செய்யுள் 28 ஆனா அமுதே அயில்வேல் அரசே

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானாகரனே நவிலத் தகுமோ
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே.
பொருள்:
கெடுதல் ஏதும் இல்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்ல தகுமோ.நான் என்ற என்னை விழுங்கி,தானாக மட்டுமே நின்று வ்யாபித்தவரே.

இந்த பாடலில் அருணகிரிநாதர் மிகுந்த வேதாந்த விஷயங்களையும், தாந்திர உள்ளர்த்தங்களையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சென்ற பாடலில் “பொன்னே , மணியே” என்று இறைவனை புகழ்ந்து, இறைந்து, அவர் தாள் தனில் உண்மையான சரணாகதி ஏற்பட்ட மாத்திரத்தில் சாதகனுக்கு இறைவனின் அருட்கடாட்சம் உடனடியாக கிடைக்கிறது. மேலும் இத்தனை நாட்களாக சாதகன் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகியதுடன், அவனுடைய கர்ம வினைகளின் வெளிப்பாடுகளால் இறைவனின் அருகாமையை உணர முடியாமலும் இருந்தது, ஆனால் இப்போது சரணாகதி ஏற்பட்ட மாத்திரத்தில் அவரின் கிருபை இவனுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.
தாந்திர யோகங்களில், குண்டலினி சக்தியானது விழிப்படைந்து, சோமச்சக்ரம் என்று கூறப்படும் இடத்தை அடையும் சமயம் அமுதமானது சாதகனின் உடலில் சுரக்கும், இந்த அமுதம் சாதகனுக்கு பசி, தாகம், தூக்கம் போன்ற உடலுக்கு தேவையான சக்தியைத் தரும் வெளிப்புறச் சார்புகளை நீக்கும், இந்த அமுதத்தின் பயனால் தான் சித்தர்களும் முனிவர்களும் நெடுங்காலம் தான் உணவு நீர் இன்றி இறை தியானத்தில் மூழ்கி இருக்க முடிகின்றது,இந்த அமுதத்தை தான் அருணகிரிநாதர் சாதகன் இறையருளால் அடைகிறான் என்று இந்த பாடலில் முதல் இரண்டு சொற்களில் கூறுகிறார்.
சாதகன் உடலில் அமிர்தம் சுரந்த பின்பு, இயற்கையின் இடர்கள் ஏதும் இல்லாமல், ஆழ்ந்த தியானம் கைவர பெறுகிறான், அவனால் இறைவனை நெடு நேரம் தியானித்து இறைநிலையிலேயே தன்னை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது, இந்த நிலையில் இறைவனை விட்டு சாதகன் அகலவும் இல்லை, இறைவனிடம் ஒன்றற கலக்கவும் இல்லை, அதே போல் இறைவனை விட்டு பிரிவதும் இல்லை, எப்போதும் இறைவனுடன் இருக்கிறான், அதனால் தான் அருணகிரிநாதர் இந்த நிலையைக் கூறும் போது “அயில் வேல்” என்று வேலின் கூர்மையை பற்றி கூறுகிறார், இங்கு சாதகன் இறைவனின் சொரூபத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறான் என்பது,வேலின் கூர்மையை கொண்டு விவரிக்க படுகிறது, அதே போல் மோட்சத்தின் மூன்று நிலைகளையும் அருணகிரிநாதர் இங்கு இந்த பாடலின் ஒரு வரியிலேயே உணர்த்துகிறார்.
1. சாலோக முக்தி – இறைவனின் உலகத்திலேயே இறைவனுக்கு சேவை செய்தே தாமும் உடன் இருப்பது, உதாரணம் நாயன்மார்கள் கைலாயம் சென்றது, இங்கு இறைவனின் கை வேல் சாலோக முக்திக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது, வேலானது இறைவனின் ஆயுதமாக இருந்து சேவைகள் பல செய்து இறைவனின் உலகத்தில் இருக்கிறது
