செய்யுள் 36 நாதா குமரா நமவென்று அரனார்

நாதா குமரா நமவென்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்
வேதா முதல் விண்னவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசேகரனே.
பொருள்:
பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர்கள் உன் பாதத்தை சிரசில் சூடிக் கொண்டுள்ளனர், அத்தகைய நீ வள்ளியின் பாதத்தை உன் சிரசில் சூடிக்கொண்டு உள்ளாய்!குரு நாதா , குமரா உனக்கு நமஸ்காரம் என்று சிவனார் வணங்கி “எனக்கு உபதேசத்தருளாய்” என்று கேட்க, அவருக்கு நீ உபதேசம் செய்தது என்ன, அதை எனக்கும் உபதேசித்து அருள்வாயாக.

இந்த பாடலில் இரண்டு முக்கியமான தத்துவங்கள் உள்ளன, ஒன்று முருகனின் பஞ்சாக்ஷர மந்திரம் மற்றும் சக்தி வழிபாடான ஸ்ரீ வித்தையின் குரு பாதுகை வழிபாடு. அதை நாம் ஒன்றன் பின் ஒன்றா இனி காணலாம்.அதற்க்கு முன்னர் இந்த பாடலின் சூழ்நிலையை சற்று ஆராய்ந்த பின்னர் சூட்சுமமான விளக்கத்திற்கு செல்லலாம்.
பிரம்மா சிவனைக் காண கயிலாயம் செல்லும் பொழுது, முருகன் அவரை மறித்து ப்ரணவமான ஓங்காரத்திற்கு விளக்கம் கேட்க அதற்கு போதிய விளக்கம் அளிக்க முடியாமல் முருகனால் பிரம்மா சிறை பிடிக்க படுகிறார், சிறை பட்ட காலத்தில் முருகனே ப்ரஹ்மாவின் படைப்பு தொழிலை நடத்துகிறார்.இதை கேள்வியுற்ற சிவபெருமான், பிரமனை விடுவிக்க முருகனிடம் கூற, பிரணவத்தின் விளக்கம் கூற முடியாத பிரமனை விடுவிக்க முடியாது என்று முருகன் மறுக்க, முருகனை பிரணவத்தின் விளக்கத்தை கூறுமாறு சிவபெருமான் பணிக்கிறார். ஆனால் முருகனோ, பிரணவம் என்பது குருமுகமாக கேட்கப்படுவது, ஆதலால் எவ்வாறு குருவிடம் சென்று கேட்க வேண்டுமோ அவ்வாறு கேட்பின் விளக்கம் கூறுவதாக சொல்லவும், சிவ பெருமான் முருகனிடம் குருவிடம் கேட்கும் முறையில் கேட்க, முருகன் கூறிய பிரணவத்தின் விளக்கத்தை கேட்டு மகிழ்கிறார்.
இங்கு சிவ பெருமான் உலகிற்கு எடுத்து காட்டிய தத்துவங்கள் இரண்டு 1. முருகனின் மந்திரமான “குமரா நம” என்ற மந்திரத்தை கொண்டு முருகனை குருவாக சரணடைய, அவரே வந்து உண்மை விளக்கத்தை கொடுப்பார் என்பது, 2.குருவானவர் சிறியவர் பெரியவர் என்ற நோக்க கூடாது என்பதை பொதுவில் காட்டினாலும், குரு என்பது வயது என்ற ஒரு வரைமுறையை தாண்டியது என்பதையும், ஒருவர் வயதைக் கொண்டு குருவின் நிலையயை எடை போடக் கூடாது என்பதையும் எடுத்து காட்டுகிறார்.
குருவானவர் எவ்வாறு வேண்டுமானாலும் வரலாம், சாதகன் விழிப்புடன் இருந்தால் மட்டுமே அவரைக் கண்டு கொள்ள முடியும், மேலும் குருவின் லட்சணம் இது தான் என்று பௌதீகமான ஒரு வரையறைக்குள் அவரைக் கொண்டு அடைக்க முடியாது, இந்த நிகழ்ச்சியிலும் முருகன் இளையவர் பிரமன் மற்றும் சிவபெருமானோ பெரியவர்கள், அதே போல் தட்சிணாமூர்த்தி உருவகத்திலும் சனகாதி முனிவர்கள் வயதானவர்களாக இருப்பார்கள் சிவன் இளையவராக இருப்பார், ஆதலின் குரு என்கிற தத்துவம் என்றும் பாலனாக இருப்பது எப்படி என்பதை வாழ்ந்து காட்டியே விளக்கும். இங்கு சிவ பெருமான் எவ்வாறு குருவை அடைய வேண்டும் என்பதையும் அதோடு தாமும் அருமுருகனும் ஒருவரே என்று காட்டுவதற்காகவே இந்த நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.
