செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்த (அ)துதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே.
பொருள் : சூரியன் உதயமாகும் அல்லது அஸ்தமிக்கும் நேரங்களில் இருக்கும் செம்மை நிறமான வானத்தைப் போல திருமேனி கொண்டு பிரகாசிக்கும் வேலவனே,தங்கள் உணர்ச் செய்த பரப்ரஹ்ம அனுபவத்தை எவ்வாறு நான் ஒருவருக்கு சொல்வது, இவ்வனுபவம் ஒவ்வொருவரும் தமக்கு தாமே உணர்ந்தால் அன்றி இதை சொற்களால் எவ்வாறு விவரிக்க முடியும்.
சாதகன் இவ்வளவு நாட்களாக தன் ஆன்மீக முயற்சியில் பல்வேறு படிகளை கடந்து வந்திருக்கிறான். முதலில் நாம ஜெபத்தின் மகிமை உணர்ந்து, பின் இறைவனின் புகழ் பாடி, குருவை அடைந்து மெய்ப்பொருள் உபதேசம் பெற்று, பின் தீட்சை அடைந்து, தியானம் செய்யும் வழி முறைகளை அறிகிறான். பின்பு மிகுந்த முயற்சிகள் செய்து தியானம் முதலிய பயிற்சிகளை செய்யும் பொழுது முதலில் ஸ்தூலமாக அவனுடைய கர்ம வினைகள் அவனை இறைவனை அடைய தடைகளை ஏற்படுத்துகிறது, அவைகளை கடந்தால் பின்பு சூட்சுமமாக தடைகள் வருகிறது, சாதகன் அதையும் கடக்க மிகுந்த பாடு பட்டு , இறையருளால் சாதகனுக்கு சிறிது நேரம் சமாதி நிலை வாய்க்க சாதகனுக்கு இறைவனின் அனுபவம் கிடைக்கிறது.
சூரியன் உதயமாகும் நேரம் தோன்றும் சிவப்பு நிறமானது, காண்பவர் மனதை கவர்ச் செய்வது அதன் அழகால் மட்டுமல்ல, அந்த சிவப்பு நிறமானது கருணையின் நிறமாகவும் இருப்பதால் தான், அந்த கருணையின் வெளிப்பாடாகவே இறைவன் இருப்பதால் தான் இதற்கு முந்தைய செய்யுள்களில் “கையோ அயிலோ கழலோ” எல்லாம் சிவந்த மயமாக இருக்கும் வேலவனே என்று அருணகிரிநாதர் வியந்து கூறுகிறார்.இங்கும் அந்த அழகிய வேலனின் உருவ வருணனையே மீண்டும் வியக்க படுகிறது “செவ்வான் உருவில் திகழ் வேலவன்” என்ற பதம், இதையே குறிக்கிறது.
இங்கு வானை இறைவனோடு ஒப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்க கூடும், ஐம்பூதங்களில் மற்றைய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய அனைத்தும் வானில், அதாவது ஆகாயத்தில் அடக்கம். ஆகாயம் மாத்திரம் எல்லாவற்றையும் தனக்குளேயே வைத்து, தாமும் எல்லாவற்றிலும் இருக்கிறது, கம்பன் கூறும் “உலகம் யாவையும் தாமுளவாக்களும்” என்ற பதம் இங்கு ஆகாயத்திற்கு மட்டுமே பொருந்தும்.
இவ்வாறான ஆகாயத் தத்துவத்தை மட்டுமே பரப்பிரம்மத்தின் ஒரு குணமாக நம்மால் ஒப்பிட்டு கொள்ள முடியும், ஏன் என்றால் ஆகாயம் மட்டுமே பர பிரம்மத்தை போல் ஆரம்பமும், முடிவும் இல்லாதது, பரப்பிரம்மத்தின் சகுண வடிவுகளே அவர் எடுக்கும் பல்வேறு உருவங்கள், அவை சிவன்,விஷ்ணு, முருகன், அம்பாள் முதலிய அனைத்து வடிவங்களையும் தன்னுடன் உள்ளடக்கி கொள்வது போல, ஆகாயமும் உலகில் உள்ள அனைத்து உருவம்,அருவம் மற்றும் அருஉருவங்களை தன்னுள் அடக்கிக் கொள்கிறது, எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி, எல்லாவற்றிலும் தானும் இருந்து எங்கும் நிறைந்த ஒரு பொருளாக ஆகாயம் மட்டுமே இருப்பதால் தான் இங்கு அருணகிரிநாதர் செவ்வான் உருவை முருகனின் பரப்ரஹ்ம வியாபகத்தோடு ஒப்பீடு கொள்ள எடுத்து கொள்கிறார்.