2. சாமீப முக்தி – இறைவனுக்கு அருகாமையிலேயே எப்போதும் இருப்பது, இதற்கு உதாரணம் ஹனுமான் எப்போதும் ராம பிரானுக்கு அருகிலேயே வாசம் செய்வது, இங்கும் வேல் இறைவனின் கையை விட்டு பிரிவிதே இல்லை, வேல் இல்லாமல் முருகன் இருந்ததே இல்லை.
3. சாரூப முக்தி – இறைவனின் சொரூபத்தையே சாதகன் அடைவது, அல்லது இறைவனைப் போலவே சாதகன் இருப்பது, பல மகான்கள் இறைவனாகவே காட்சி அளித்தது இதனால் தான், இங்கும் முருகனை வழிபடுபவர்கள் வேலையே முருகனாக வழிபடும் வழக்கம் உண்டு, மருத மலையின் அடிவாரத்தில் வேல் கோட்டம் என்ற இடத்தில் முருகனை வேல் வடிவில் வழிபடுவது ஒரு விதமான சாரூப முக்தியே, இந்த ஒரு பாடலின் அரை வரியில் அருளாளர் சாதகன் அடையும் பேறுகளை கூறுகிறார், இறைவனின் தியானம் எத்தகைய வலிமையானது என்றும் கூறுகிறார்.
இரண்டாவது பிரிவின் வரும் “யானாகிய என்னை விழுங்கி” என்ற பதம் சாதகனின் அகங்காரம் அழிந்து பூர்ணமாக இறை நிலையை அறிந்து விடுகிறான் என்று கூறுகிறார், இங்கு “யான்” என்ற “நான்” ஆகிய அகங்காரத்தை, இவ்வளவு நாட்களாக இந்த “நான்” தான் என்னுடைய உண்மை ஸ்வரூபம் என்று நினைத்திருந்தேன், ஆனால் இந்த “நான்” என்ற தன்மை அழிந்த பின், இறைவன் மட்டுமே வியாபித்து இருக்கும் நிலையில், இந்த ஸ்வரூபம் தான் தன்னுடைய உண்மை நிலை என்று சாதகன் உணருகிறான். இந்த நிலையே வேத வாக்கியம் கூறும் “தத்வமஸி”, இங்கு “தத்” என்று கூறப்படும் இறைவனும் “த்வம்- நீ என்று பொருள் படும்” இருவரும் ஒருவரே என்று பொருள் படும் படி “அஸி” என்ற பதம் வருகிறது, இங்கு சைவத்தின் அத்வைத சித்தாந்தம் வெளிப்படுகிறது.
இந்த பாடலில் “நவில தகுமோ” என்று கூறுவது , இறைவனின் அனுபவத்தை சொல்ல முடியவில்லை அல்லது சொல்லி புரிய வைக்கும் படியில் அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடைக்க முடியவில்லை என்றும் கூறுகிறார், அனுபூதியில் “பேசா அனுபூதி” பிறந்ததுவே என்று கூறுவதும் இதையே தான்.

லலிதையின் நாமங்களில் “சுதா சாராபி வர்ஷினி” என்று லலிதை தான் இந்த அமுதத்தை பொழிய செய்கிறாள் என்றும், “ஆத்மா” , “பரமா” என்ற நாமங்களில் இவளே எல்லாருள்ளும் ஆன்மாவாக இருக்கிறாள் என்றும், “முக்தி நிலையா” என்ற நாமத்தில் அணைத்து விதமான முக்திகளையும் அருள்பவள் இவளே என்றும், “நிர்வாண சுக தாயினீ” என்ற நாமத்தில் பந்தங்களில் இருந்து விடுவிப்பவள் என்றும், இந்த பந்தங்கள் உடல்,மனம், ஆன்மா என்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். இவ்வாறாக லலிதையின் நாமங்களை கந்தர் அனுபூதியும் ஒரே இறைவனை இரு வேறு விதமாக வழிபட்டு சாதகனுக்கு வேண்டிய ஆன்ம முன்னேற்றத்தை கொடுக்கிறது.

Leave a comment