கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே.
பொருள் :
க்ரௌஞ்ச மலையானது பிளந்து அழியுமாறு வேல் விடுத்த இறைவனாகிய முருகனை அடைந்த அடியார் ஒருவர்களுள் ஆகும் நிலை இன்னும் வரவில்லையே, அதனால் மனமே அந்த நிலையை அடைய ஞானம் எனும் வாளால் அகந்தையை அடியோடு வெட்டி விடுவாயாக
இந்த பாடலில் சாதகனை நோக்கி நேராகவே அருணகிரிநாதர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார், இவ்வளவு நாட்கள் மந்திர யோகம், சன்யாச தர்மம் என்று படிப்படியாக வந்த சாதகன், இப்பொழுது இறைவன் ஒருவனே கதி என்று வந்த பிறகு தான் அவனுடைய மிக பெரிய எதிரியாக அவனின் அகந்தை இருப்பது தெரிய வருகிறது இந்த உண்மை தெரியவே சந்யாசம் மேற்கொண்ட பிறகு தான் சாதகனால் அறிய முடிகிறது. குருவிடம் ஆத்ம ஞான உபதேசம், மந்திர உபதேசம், சமாதி அனுபவம் மற்றும் தியானம் அறிய பெற்றும் அகந்தை என்ற தடை இருப்பதை இப்போது தான் தெளிவாக உணர முடிகிறது. இந்த அகந்தையை அழிய வேண்டும் என நினைத்தால் ஞானத்தை கொண்டு நான் இந்த உடல், மனம் மற்றும் புத்தி இல்லை என்று தெளிய வேண்டும்.
இந்த பாடலில் இறையோன் பரிவாரம் என்ற பதம், இறைவனும் தாமும் வேறு வேறு அல்ல என்பதை உணரும் நிலையை குறிக்கிறது, இந்த பாடலின் உட்கருத்து அத்வைத சித்தாந்தம் சார்ந்து நிற்பது இதிலிருந்து தெரியும், இறையோன் பரிவாரம் என்ற சொல்லே இறைவனின் அடியில் எப்போதும் இருக்கும் அடியாரைக் குறிக்கும், இவ்வாறாக இறைவனின் திருவடி நீழலில் எப்போதும் இருக்கும் பேற்றை பெற முடியவில்லையே என்பது அருளாளரின் ஏக்கமாக இருக்கிறது, உதாரணமாக சிவா பெருமானின் அருகில் எப்போதும் இருக்கும் நந்தீஸ்வரை போலவோ, நாயன்மார்களை போலவோ, விஷ்ணுவிடம் எப்போதும் இருக்கும் சேஷனை போலவோ தம்மால் இரண்டற கலந்து இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இங்கு தெரிகிறது, கடலும் கடல் அலை இரண்டும் ஒன்று தான் என்றாலும், அலை தான் “அலை” என்கிற தனித்துவத்தை இழக்கும் போது தான் தாம் கடல் என்பதே தெரிகிறது, அலை என்பதே கடலின் ஒரு பகுதி தான், தன் வேலை முடிந்தவுடன் கடலுக்கும் தனக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை உணருகிறது, அது போல் தான் இங்கு இறையோன் பரிவாரமும், இவ்வாறான நிலயை அடைய தமக்கு பேறு இருக்கிறதா என்று நினைத்து உருகும் நிலையே இந்த பாடல்.
இறையோன் பரிவாரம் என்ற சொல்லை இன்னொரு கோணத்திலும் ஆராயலாம், இறைவனின் அடியார்கள் என்று கூறும் யோகிகள், முனிவர்கள் போன்றவர்களை போல் நிலை கிடைக்கவில்லை என்று ஏக்கம் கொண்டாலும், இவர்களைத் தன்னோடு சேர்த்து கொள்ளும் முடிவினை இறைவன் தான் எடுக்கிறான், அவ்வாறான கருணைக்கு தாம் இன்னும் ஆளாக வில்லையே என்று ஏங்குவதும் இறையோன் பரிவாரம் கிடைக்கவில்லை என்று சொல்வதும் ஒன்று தான்.
