செய்யுள் 29 இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ

இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே.
பொருள் : மல்யுத்தம் செய்யும் வீரனே, அந்த வீரம் பொருந்திய உன் பன்னிரு தோள்களில் என் பாடல்களை மாலையாக அணிந்து கொண்டவரே, ஒளிவீசும் வேலாயுதத்தை உடையவரே ! என்னை இந்த மாயமான உலகில் தள்ளி விட்டீரே! என்னுடைய அறியாமையை பொறுக்கவில்லையே.

சென்ற பாடலில் சாதகன் இறை அனுபவம் பெறுகிறான், ஆனால் மீண்டும் இறை நிலையிலிருந்து தன் வாழ்க்கையின் அனுபவ நிலைக்கு வருகிறான், இறை நிலையை அனுபவித்த ஒருவன் மீண்டும் விதிப்பயனால் அமைந்த சாதாரண நிலையை அடைவது பெருந்துயரைத் தரும், அந்த துயரின் வெளிப்பாடே இந்த பாடல். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இறை நிலையை கண்ட பின்னும் ஏன் சாதகனுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று நாம் சற்று ஆராய வேண்டும்.
இறைவன் கருணையே வடிவாக இருந்தும் அவரை அறிந்த பின்னும், அருணகிரிநாதர் இங்கு “பொல்லேன் அறியாமை பொருத்திலேயே” என்று கூறுகிறார், இதிலிருந்தே தம் கர்ம வினைகளின் காரணம் தன்னுடைய பொல்லாத செயல்கள் தான் என்று சாதகன் உணர்ந்து கொண்டது தெரிகிறது, இறைவனின் கருணை அளப்பரியதாக இருந்தாலும் கர்ம வினைகள் சாதகனை அறியாமையிலேயே தான் இழுத்து விடுகின்றது, இந்த அறியாமை மறைய இறைவனும் அருள் செய்யவில்லை என்பது “பொறுத்திலேயே” என்ற பதம் உணர்த்துகிறது.
சாதகன் தன்னை “பொல்லேன்” என்று கூற மற்றொரு காரணமும் உண்டு, அவன் நீண்ட மற்றும் ஆழ்ந்த இறை நிலை தியானத்தில் இருந்த போது அவனுடைய அத்துணை ஜென்மங்களின் பதிவுகளையும் அவனால் பார்க்க முடிந்து, தன்னுடைய இந்த நிலைக்கு காரணமும் அவனுக்கு புலப்படுகிறது, தாம் பொல்லாத செயல்களை செய்ததால் தான் இந்த நிலைக்கு ஆளானோம் என்று புரிந்ததால் தான் “பொல்லேன்” என்று தன்னை தானே கூறிக் கொள்கிறான், மேலும் இந்த செயல்கள் அத்துனையும் அறியாமையால் தாம் செய்ததும், அந்த அறியாமையை இறைவன் மன்னிக்காததும் அறிந்த பிறகு அவனுடைய துயரம் சுய பச்சாதாபம் ஆகிறது.இதுநாள் வரை அவனுக்கு இந்த உலகம் மட்டுமே உண்மை என்று நம்பி இருந்தவன் இப்போதோ இறைவன் ஒருவனே உண்மையானவன் மற்றவை எல்லாம் இல்லாமல் இருப்பது போல் ஒரு தோற்றமே என்று உணர்ந்த பிறகு தான் இந்த உள்ளதை “இல்லாத மாயை” என்று கூறுகிறான். மேலும் இன்னும் கர்ம வினைகள் முடியாது இருப்பதால் தான் தம்மால் இறைவனை முழுமையாக அடைய முடியவில்லை என்றும் உணர்ந்து கொள்கிறான்.
இறைவனை தம்மால் இயன்ற வரை கவிகள் புனைந்து புகழ்கிறார் அருணகிரிநாதர், இவ்வாறு கவிகளால் மகிழ்ந்த முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி அளித்து உபதேசம் நல்கி, தியானம் கூட்டி, சமாதியில் இருத்தி இன்னும் அவரை ஆன்மீக வாழ்வில் மேல் நிலைகளுக்கு எல்லாம் அழைத்து செல்கிறார்.
