செய்யுள் 31 பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே

பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தனதாம் உளவோ
வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே.
பொருள்:
அழிந்துவிடும் மாயையாக இருக்கும் இந்த பாழ்படும் வாழ்க்கையில் என்னை வீழ்த்தி விட்டாயே முருகா, நான் செய்த கீழ்த்தரமான வினைகள் இன்னும் நிறைய உள்ளதோ, என்னை மீண்டும் இந்த மாயையில் தள்ளியதும் உன் கருணையால் தான் ஆதலால் நீ வாழ்வாய், மயில் மீது வரும் பெருமானே!

இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தால் முருகனை சாதகன் திட்டுவது போல் இருக்கும், சமஸ்க்ரிதத்தில் “நிந்தா ஸ்துதி” என்று கூறுவர், அதாவது இறைவனை துதி செய்வது கூட அவரை வைய்வது போல் அமைந்திருக்கும். இந்த பாடலிலும் அவ்வாறே இருப்பது போல் தெரியலாம். சாதகன் தான் இறை அனுபவம் பெற்று மீண்டும் தன்னுடைய கர்ம வினை சூழ்ந்த சாதாரண வாழ்க்கைக்கு திரும்புகிறான், முந்தைய பாடலில் சமாதி நிலையில் பெற்ற அனுபவத்தை தம்மால் விவரிக்க இயலவில்லை என்று சொன்ன சாதகன் இப்போது மானுட வாழ்வில் படும் துன்பங்களை மாயை என்று தீர்க்கமுற அறிந்து கொண்டு தெளிவது போல் உள்ளது இந்த பாடல்.
சாதகன் ஆன்ம அனுபவம் பெற்று, அதில் சில நேரம் நிலைத்து இருக்கிறான், பின்பு தன் கர்ம வினை சூழ்ந்த வாழ்க்கை நோக்கி வரும் போது இறைவனின் கருணையை தான் இங்கு வியந்து அவரை வாழ்த்துகிறான், இறை நிலையில் அல்லது சமாதி நிலை செல்வதற்கு முன், ஆக்ஞா என்று சொல்லப்படும் நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண் இருக்கும் சக்கரத்தை குண்டலினி சக்தி அடையும் போது, சாதகனின் கர்ம வினைகள் முழுவதும், அவனுடைய இன்ப துன்பத்திற்கான காரணங்கள் முழுவதும் அவனுக்கு தெரிந்து விடுகிறது, அந்த நிலையில் அவனுடைய நிலையை எண்ணி அவனை ஒதுக்கி விடாமல் அவன் மேல் கருணை கொண்டு, அவனையும் மதித்து இறை அனுபவத்தை நல்கியதால் இறைவனை “வாழ்வாய் இனி நீ” என்று போற்றுகிறான்.
இந்த பாடலில் “படு மாயை” என்று சொல்லப்படுவது, அழிய கூடிய மாயையான இந்த உலகம் மற்றும் உலகியல் வாழ்க்கையை, இது அழிந்து விடும் என்று தெரிந்தும், அதன் பால் தாம் விழுவது கண்டு தன்னை தானே நொந்து, அதற்கான காரணமும் அறிந்து கொண்டு தெளிவதே முதல் இரண்டு வரிகளில் அருணகிரிநாதர் நமக்கு உரைக்கும் உண்மை. கர்ம வினைகள் முடியாமல் உலகை விட்டு நீங்கவும் முடியாது, நெடு நேரம் இறை அனுபவத்திலும் இருக்க முடியாது. கர்ம வினையை அனுபவித்தே அழிக்க வேண்டும், இங்கு அவர் கூறும் கர்ம வினை “ப்ராரப்தம்” என்ற வகையை.