ஒரு சாதகன் சந்நியாசம் எடுத்து கொண்ட உடன் தான் இறை அனுபவம் பெற்று விட்டான், இறைவனை அடைந்து விட்டான், கர்மா நீங்கி விட்டது என்ற எண்ணம் கொள்ளலாகாது, தற்காலத்தில் சன்யாச ஆஸ்ரமம் வாழ்வின் தோல்விகளாலும் நிறைய தழுவ படுகிறது, அது சன்யாசம் ஆகாது, சன்யாசம் கொண்ட பின்பும், அகங்காரம் கொண்டு ஆஸ்ரம வாழ்விலும் தாம் பெரிய விரக்தி கொண்ட சந்நியாசி என்ற நினைப்பும், மற்றவர்கள் தம்மை ஒரு பெரிய ஆன்மீக வாதி, தம்மை எல்லோரும் தம் சந்யாச ஆஸ்ரமத்திற்காக வணங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் நபர்கள் சன்யாசம் கொள்வதும் அகங்காரம் அழியாமல் இருப்பதும் ஒன்று தான், இங்கு சன்யாச யோகத்தினால் எந்த பயனும் விளையாமல் போய் விடுகிறது.
குருவின் வாக்கினால் உண்மை விளக்கம் கொண்ட பிறகு, இறைவனின் பரிவாரங்களில் ஒருவனாக தன்னுடைய அறிவை கொண்டு அகங்காரம் எழும் பொழுது அதைக் களைய வேண்டும், இங்கு புரிவாய் என்ற சொல், சாதகனை கர்ம யோகத்தையும் செய்ய சொல்கிறது. கர்ம யோகத்தில் சாதகன் ஈடுபடும் பொழுது அவமானங்களை நிறைய சந்திக்க நேரிடும், அந்த அனுபவங்கள் அவனை அகந்தையை களைய உதவும்.
சக்தி வழிபாட்டிலும், பூர்ண தீக்ஷை என்ற நிலைக்கு பின்பு, சாதகன் உடனே மறு பிறவி அற்ற நிலை அடைந்து விட்டான் என்று கூற முடியாது, பூரண தீக்ஷை அவனை அந்த நிலைக்கு செல்ல உதவி புரியும், ஆனால் தந்திர சாத்திரங்கள் கூறும் படி அவன் மந்திர யோகத்தை புரிந்தால், சில சக்திகள் மற்றும் சித்திகள் கிடைக்க பெறும், இங்கு இந்த சக்திகளை உலக வாழ்க்கைக்கும், தன்னை பெரியோனாக காட்டவும் பயன் படுத்துவது மிகவும் அதிகமாக நடக்கிறது, ஆனால் இவ்வாறு பயன் படுத்துபவர்கள் மோக்ஷ நிலை எய்த மாட்டார்கள் என்று கந்தர்வ தந்திரம் தெளிவாக எடுத்துரைக்கிறது. எவன் ஒருவன் இறைவனை எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இன்றி, அவனை நோக்கி நகர்கிறானோ, அவனருகிலேயே நிண்று அவனுக்கு தேவையானதை அந்த அம்பிகை செய்து வைக்கிறாள் என்றும் தந்திரங்கள் கூறும், சக்தி வழிபாட்டிலும் பூர்ண தீக்ஷை எடுக்கும் வரையிலும் அதன் பின்பும் அகந்தை அழிய பல்வேறு சோதனைகளை அம்பிகை செய்கிறாள், எப்பொழுது சாதகன் தன் ஞானத்தால் தானும் அவளும் வேறு வேறு இல்லை என்று உணர்கிறானோ, அப்பொழுதே அகந்தை அழிந்து சிவ ஞானம் சித்திக்கிறது.
இந்த பாடலில் அருணகிரிநாதர், மேற்கூறியவாறான ஞானம் எய்தி, இறைவனை அடைய வேண்டும் என்று சாதகனுக்கு உணர்த்துகிறார். லலிதையின் நாமங்களில் அனர்க்⁴யகைவல்யபத³தா³யினீ என்ற நாமம் அவளே முடிவான மோக்ஷத்தை தருபவள் என்றும் நிரஹங்காரா என்ற நாமம் அகங்காரம் அற்றவள் என்றும் கூறும். அகங்காரம் களைந்து மோக்ஷ நிலை எய்த வேண்டும் என்ற விதத்தில் நாமங்களின் அமைப்பும் இருக்கும்.
சக்தி வழிபாட்டில் அகங்காரம் களையவே பல்வேறு வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள், குரு பாதுகை தியானம், ஆவரண பூஜையின் பொழுது செய்யும் தத்துவ சோதனம் என்ற தியானம், இறுதியாக அம்பிகையை குண்டலினி வடிவளாக தியானித்து சக்கரங்களில் நிறுத்தும் யோக முறை என்று சாதகனை இறைநிலை அடைய முறைகள் கொடுக்க பட்டிருக்கிறது.