இவ்வாறு நடப்பதற்கெல்லாம் காரணம் அருணகிரிநாதர் இறைவனை பாடிய கவிகள் தாம், அதனால் சாதகன் இறைவனின் புகழ் பாட இறைவன் அவற்றை மகிழ்ந்து ஏற்று சாதகனை ஆட்கொள்கிறார் என்றும், இறை நாமத்திற்கும் புகழுக்கும் மட்டுமே உள்ள தனி மகிமை இந்த அருள் என்பதும் இதிலிருந்து புரிகிறது.இதை உணர்த்தும் வகையிலே தான் “என் சொல்லே புனையும் சுடர் வேலவனே” என்ற வரி இந்த பாடலில் வருகிறது, மேலும் இறைவனின் ஒரு குணமான வீரத்தை அதுவும் மல்யுத்தம் புரிபவன் என்று இங்கு அருணகிரிநாதர் கூறுகிறார், எத்தனையோ வித்தைகள் இருக்க இறைவனை மல்யுத்தம் புரிபவன் என்று ஏன் கூற வேண்டும்?
சற்றே நாம் மற்றைய புராணங்களை நோக்கினால், இறைவன் மல்யுத்தம் ஏனைய இடங்களிலும் புரிந்திருக்கிறான், கிருஷ்ணனாக அவதரித்த போது கம்சனை வதம் செய்த போது, சிவபெருமான் வேடனாக வந்து அர்ஜுனனின் அகங்காரத்தை அழிக்க மல்யுத்தம் புரிந்தது, மது கைடபர்களுடன் விஷ்ணுவாக இருந்து மல்யுத்தம் புரிந்தது, தேவி மகாத்மியத்தில் தேவி சும்பனுடம் மல்யுத்தம் புரிந்தது என்று நாம் காணலாம், இந்த அத்தனை இடங்களிலும் இறைவன் அகங்காரத்தை அழிக்க மட்டுமே மல்யுத்தம் புரிந்திருக்கிறான், இந்த அகங்காரம் ஆனது இறைவனின் கையால் மட்டுமே அழியும், இதற்க்கு காரணம், அகங்காரம் ஆனது கோடான கோடி ஜென்மங்களாக மிகுந்த ஆழமாக தான் என்ற ஒரு மாயமான ஒரு அடையாளத்தை உண்டு பண்ணி, ஜீவாத்மாவை நித்திய சிறை கைதியாக வைத்திருந்தது, புராணங்களில் கூறப்படும் அத்துணை அசுரர்களும் அகங்காரத்தின் அடையாளமே, இந்த அகங்காரமானது எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று தான் கடைசி வரை முயற்சிக்கிறது, ஆனால் இறைவனின் கை பட்டதும், சூரியனைக் கண்ட பனி போல உருகி விலகி விடுகிறது. அதனாலே தான் இறைவன் மல்யுத்த பிரியனாக நிறைய இடங்களில் உருவகப்படுத்த படுகிறான். இங்கோ முருகப்பெருமான் அடியவரின் துயர் தீர்க்க தம்முடைய பன்னிரு தோள்களாலும் மல்யுத்தம் புரிந்து காக்கிறார் என்றும் இறைவன் தம் அறியாமையை மன்னிக்கவில்லை என்று முதல் வரியில் வருந்திய சாதகன் அகங்காரத்தை அழிக்கவே இறைவன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று முடிவில் அறிந்து கொள்கிறான்.
லலிதையின் நாமங்களில் “வீரமாதா”, “வீரா”, “வீர கோஷ்டி ப்ரியா” போன்ற நாமங்கள் சக்தியின் வீரத்தை பறைசாற்றி வரும், அதே போல் “மகா மாயா”, “மாயா”, “விஷ்வ ப்ரஹ்மண காரிணி” – உலகத்தை மாயையின் சுழற்சியில் நடத்துவள் போன்ற நாமங்கள் இந்த பாடலில் கண்ட முதல் வாரியான “இல்லே எனும் மாயை” பொருள் கொண்டு வரும். “நாம பாராயண ப்ரீத்தா” என்ற நாமம் நாமங்களை கூறுவதால் மகிழ்பவள், “அநித்ய திருப்தா” என்ற நாமம் – சிறிய விஷயங்களை செய்வதன் மூலமே திருப்தி கொண்டு அருள்பவள் என்றும், “கலாமாலா” என்ற நாமத்தில் கலைகளை மாலையாக விரும்பி அணிபவள் என்ற பொருளைக் கொண்டு “சொல்லே புனையும்” என்ற பதத்திற்கு சான்றாக வரும்.
இவ்வாறாக லலிதையின் நாமங்களை கந்தர் அனுபூதியும் ஒரே இறைவனை இரு வேறு விதமாக வழிபட்டு சாதகனை அடுத்த நிலைக்கு படி படியாக அழைத்து செல்கிறது.

Leave a comment