கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ
கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலைகூறிடு வாகையனே.
பொருள்:
வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையை மணந்தவரே, கிரவுஞ்ச மலையை வேலால் பிளந்து கூறிட்டு வெற்றியின் அடையாளமாக வாகை மலர்களை சூடியவனே, சாத்திர நூல்களை கொண்டு பல வித தர்க்கங்களை செய்தும், அந்த சாத்திர அறிவில் சிக்கி கொண்டு வெளியில் வர முடியாத நிலை வராதவாறு என்னை காப்பாய் முருகா.
முந்தைய பாடல்களில் சாதகனுக்கு ஆத்மானுபூதி ஏற்படுவதும் அதனால் அவன் வாழ்வை பாழ் வாழ்வு என்று அறிந்து கொண்டதையும் பார்த்தோம். கர்ம வினைகள் அவனிடம் மண்டி இருப்பது தெரிவதும் அதனை அனுபவித்து முடித்தால் அவன் இறை நிலையில் நிலைத்து இருக்க முடியும் என்பதால், கர்ம வினைகளை களைய அவன் எடுக்கும் முயற்சிகளை உலக வாழ்வில் உள்ளவர்கள் சாத்திர நூல்களைக் கொண்டு மிகவும் தடுப்பதை இந்த பாடல் குறிக்கிறது.
இறை நிலையை அடைய எண்ணிய சாதகன் கீழ்கண்ட பரிணாம வளர்ச்சிகளை அடைவதை அருணகிரிநாதர் பல்வேறு பாடல்களில் உணர்த்துகிறார்.
வைராக்கியம் முளைவிடுதல் – நான்காவது செய்யுளில் “வளை பட்ட கைமாதோடு மக்கள் எனும் தளை பட்டழிய தகுமோ” என்று நினைக்கிறாரன்
பின்னர் “மட்டூர் குழல் மங்கையர் மையல் வலை பட்டூசல்” என்ற பாடலிலும் “பேராசை எனும் பிணியிற் பிடி பட்டு” என்ற பாடலிலும் அந்த வைராக்கியம் ஆனது மேலும் வளர்கிறது
இந்த வைராக்கியம் மேலும் “தியாகம்” அல்லது சந்நியாசம் என்று மலர்கிறது. அந்த சந்நியாசத்தின் பலனாக “ஞானம்” அல்லது “மோட்சம்” என்ற பழமாக “அனுபூதி” என்ற இறை அனுபவம் கிடைக்கிறது. இங்கு அருணகிரிநாதர் சந்நியாசம் என்று சொல்வதை, குடும்பத்தை விட்டு துறவறம் மேற்கொள்வது என்று பல்வேறு உரைகளில் நாம் காண்கிறோம், ஆனால் இங்கு சற்று வேறு ஒரு கோணத்தில் சந்நியாசம் அல்லது தியாகம் ஆகிய நிலைகளை நாம் சிந்திக்க தலை பட்டிருக்கிறோம்.
சந்நியாச தீக்கை என்பது, ஒரு சாதகன் தன் குடும்ப வாழ்வில் இருந்து பிரிந்து அங்கு அவன் கர்ம வினைகள் நீங்கிய நிலையில், குருவானவர் அச்சாதகனிடம் வைராக்கியம் இருப்பதை நடைமுறையில் அறிந்து கொண்டு, பல்வேறு பரிச்சைகள் பல வருட காலம் செய்த பிறகே சந்நியாச தீக்கை அளிக்கிறார்.
அந்த சந்நியாச தீக்கையின் போது, விரஜா ஹோமம் என்ற வேள்வி நடைபெறும், அந்த வேள்வியில் சாதகனின் எஞ்சிய சில கர்ம வினைகளையும் பரம்பொருளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது, இந்த வேள்வியில் மஹா நாராயண உபநிஷத்தின் மந்திரங்கள் கொண்டு வேள்வியில் ஆகுதி கொடுக்க படுகிறது. மேலும் அந்த வேள்வியின் முடிவில் சாதகன் தனக்கு தானே தர்ப்பணங்கள் கொடுத்து விட்டு, தன்னுடைய உலக வாழ்வு முடிவதை குறியீடாக அங்கு வெளிப்படுத்திகிறான், அதன் பிறகு கங்கையில் குளித்து வெறும் கௌபீனத்துடன் சென்று, தன் குருவிடம் காவி உடை பெற்று கொள்கிறான். அந்த நேரத்தில் குரு, சீடனுக்கு புதிய பெயர் ஒன்றும் வைக்கிறார் அல்லது அருளுகிறார், இப்படி ஒரு சாதகனுக்கு கிடைக்கும் பெயர்கள் “சரஸ்வதி”, “பாரதி” போன்ற பெயர்களை கடைசியாக கொண்டிருக்கும். குருவின் பரம்பரை பொறுத்து இந்த பெயர்கள் மாறுபடுகிறது உதாரணமாக சுவாமி சிவானந்தர், ரிஷிகேசத்தில் அவருடைய சீடர்களுக்கு “கிருஷ்ணானந்த சரஸ்வதி” , “சின்மயாந்த சரஸ்வதி”, “சிதானந்த சரஸ்வதி” போன்ற நாமங்களை வழங்கியிருக்கிறார்.