பிரணவ உபதேசத்தை இந்த பாடலில் அருணகிரிநாதர் நாடுகிறார், சன்யாச ஆஸ்ரமம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே பிரணவத்தை தனியாக ஜபம் செய்ய விதி வகுக்கப்பட்டுள்ளது, இல்லறத்தில் உள்ளோர் ப்ரணவத்தோடு மற்றைய மந்திரங்களை சேர்த்தே ஜபம் செய்ய சமயங்கள் கூறுகிறது. இந்த ப்ரணவத்தின் பொருளாக வேதங்களின் முடிவில் “ஸுப்ரஹ்மண்ய ஓம்” என்று “சதாசிவ ஓம்” என்றும் மறைபொருளாக தாமே இருப்பதை விளக்கவும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் இந்த ஞானத்தை உணர்வு பூர்வமாக பெறுவது இறைவனின் கருணையால் மட்டுமே நடக்கிறது, யார் ஒருவர் இந்த ஞானம் அடைகிறாரோ அவர் சிவ சாயுஜ்யம் அடைந்து சிவ பரம் பொருளாகவே வாழ்கின்றனர். இந்த ஞானம் அடைய சாதகனின் முயற்சி எதுவும் கை கொடுக்காது என்பதை அறிந்து தான் இறைவனின் கிருபையை அருணகிரிநாதர் இங்கு முன்னிறுத்துகிறார்.
சக்தி வழிபாட்டிலும் பூர்ணதீக்ஷை என்று கூறப்படும் மஹா சோடஷி தீக்ஷையானது சந்யாச தீக்ஷைக்கு சமமாக இருப்பதும், அந்த மகா மந்திரத்தின் உட்பொருளை தமக்கு விளக்க வேண்டுமாறும் சாதகன் கேட்பது போலவும் இப்பாடல் அமைந்து உள்ளது, இங்கு முருகன் வள்ளியின் பாதங்களை சிரசில் சூடுவது இரண்டு நெறிமுறைகளை எடுத்து காட்டுகிறது.
சக்தி வழிபாட்டில், குருவின் பாதங்களை சிரசில் தியானிக்கும் வழக்கமும், அம்பிகையின் பாதங்களை சிரிசில் தியானிக்கும் வழக்கமும் உண்டு, அபிராமி அந்தாதியில் பட்டர் “திருவடி தாமரை சென்னியதே” என்று சொல்லும் பாடலிலும், முந்தைய பாடல்களில் அருளாளர் திருவடி தீக்ஷை வேண்டியதையும் தொடர்புபடுத்தினால் இது தெரிய வரும். சக்தி வழிபாட்டில் பிரணவ மந்திரத்தை சில இடங்களில் பிரயோக படுத்துவதன் மூலமும் மாற்றி அமைப்பது மூலமும் சாதகனின் கர்ம வினைகளை அழித்து இறை நிலை எய்த குரு அவனுக்கு ஏற்றவாறு வடிவமைத்து கொடுப்பார். அதனால் தான் இங்கு அப்படி ஒரு மந்திரத்தையும் அதே போல் விளக்கத்தையும் குரு சாதகனுக்கு அளித்து அவனை இறை நிலையில் எப்போதும் இருத்துவததற்கு தயார் செய்கிறார்.
உதாரணமாக அகத்திய முனிவரை அவருடைய மனைவியான லோபாமுத்திரா, சக்தி வழிபாட்டிற்கு உபதேசம் செய்கிறார். இங்கு குருவின் பாதம் சிரசில் சூடுவது என்று பார்க்கும் பொழுது, முருகன் குறமின் பத சேகரன் என்ற பதம் முருகன் கூட ஒருமுறை சக்தி வழிபாடு சேதத்தைக் குறிக்கிறது, இதற்க்கு ஆதாரமாக துவாதச உபாசகர்கள் வரிசையில் முருகன் அம்பிகையை வழிபட்ட முறை மற்றும் மந்திரங்களை சாக்த ஆகமங்களில் ஆகமங்களில் காணலாம். இங்கு சன்யாச தீட்சை என்று ஒரு தீட்சை முறையோடு இல்லறத்தார்க்கு சன்யாச தீட்சைக்கு சமமான வழிகள் இருப்பதையும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அருளாளர்.
லலிதையின் நாமங்களில் ‘உமா’ என்கிற நாமமே ப்ரணவத்திற்கு ஈடாக இருக்கின்றது, பிரணவத்தின் அகார உகார மகார சப்தங்கள் உமா என்கிற நாமத்தில் உகார , மகார , அகாரமாக மாறி வருகிறது, இதுவே அம்பிகை காத்து, லயமாக்கி பிறவி பிணியை முடித்து வைப்பதை காட்டுகிறது.

Leave a comment