சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என்று விடப்பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே.
பொருள்:
கந்த பெருமானே! முருகா ! கருணையின் உறைவிடமே, கங்கா நதி தந்த வர பிரசாதமே, கங்கை பெற்ற வரத்தால் உதித்தவனே ! விந்திய மலைக் காடுகள் நடுவில் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாது தவிப்பது போல் குடும்பம், செல்வம் என்ற இந்த வாழ்வில் இருந்து நான் எப்போது மீண்டு வெளியில் வருவேன்.
முந்தைய பாடலில் சாதகன் சந்நியாச ஆஸ்ரமம் தழுவலாம் என்று அவனுடைய முடிவை தெரிவித்த போது, அவன் சுற்றமும் சொந்தமும் மிகுந்த காரசாரமான விவாதங்களில் அவனை உட்படுத்தி இறை நிலையை அடைய முடியாமல் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்த வண்ணம் இருக்கிறது.
கந்தர் அனுபூதியில் 51 பாடல்கள் இருந்தாலும் முதல் முறையாக இந்த பாடலில் தான் கங்கையை பற்றி குறிப்பிடுகிறார் அருளாளர். சாதகன் வைராக்கிய நிலை அடைந்த பிறகு, துறவறம் மேற்கொள்ள விரும்பிய பின் தன் குருவின் ஆஸ்ரமம் தேடி கங்கை கரைக்கு செல்கிறான், அங்கு சென்று தன் குருவை சரணடைந்து துறவறத்தில் ஈடு பட்டு முக்தி நிலையில் லயிக்க தன் விருப்பத்தை தெரிவிக்கிறான். ஆனால் இவன் கங்கை கரையை அடைய வேண்டுமெனில் பாரத தேசத்தின் முழு நீளத்தையும் நடந்தே கடக்க வேண்டிய கட்டாயம் அருளாளர் காலத்தில் இருந்திருக்க கூடும், அவ்வாறு சாதகர்கள் கங்கையை அடைய வேண்டும் எனில் பாரதத்தின் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலையை கடந்து அதன் அடிவாரத்தில் உள்ள காட்டை தாண்டி தான் வடக்கு நோக்கி கங்கையை சென்று அடைய முடியும்.
இவ்வாறான யாத்திரைகள் செல்வது அவ்வளவு எளிதல்ல, விந்திய மலை காட்டை கடப்பதும் எளிதான செயலாக இருக்கவில்லை, இப்போதும் கூட தமிழக காடுகளில் நுழைந்தால் வெளியே வர வழி தெரியாமல் பலர் காணாது போவதுண்டு. இந்த விந்திய மலை காட்டைக் கடக்க முடியாமல் பல யாத்ரீகர்கள் தோல்வியுற்று இறந்து போவதுண்டு, அப்படிப்பட்ட காட்டை தான் இந்த பாடலில் உலக வாழ்க்கைக்கு உதாரணம் ஆக்குகிறார் அருணகிரிநாதர். இதற்கும் ஒரு காரணம் உண்டு, சாதகன் எவ்வாறு ஆன்மீக வாழ்வில் பாதி தூரம் முன்னேறி இருக்கிறானோ அதே போல் உலக பற்றில் பாதி தூரம் விட்டு விலகி விட்டான், ஆனால் பாதி தூரம் மட்டுமே பயணம் ஆகாது, இங்கு விந்திய மலை காடானது பாரதத்தின் பாதி தூரத்தில் இருப்பதும், அந்த காட்டை உலக வாழ்வின் சிக்கலுக்கு உருவக படுத்துவதும், காட்டை விட்டு வெளியே வர வழி தெரியாமல் இருப்பது உலக வாழ்வின் துயரத்தில் இருந்து சாதகன் வெளியில் வர தெரியாததையும் குறிக்கிறது, மேலும் சாதகன் தான் எங்கு செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அறிந்தபடியால் கங்கை கரையை பற்றிய குறிப்பும், எவ்வாறு திக்கற்றவர்க்கு தெய்வமே துணையாக இருக்குமோ, சாதகன் அதை நினைத்தே கங்கையின் புதல்வனான முருக பெருமானை உதவிக்கு அழைக்கிறான்.
இங்கு மந்தாகினி தந்த வரோதயனே என்ற வரி, கங்கை ஈஸ்வர குமாரனை சுமக்கும் வரத்தை ஈசனிடம் இருந்து பெற்றதை குறிக்கிறது. எவ்வாறு கங்கை முருக பெருமானை சரவண பொய்கையில் கொண்டு சேர்த்ததோ அவ்வாறு தம்மையும் கரை சேர்க்குமாறு முருகனிடம் சாதகன் வேண்டுகிறான்.
லலிதையின் சஹஸ்ர நாமத்தில் “விந்த்யாசல நிவாஸினி” என்ற நாமம் அவள் விந்திய மலையில் அமர்ந்து இருப்பவள் என்றும், இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் சம்சார காட்டை அழிப்பவள் என்று “பவ ஆரண்ய குடாரிக்கா”, “பாப ஆரண்ய தவாநலா” என்ற நாமங்களில் வரும். மேலும் “ம்ரித்யு தாரு குடாரிகா” என்ற நாமத்தில் இறப்பை அழிப்பவள் அல்லது இறப்பிற்கு கோடாரி போன்றவள் என்ற பொருள் கொண்டு வரும்.முருகனை அருணகிரிநாதர் கருணையின் உருவமாக இந்த பாடலில் சொல்கிறார், லலிதையின் நாமங்களில் “கருணா சாகரி, அவ்யாஜ கருணா மூர்த்தி” போன்ற நாமங்களும், அவளுடைய த்யான ஸ்லோகத்தில் “அருணாம் கருணாம்” என்ற வரியின் மூலம் அவளின் கருணையின் வெளிப்பாடு பேச படுகிறது.
இவ்வாறு கந்தர் அனுபூதியும் லலிதா சஹஸ்ரநாமமும் ஒரே இறைவனை குறித்து இரு வேறு உருவங்களில் வழிபடும் ஒத்த கருத்துடைய நூல்களாக விளங்குவதை நாம் ஒவ்வொரு பாடலிலும் காண முடிகிறது.
இந்த பகுதியில் அனுபூதியில் வரும் செய்யுள் 34 மற்றும் 35 ல் சக்தி வழிபாடும் முருகனிடம் எவ்வாறு சரணாகதி செய்ய வேண்டும் அதற்கான வழி என்னவென்றும் அருணகிரிநாதர் கூறியதை விரிவாக பார்க்க இருக்கிறோம்.
