செய்யுள் 35: விதிகாணும் உடம்பை விடா வினையேன்

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாணுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே.
பொருள்:
தேவலோகத்தின் தலைவரே, அழகிய சந்திரனை போன்ற நெற்றி கொண்ட வள்ளி அம்மையை தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விதியின் வசத்தால் பிறவிகள் எடுத்து கொண்டே இருக்கும் என்னை விடுவித்து மோட்ச நிலை தரும் உன் மலர் போன்ற பாதங்களை எப்போது எனக்கு அருள்வாய்

இந்த பாடலில் பிறவி சுழற்சி மற்றும் கர்ம வினைகளின் தொடர்ச்சியை பற்றி கூறப்படுகிறது. அருணகிரிநாதர் இங்கு விதி காணும் உடம்பு என்று சொல்வது, கர்ம வினைகளுக்கு ஏற்ற வாறு ஒரு ஆன்மா இவ்வுலகில் உடலை எடுக்கிறது, ஞானிகள் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களில் ஆன்மா பிறக்கிறது என்று ஏற்கனவே வகுத்து இருக்கிறார்கள். அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழில் “எழு கடல் மணலை அளவிடின் அதிகம் , எனது இடர் பிறவி அவதாரம்” என்று கூறுகிறார், மேலும் “ஒரு தாய் இரு தாய் பல கொடிய தாயுடனே அவமாய் அழியாதே” பல கோடி தாய்களுக்கு தாம் பிறந்து வாழ்ந்திறந்து மீண்டும் பிறந்ததை கூறுகிறார். இவ்வாறாக கர்ம வினைகளுக்கு ஏற்ற வாறு விதியை கொண்டு இந்த ஆன்மா உடல் கொண்டு பிறந்து கொண்டே இருக்கிறது, இவ்வாறான விதி காணும் உடம்பை விட முடியவில்லையே, இந்த நிலை மாறுவதற்கு உன்னுடைய திருவடிகளை என்று தருவாய் என்று கேட்கும் தொனியில் இப்பாடல் அமைந்துள்ளது என்றாலும், இங்கும் சில ரகசியங்களை அருளாளர் மறைத்து தான் கூறியுள்ளார்.
உடல் என்று சொல்லும் இடத்தில், நாம் பௌதீக உடலை மட்டும் எடுத்து கொள்ள முடியாது, இங்கு லலிதையின் சஹஸ்ரநாமத்தில் கூறப்படும் “பஞ்ச கோஷாந்தர ஸ்திதா” என்ற நாமத்தில் வரும் ஐந்து விதமான உடல்களை நாம் பார்க்க வேண்டும், நாம் உடல் என்று பொதுவாக சொல்வது “அன்ன மய கோசம்” எனப்படும் உணவின் சக்தியால் ஆன உடலே, இந்த உடலுக்கு ஆயுள் சில ஆண்டுகள் தாம், ஆனால் “பிராண மய கோசம்” எனப்படும் காற்றினால் உள்ள உடலுக்கு ஆயுள் சில ஆயிரம் ஆண்டுகள், “மனோ மய கோசம்” என்று கூறப்படும் உடல் தான் கர்ம பதிவுகளை உள்ளடக்கிய பல பிறவிகளை ஓர் ஆன்மா எடுக்கும் போது அந்த வினைகளை வெளிப்பட செய்கிறது, “விஞ்ஞான மய கோசம்” என்ற உடல் தான் புத்தியை கொண்டு செயல்படுகிறது, இறுதியாக “ஆனந்த மய கோசம்” என்ற உடல் மட்டுமே இறை அனுபவத்தில் நிலைத்திருக்க ஏதுவாய் இருக்கிறது, இந்த கோசத்தில் இருந்து இறைவனை எப்போதும் உணர்ந்து இருப்பதும், இறைவனோடு கலக்காமல் இருப்பதுமே விசிஷ்டா அத்வைத கொள்கையை நிலை நாட்டுகிறது. இந்த ஐந்து கோசங்களையும் கடந்து இறைவனோடு கலப்பதே த்வைத கொள்கையை காட்டுகிறது.
இந்த பாடலில் உடல் எனக்கூறப்படும் அனைத்து விஷயங்களையும் நீங்கினால் தான் இறைவனின் இயல்போடு கலந்து மோட்ச நிலை எய்த முடியும் என்று சாதகன் அறிகிறான். உடல்களையும் அதன் வினைகளையும் கடப்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல அதற்க்கு இறைவனின் கருணை ஒன்றினால் மட்டுமே முடியும் என்று தெரிந்து தான் இறைவனின் திருவடியை என்று தருவாய் என்று கேட்கும் விதத்தில் அமைந்து இருக்கிறது இந்த பாடல், இங்கு திருவடி தா என்று கேட்பது, சாதகன் இறைவனின் திருவடி தீட்சையை கேட்கிறான், எப்போது இறைவன் சாதகனின் தலை மீது தன் திருவடிகளை வைத்து தீட்சை தருகிறானோ அப்போதே அவன் கால் பட்டு கர்ம வினைகள் அழிகிறது, இதை தான் அருளாளர் கந்தர் அலங்காரத்தில் “உன் கால்பட்டழிந்தது அயன் கையெழுத்தே” என்ற பொருளில் கூறுகிறார்.
குண்டலினி தியானத்தில் சக்தியானவள் ஆஞ்ஞா சக்கரம் கடந்து பின் சஹஸ்ராரம் செல்லும் முன்பு சோம சக்கரம் என்ற இடத்தில் அவள் திருவடி பட்டு அமிர்த தாரை பொழியும், இந்த அமிர்த தாரையே வினைகளை களைகிறது, மாயா சக்தியாக இருந்தவள் இப்போது இறைவனின் அனுகிரக சக்தியாக மாறுகிறாள். லலிதையின் நாமங்களில் இதை தான் “சுதா சாராபி வர்ஷினி” என்று கூறுகிறார்கள், சைவத்தின் கோவிலாம் தில்லையில் நடராஜரின் அனுகிரக சக்தி அவரது “தூக்கிய திருவடியான சக்தியின் இடது திருவடியை” தான் குறிக்கிறது. இங்கும் சக்தியின் அனுகிரக பாவம் நன்றாக வெளிப்படுகிறது, இறைவன் தம் சக்தியின் மூலமாக தான் அனைத்தும் செய்கிறான் என்றும், அவன் திருவடி தீட்சை சக்தியின் அனுகிரகத்தால் நடப்பது என்பதை குறிப்பதற்க்கே அடுத்த வரியில் “மதி வாள் நுதல் வள்ளி” என்று அருளாளர் குறிப்பிடுகிறார், இங்கு வள்ளியை முருகப்பெருமான் துதிப்பதாக கூறப்படுவதில் இருந்து, வள்ளியை துதிக்க முருகனை எளிதாக அடையலாம் என்பதும், திருவடி தீட்சை என்பது சைவத்தின் “சக்திநிபாதம்” என்பதும் மறை பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது.
சக்தி வழிபாடு இவ்வாறாக அனுபூதி முழுக்க பல்வேறு இடங்களில் மறைந்து அல்லது மறைத்து வைக்க பட்டிருக்கிறது.

Leave a comment