செய்யுள் 34 சிங்கார மடந்தையர் தீநெறி போய்

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ஷண்முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே.
பொருள் :
மயிலை திறம் பட செலுத்தி போர் புரியும் சண்முக பெருமானே, கங்கை நதியின் புதல்வனே, கருணையும் அருளும் உடையவரே! அலங்காரம் செய்து ஆடவரை மயக்கும் தீய நெறி கொண்ட பெண்கள் பால் நான் சென்று மங்கி விடாமல் இருக்க எனக்கு வரம் தருவாயா?

கடந்த பாடலில் சாதகன் விந்திய மலை எவ்வாறு பாரத தேசத்தின் நடுவில் இருக்கிறதோ, அவ்வாறே தாமும் உலக மற்றும் ஆன்மீக வாழ்வு இரண்டிற்கும் நடுவில் நிற்பதை உணர்கிறான், மேலும் சற்றே ஏற்பட்ட இறை அனுபவம் அவனை மேலும் ஆன்மீக வாழ்வின் பால் அதிகம் செல்ல தூண்டுகிறது, ஆனால் இன்னும் முழுதாக செல்ல முடியவில்லை. உலக வாழ்க்கை கர்ம வினைகள் ஒரு புறம் இழுக்க மறுபுறமோ இறைவனின் புன்னகை சாதகனை உருக்குகிறது.
இந்த பாடலில் சாதகன் ஆன்ம உணர்வு பெற்ற பிறகும் தீநெறி செல்லாமல் இருக்க வேண்டும் என்று கேட்கும் வாரத்திற்கு ஓர் அர்த்தம் உண்டு.கர்ம வினைகள் மூன்று விதமாக ஒரு மனிதனை தாக்குகிறது, முதலில் ஸ்தூலமாகவும் , பின்பு சூட்சுமமாக பின்பு காரண நிலையிலும் தாக்குகிறது.அதனால் தான் “மட்டூர் குழல்” என்ற பாடலில் கர்ம வினைகள் சாதகனை உலக வாழ்வில் நிஜத்திலேயே சில செயல்களில் ஈடுபட வைக்கிறது, அதன் பின்னர் “கூர்வேல் விழி” என்ற பாடலில் எண்ணங்களில் கர்ம வினைகள் எஞ்சி இருப்பதை கூறி, அது சூட்சுமமாக தாக்கியதையும் அதன் தொடர்ச்சியாக இந்த பாடலில் காரண சரீரத்தில் இவ்வாறான பதிவுகள் இருப்பின் அதன் பிடியில் இருந்தும் தன்னை மீட்குமாறு முருகனிடம் இறைஞ்சுகிறான் சாதகன்.
இங்கு வரம் என்று கேட்கும் பொழுதே, சாதகன் அந்த வேலையே தம்மால் செய்ய முடியாது என்றும், இறைவனின் கருணையால் மட்டுமே அந்த வேலை நடக்கும் என்றும் புரிந்து கொண்ட படியால் தான் சிங்கார மடந்தையரால் தமக்கு வேறு எந்த தீங்கும் வந்து விடாத படி காக்கும் படி முருகனிடம் இறைஞ்சுகிறான், காரண உடலில் பதிந்திருக்கும் கர்ம வினைகள் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படும், ஸ்தூல சூட்சும வினைகள் கூட சாதகனின் புத்திக்கு தெரிந்து வெளிப்படும் ஆனால் காரண சரீர பதிவுகள் அழிய வேண்டும் என்றால் சாதகனின் முயற்சியால் மட்டும் நடக்காது, மாறாக இறையருள் கொண்டு மட்டும் தான் அது மாறும்.
இங்கு இந்த வரத்தை கேட்க ஒரு காரணம் உண்டு, புராணங்களிலும் இதிகாசங்களிலும் எத்துணையோ இடங்களில் பெரிய பெரிய ஞானிகளும் முனிவர்களும் கூட மாயை வசப்பட்டு, தம் தவத்தை இழந்த கதைகள் ஏராளம் உண்டு.
தேவி மகாத்மியத்தில்
“மஹாமாயா ஹரேஶ்சைஷா தயா ஸம்மோஹ்யதே ஜக³த் I
ஜ்ஞானிநாமபி சேதாம்ʼஸி தே³வீ ப⁴க³வதீ ஹி ஸாII
என்ற வரிகளில், மஹா மாயையானவள் ரிஷி முனிவர்கள் போன்ற ஞானிகளையும் பீடிக்க தான் செய்கிறாள், எல்லோரும் மாயையின் கட்டுப்பாட்டில் விழ வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இறைவனின் மாயா சக்தி ஆனது பாரபட்சம் இன்றி அனைவரையும் பீடிக்க தான் செய்கிறது, மாயை இறைவனின் சக்தியாதலால் அவரின் கருணை இன்றி அச்சக்தியினின்று வெளி வர முடியாது, காரண சரீர பதிவுகள் மாயையின் உதவி கொண்டே வெளிவர முடியும், ஆதலால் தான் மாயை விலக வேண்டி சாதகன் இங்கு இறைவனிடம் வரம் கேட்டு பெறுகிறான்.