எவ்வாறு ஒருவர் வானத்தை அளக்க முடியாதோ, அவ்வாறே ஒருவரால் இறைவனின் அனுபவத்தை வார்த்தைகளில் அளக்கவோ அடைக்கவோ முடியாது, தாம் கண்டதை இன்னொருவர் கேட்டாலும் சொல்ல முடியாது. இந்த அளவிட முடியா அனுபவத்தை எவ்வாறு சொல்வது என்று சமாதி நிலை வாய்த்த ஒரு சாதகன் எண்ணுவதே இந்த பாடலின் உட்கருத்து.
குருவை அடைந்த சீடன் , இறை அனுபவத்தை கேட்டாலும் குருவால் அதை விவரிக்க இயலாது, ஆனால் இறை அனுபவம் பெற்ற குருவால் ஒரு சீடனை அந்த அனுபவத்தை அவனும் பெறுவதற்கு வழிகாட்ட முடியும், சீடன் தன் முயற்சியால் மட்டுமே இறை அனுபவத்தை பெற முடியும், ஒரு நல்ல குருவானவர் அதற்கான வழிமுறைகளை சீடனின் கர்ம வினைகளுக்கு ஏற்ற வாறு வகைப்படுத்தி சீக்கிரத்தில் இறை அனுபவம் அடையும் மார்க்கத்தை காட்டுவார்.
லலிதையின் சஹஸ்ரநாமத்திலும் இந்த செவ்வண்ணம் மிகுந்த இடங்களில் குறிப்பிடப்படுகிறது, உதாரணமாக சஹஸ்ர நாமத்தின் த்யான ஸ்லோகம் ஆரம்பிப்பதே “அருணாம் கருணாம்” என்று சிவப்பை பிரதானப்படுத்தி, செவ்வண்ணமே கருணையின் வண்ணம், லலிதையே கருணையின் உருவம் என்று தான்.
அதே போல், “உதயத் பானு சஹஸ்ராபா” என்று உதிக்கின்ற சூரியனின் கிரணங்களை போல் பிரகாசம் உடையவள் என்று, அனுபூதியில் கையாண்டுள்ள இதே உவமை தான் லலிதையின் வெளிப்பாடாகவும் வாக்தேவிகள் கூறுகின்றனர்.
“அருண அருண கௌசும்ப வஸ்த்ர பாஸ்வத் கடீ தடீ ” என்ற நாமத்தில், செவ்வனமாக இருக்கும் லலிதை செவ்வண்ண பட்டை இடுப்பில் அணிதிருக்கிறாள் என்று கூறப்படுகிறது, இதேயே அருணகிரிநாதர் கூறும் பொது முருகனை “கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய்” என்று கூறுகிறார். “சர்வ அருணா” என்ற நாமம் அனுபூதிக்கு மெருகேற்றுவது போல் லலிதையை முழுவதும் சிவப்பானவள் என்று கூறும்.
குண்டலினி தியானத்தில் பராசக்தியானவள் ஒரு சிவந்த மின்னலை போல் தோன்றி மறைவாள் என்று லலிதையின் நாமங்களில் பல இடங்களில் மறை பொருளாக யோக மார்க்கத்தை பேசும், இந்த பாடலில் அருணகிரிநாதர் கூறும் செவ்வான் உருவில் திகழ் வேலவன் என்ற பதமும், சாதகனுக்கு சமாதி நிலை சிறிது நேரம் வாய்க்கப் பெற்ற விதமும், அவனுடைய குண்டலினி சக்தியானது சஹஸ்ராரம் சென்று அவனுக்கு பர பிரம்ம அனுபவத்தை தந்ததைத் தான் குறிக்கிறது.
தியானம் கைவர பெற்ற சாதகன் படிப்படியாக முன்னேறி, குண்டலினி சக்தி விழிப்படைந்து சஹஸ்ராரம் அடைந்து, சமாதி நிலை கைவர பெற்று, மீண்டும் மூலாதாரம் சென்று விடுகிறது, மூலாதாரம் சென்ற பின்பு, சாதகன் தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறான். இந்த பாடல் சாதகனின் இறை அனுபவத்தை பற்றி தான் பேசுகிறதே தவிர, அவன் இறை அனுபவத்தில் நிலைத்து விட்டான் என்று கொள்ள முடியாது. அடுத்த பாடலில் இதற்கான காரணத்தை காண்போம்.
