள் 26ல் ஆதாரம் இலேன் என்று சொல்வது சரணாகதி இல்லை என்றும் குறிக்கும்
2. வினைகளின் செயல்களால் அறியாமை சூழ்ந்து இருக்கிறது, வினைகள் அனுபவித்து தளர்ந்தால் தான் அறியாமை நீங்க வழி பிறக்கும், சஞ்சித ஆகாமிய கர்மங்களை கூட இறைவன் அழித்தாலும், இந்த பிறவியின் பிராரப்த கர்மத்தை பெரும் பகுதி அனுபவித்த பின் தான் இறைவனின் கருணையே நம் கண்ணுக்கு தெரிகிறது, அதுவரையிலும் இறைவன் அருகிலேயே நின்றாலும் நாம் உணர்வதில்லை என்பதே உண்மை.
இந்த பாடலில் இரண்டாவது கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் போது, சாதகன் இறைவனை அருள் கொடுப்பவர் என்று சொல்லாமல், “அருளே” என்று தான் வேண்டுகிறான், இதிலிருந்தே இறைவன் அருள் வடிவானவர் என்று சாதகன் உணர்ந்து கொண்டது விளங்குகிறது, இந்த உணர்தலே சாதகனை அடுத்த நிலைக்கு இட்டுச் சென்று விடும், அந்த செய்கயை நாம் அடுத்த பாடலில் காணத் தான் போகிறோம்.
இறைவன் ஒருவனே உண்மையான செல்வம், அதனால் தான் அவரை சாதகன் பொன்னே , மணியே என்று அழைக்கிறான், மேலும் எல்லாவற்றிற்கும் உயரிய சாம்ராஜ்யமாக மோட்ச சாம்ராஜ்யம் அளிக்க வல்லவராக இருப்பதாலும் அவரை அரசே என்று அழைக்கிறான், உண்மை பொருளின் உறைவிடமாக இருப்பதால் அவரை பொருளே என்றும், பக்தர்களுக்கு உடனே அருள வேண்டும் என்ற உள்ளம் கொண்டவராதலால் மயிலில் எப்போதும் ஏறி அருளச் செல்ல தயாராக இருக்கிறார் என்றும் சாதகன் இறைவனின் இயல்பை இங்கு புரிந்து போற்றுகிறான்.
லலிதையின் நாமங்களில் சாம்ராஜ்ய தாயினி என்ற நாமம் மோட்ச சாம்ராஜ்யம் அளிக்க வல்லவள் என்றும், தேவி மகாத்மியத்தில் “ஸ்த்ரீ ரத்னம்” என்று இவளை அசுரர்கள் கூறுவதும், “பெண்ணில் நல்லாள்” என்று சைவ திருமுறைகள் போற்றுவதும், அபிராமி அந்தாதியில் பட்டர் “உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்” என்று சொல்வதும் மணி என்ற பதத்தை காட்டும், அருள் என்ற பதத்திற்கு “ராஜத் க்ருபா” என்ற நாமம் கிருபை அளிப்பதில் இவளுக்கு மேல் எவரும் இல்லை என்றும், “ராஜ்ய லட்சுமி”, ராஜேஸ்வரி, ராக்னி, போன்ற நாமங்கள் இவளே அரசிகளுக்கெல்லாம் அரசி என்பதையும், ப⁴க்திமத்கல்பலதிகா என்ற நாமத்தில் பக்தன் கேட்பதெல்லாம் கொடுக்கும் தெய்வாமாக இருப்பதும், க்ஷிப்ர ப்ரசாதினி என்ற நாமத்தில் கேட்டவுடன் கொடுப்பவள் என்றும் பொருள் கொண்டவாறு, அனுபூதியின் பாடல்கள் ஒத்த பொருளை கொண்டு லலிதையின் துதியை பாடுகிறது

Leave a comment