உடல் உள்ள வரை ப்ரக்ருதி சம்பந்தம் ஏற்படுகிறது, ப்ரக்ருதி என்ற இயற்கையின் கட்டுக்குள் இயற்கை விதிகளின் துணை கொண்டே வாழ்க்கை நடத்த இயலும், இங்கு சாதகன் இயற்கையை வென்றவன் என்று எந்த இடத்திலும் அருணகிரிநாதர் சொல்லவில்லை, மாறாக அந்த இயற்கை விதிகளால் தமக்கு துன்பம் வர வேண்டாம், அவ்விதிகளால் தம் இறை அனுபவம் பாதிக்கமால் இருத்தல் வேண்டும் என்று தான் சாதகன் கேட்பது போல் பாடல் அமைந்து இருக்கிறது.
பசி,தாகம், உடல் உபாதை, இனப்பெருக்கத்திற்கான காமம் போன்றவை இயற்கையின் விதிகள், இவைகளால் துன்பம் வராமல் தடுக்க இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும், காமத்தையோ, கோபத்தையோ நானே அடக்கி விடுவேன் என்று கூறுவதும் ஒரு வகை ஆணவத்தை தான் கொடுக்கிறது, இந்த பாடலில் கூறிய வாறு தம்மால் இயலவில்லை என்று சரணாகதி செய்யும் சாதகனுக்கு இறைவன் உடனே வரத்தை கொடுத்து விடுகிறார்.
இந்த பாடலில் சிங்காரம் என்ற சொல் வட மொழியின் ‘சிருங்காரம்’ என்ற பதத்தின் தமிழ் வடிவமாகவும், இந்த சிருங்கார ரசமே காமத்தின் வெளிப்பாடாக பல காவியங்களில் கையாளப்படுகிறது, இந்த பாடலில் அதனால் சிங்காரம் என்ற வார்த்தை மகளிர் பால் சென்று அவதி பட்டு கர்ம வினைகளை ஏற்றி கொள்ளாமல் இருக்க வேண்டிய பயத்தை காட்டுகிறது.
ஆனால் இங்கு “சிங்கார மடந்தை தீநெறி போய் மங்காமல்” என்ற வார்த்தைகளை நாம் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும். லலிதா சஹஸ்ரநாமத்தில் “சிருங்கார ரஸ சம்பூர்ணா” என்ற நாமத்தில் அம்பிகை அன்பின் மொத்த சாரமாக இருக்கிறாள் என்று கூறுகிறது, அவ்வாறு இருக்கையில் இங்கு அருளாளர் பொது மகளிரை பற்றி இங்கு பேச வாய்ப்பு சிறிதாக இருக்க வேண்டும். குண்டலினி தியானத்தில் நாபிச்சக்ரத்தை பூர்ணகிரி பீடம் என்று குறிக்கும் வழக்கம் உண்டு, இந்த பூர்ணகிரி பீடத்தில் இருக்கும் குண்டலினி வடிவான அம்பிகையை தான் “சிருங்கார ரஸ சம்பூர்ணா” என்று குறிக்கிறோம். இந்த பாடலில் சிங்கார மடந்தை தீ நெறி என்பது, குண்டலினி அக்னி ஆனது பூர்ண கிரி பீடத்தில் இருப்பதை குறிக்கிறது , நாபி சக்கரத்தில் இந்த குண்டலினி அக்னி ஆனது அதற்கு மேல் போகாமல் மங்கி விட வாய்ப்புகள் அதிகம், நாபி சக்கரத்தில் வரும் குண்டலினி உலக வாழ்விற்கு தேவையான அத்துணை சுகபோகங்களையும் கொடுத்து விடும், அதற்கு மேல் சாதகர்கள் ஆன்மீக வாழ்வில் நடக்காமல் உலக மாயையில் மீண்டும் விழ வாய்ப்புகள் அதிகம், அதனால் தான் அருளாளர் சிங்கார மடந்தை தீ நெறி என்று குண்டலினி அக்னியையும், அந்த அக்னி மங்கி விடாமல் மேன் மேலும் ஆன்மீக வாழ்வில் முன்னேறி மோட்ச நிலை எய்த வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைப்பதே இந்த பாடல் என்று லலிதா சஹஸ்ர நாமத்தின் விளக்கத்தையும் சேர்த்து பார்க்கும் போது தெளிவாக தெரியும்.

Leave a comment