இந்த நாமத்தோடு துறவறத்தையும் ஏற்கிறார் சாதகன், அதன் பின் சாதகன் துறவறத்தில் இருந்து, வேறு எந்த ஒரு கவனச்சிதறல் இல்லாமல் எப்போதும் இறை அனுபவத்திலேயே வாழ்ந்து, பின் இறைவனிடம் ஒன்றி விடுகிறான்.
இவ்வாறு ஒரு சாதகன் சந்நியாசம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்பு, அதை அவன் தம் சுற்றம் மற்றும் சொந்தங்கள் மத்தியில் அறிவித்த உடன், அவர்களின் கடும் எதிர்ப்பிற்கு ஆளாகிறான், மேலும் சாத்திர நூல்களைக் கொண்டு அவன் முடிவை கடுமையாக மறுதலிக்கவும் செய்கிறார்கள், அந்த விவாதமானது மிகுந்த கார சாரமாக அமைகிறது, அதையே “பதறி கதறி” என்று கூறுகிறார் அருளாளர், ஆனால் இறையருளால் அவ்வாறு அந்த விவாதங்களில் மூழ்கி விடாமல் சாதகன் இறைவனை நோக்கி தாம் எடுத்த முடிவில் நிலைத்து நின்று துறவறத்தை மேற்கொண்டு விடுகிறான்.
இந்த பாடலுக்கும் சக்தி வழிபாடான ஸ்ரீ வித்யா முறைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஸ்ரீ வித்யா தீக்கையிலும் சாதகன் குருவிடம் பல காலங்கள் பயில வேண்டும், குரு சாதகனை இறை அனுபவத்திற்கு பல்வேறு மந்திரங்கள், பூஜை முறைகள் கொண்டு படி படியாக தயார் செய்கிறார், இறுதியாக மஹா சோடஷி என்ற மந்திர தீக்கை அளிக்கும் முன்பு சந்யாச தீக்கை போலவே விரஜா ஹோமம் செய்து, பின்பு சாதகனை கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்து அவன் உடலிலேயே பராசக்தியை மந்திர பூர்வாமாக எழுந்தருள செய்து, பின் புதிய ஆடைகள் அணிவித்து, பதினாறு அட்சரங்கள் கொண்ட மந்திர உபதேசம் செய்யும் முன்பு அவனுக்கு ஒரு புதிய பெயர் அளித்து அதன் பின்னே மந்திர உபதேசம் நல்க படுகிறது. மகா சோடஷி மந்திர தீக்கையே சந்நியாசத்திற்கு நிகராக விளங்குகிறது. ஆனால் மற்ற சமயங்களை போல் இல்லாமல் சாதகன் உலக வாழ்வில் இருந்து கொண்டே சந்நியாசியாக வாழ்கிறான்.இம்மாதிரி சடங்குகள் ஒருவனை மீண்டும் பிரிக்க செய்கிறது, இவர்களே “த்வஜ” என்று இருமுறை பிறந்தவர்களை அழைக்கும் சமஸ்கிருத வார்த்தையாக இருக்கிறது.
இந்த பாடலிலும் அருளாளர் குறிப்பாக சன்யாசம் வாங்கினால் தான் இறை அனுபவம் வாய்க்கும் என்று கூறவில்லை, மாறாக சந்யாச மனோ நிலையானது இறை அனுபவம் வாய்த்தால் வந்து விடுகிறது, உலக வாழ்வில் வாழ்ந்தாலும் பற்று அற்று விடுகிறது. இங்கு உலக வாழ்வில் உள்ள விவாதங்களும் தர்க்கங்களை, சாத்திரங்களை கொண்டு செய்யப்படும் கர்மாக்களிலும் பற்று இல்லாது போவதால் வெகு ஜன விரோதத்திற்கு ஆளாக வேண்டியும் அவர்களை சமாளிப்பதிலேயே காலம் சென்று விடாமல் இருக்க வேண்டும் என்றே கேட்பதே இந்த பாடல். இப்படி எப்போதும் இறை சிந்தனையில் இறைவனுக்காக இருப்பதே தவம் என்ற கொள்கைக்குள் வரும்.
லலிதா சஹஸ்ரநாமத்தில் தாபஸ் ஆராத்யா – தவம் செய்பவர்களால் ஆராதிக்க படுபவள், தவத்தால் ஆராதனை செய்ய படுபவள், தவம் செய்து ஆராதனை செய்தவள் என்றும், ,”த்விஜ பிருந்த நிஷேவிதா” என்ற நாமத்தில் இருமுறை பிறந்தவர்களை காப்பாற்றுபவள் என்று மேற்கூறிய வழிமுறையில் வந்தவர்களை காப்பவள் என்றும் ,யோகினி என்ற நாமத்தில் யோக மார்க்கத்தில் ஈடுபட்டு தவம் செய்பவள், யோகதா என்ற நாமத்தில் யோக மார்க்க தவத்தை கொடுப்பவள் என்றும் முடிவில் முக்திதா என்ற நாமத்தில் முக்தி தருபவள் என்றும் கூறுவது, அனுபூதியில் சக்தி வழிபாடு தோய்ந்து வருவதைக் காண முடிகிறது.