வினை மூன்று வகை படுகிறது “சஞ்சிதம் , பிரார்ப்தம், ஆகாமியம்” என்று, சஞ்சிதம் என்பது பல ஜென்ம வினைகளின் ஒட்டு மொத்த தொகுப்பு, பிரார்ப்தம் என்பது தற்போது எடுத்துள்ள பிறவியில் சஞ்சித வினையில் ஒரு சிறு பகுதியை நீக்குவதற்கு எடுத்து வந்தது, இந்த பிராரப்த வினை நம்மை சுற்றி உள்ள குடும்பம், நண்பர்கள்,எதிரிகள் என அத்தனை பேருடனும் நம்மை இணைக்கும் ஒரு கயிறு போல் இருக்கும், சாதகன் என்ன தான் இறைவனை உணர்ந்தாலும் மற்றைய நம்முடன் அல்லது நம் பிராரப்த வினையுடன் தொடர்பு கொண்டவர்களும் உணர்ந்தால் தான் இந்த வினை மறையும் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
சாதகன் ஆகையால் தன்னுடைய பிராரப்த வினையை, தன்னை சார்ந்தோர்களுடன் அனுபவித்து தான் கழிக்க வேண்டியிருக்கிறது, ஆனால் இறை அனுபவம் பெற்ற படியாலும், வினையின் காரணம் தெரிந்ததாலும் சாதகன் இந்த அனுபவங்களை ஒரு பாரமாகவோ அல்லது வலியாகவோ கருதுவதில்லை, மாறாக வினை தீர்வது அவனின் இறை நிலையை நிலைக்க செய்யுமாதலால், அவன் சீக்கிரம் மாயை நீங்கி, இறை நிலையில் என்றும் நிலைத்திருக்கவே விரும்புகிறான். இந்த பிராரப்த கர்ம நீங்குவதற்காகவே இறைவன் இறை நிலையில் இருந்து மீண்டும் தன்னை மாயையில் வீழ்த்திய கருணை கண்டு வாழ்த்துவதாக தான் இந்த பாடல் அமைந்துள்ளது.
லலிதையின் நாமங்களில் “மித்²யாஜக³த³தி⁴ஷ்டா²னா” – உலகின் மாய தோற்றத்திற்கு காரணம் என்றும், அவளே முக்தி தர வல்லவள், முக்தி ரூபமாக இருப்பவளும் என்று “முக்திதா”, “முக்தி ரூபிணி” என்ற நாமங்கள் இந்த பாடலில் உள்ள பொருளில் வரும், “ப⁴வரோக³க்⁴னீ” – பிறவியால் வரும் துன்பத்திற்கு நெருப்பாக இருப்பவள், “ப⁴வசக்ரப்ரவர்தினீ” – பிறவி சக்ரத்தை நடத்துபவள் என்றும் இந்த பாடலில் எவ்வாறு முருகப்பெருமான் சாதகனை அவனுடைய மாய வாழ்விற்கு மீண்டும் அனுப்பி அவனுடைய கர்மவினையை அழிக்கிறாரோ அதே போல் பிறவி சக்ரத்தை நடத்தி லலிதையும் சாதகனின் கர்மத்தை தீர்க்கிறாள்.
இந்த பாடலில் சாதகன் தியானம் செய்வதன் மூலம் தான் வினையை அழிக்கிறான், இறைவனை அடைகிறான் அதே போல் லலிதா சஹஸ்ரநாமத்திலும் “அந்தர் முக சமாராத்யா” என்ற நாமத்தில் உள்முகமாக அதாவது தியானத்தின் மூலம் தான் அவளை அடைய முடியும் என்பதும், கவனத்தை வெளிப்புறத்தில் அல்லது உலக வாழ்வில் செலுத்துவதால் அவளை அடைவது கடினம் என்றும் “பஹிர் முக சுதுர் லபா” என்ற நாமத்திலும் அறிய முடிகிறது.
ஒரே இறைவனை பல்வேறு மொழிகளில் பல்வேறு வடிவங்களில், அவனுடைய குணங்களை போற்றி வழிபட்டாலும், தியானம் செய்து அவனை அடைவதே ஒரே வழி என்று கந்தர் அனுபூதி மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் ஆகிய இரு நூல்களும் சாதகனுக்கு சுட்டி காட்டுகிறது.

Leave a comment