ஆதாளியை ஒன்றறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே.
பொருள்:
கூதாள மலர்களை மாலையாக அணிந்துள்ள வேடுவ குலத்திற்கு இறைவனே, வேதாள கணங்களால் புகழப் படுபவரே, வேலாயுத பெருமாளே! அறம் என்ற ஒன்றை அறியாத ஒருவனும், மிகவும் தீய இயல்புகளை உடையவனான என்னையும் நீ ஆட்கொண்டு கொண்ட கருணையை சொல்லவும் முடியோமோ
கூதாள மலர்கள் மலை சார்ந்த இடங்களிலே மட்டுமே வளரக் கூடியது, இந்த கூதாள மலர்களுக்கு வாசனை என்பது கொஞ்சமும் இருக்காது,அழகும் இருக்காது. இப்படிப்பட்ட கூதாள மலர்கள் கொண்டு செய்த மாலையை இறைவன் விருப்போடு அணிகிறார், ஏன் என்றால் அவருடைய நாயகியான வள்ளியம்மை வேடுவ குல தோன்றலின் போது இந்த மாலையை அணிந்து இருந்தார். இங்கு வாசாமில்லா மலர்களை அருணகிரிநாதர் குறிப்பதற்கு வேறு இரு காரணங்கள் உண்டு, முதலாவதாக இறைவன் எளிமையானவர் ஆனதால் வாசனை இல்லாத பூக்களையும் விரும்பி அணிகிறார், அவர் மலர்களை கூட வாசனை இல்லை என்று ஒதுக்குவதில்லை, நாம் தான் பூஜைக்கு ஆகாத மலர்கள் என்றும் ஆகும் மலர்கள் என்றும் பிரிக்கிறோம்.
மேலும் இறைவன் தானே சென்று வள்ளியை வேடுவர் குலத்தில் வளரும் பொழுது மணம் புரிகிறார், அவர் பக்தர்களுக்காக இரங்கி வரும் மனம் உடையவர் என்றும் தெரிகிறது. அதே போல் போர்க்களத்தில் அசுரர்களின் உடல்களை உண்டு களிப்பில் ஆடிய வேதாள கணங்கள் இறைவனை புகழ்வதை, எவ்வாறு வேத கோஷத்தில் இறைவன் மகிழ்வாரோ,அதே போல் இந்த பேய் கூச்சலையும் விரும்பி ஏற்று கொள்கிறார்.
இரண்டாவதாக இங்கு வாசனை இல்லாத மலர் என்று அருளாளர் குறிப்பது வாசனை என்று கூற படும் கர்ம வினைகளை, இவ்வாறு கர்ம வினைகளின் படிவுகள் இல்லாத ஆன்மாக்களை இறைவன் விரும்பி ஏற்கிறார், அதனைக் கண்ட வேதாள கணங்கள் இறைவனை புகழ்ந்து தம்மையும் அவ்வாறு ஏற்றுக்கொள்ளுமாறு முறையிடுகின்றன.
இவ்வாறாக இறைவன் தகுதியில்லா பொருட்களையும் மனம் உவந்து ஏற்று கொள்ளும் பாங்கும், ரகசியமாக அருளாளர் கொடுக்கும் சிந்தனைகளும் இந்த பாடலில் வெளி வருகிறது.
லலிதையின் சஹஸ்ரநாமத்திலும் துராச்சார சமணி என்ற நாமம் அவள் தகுதி இல்லாத மற்றும் தவறான நெறிகளையும் மன்னித்து ஏற்று கொள்கிறாள் என்ற பொருளில் வரும்.
இந்த பாடலில் அறத் தீதாளி என்ற பதம்,அறம் என்றால் என்ன என்றே தெரியாதவனும், மிகுந்த தீமை செயல்களை மட்டுமே புரிபவன் என்பதை குறிக்கிறது, இவ்வாறாக இருக்கும் தன்னையும் இறைவன் எவ்வாறு கூதாள மலர்களை ஏற்று அருள் புரிகிறாரோ, அவ்வாறே தம்மையும் கர்ம வினைகளை களைந்து ஏற்றுக்கொள்ளுமாறு முறையிடுவதே இப்பாடல்.
சென்ற பாடல்களில் சாதகன் குருவினை அடைந்து உபதேசம் பெற்று, சன்னியாசம் வாங்கும் அளவிற்கு தேறி வருகிறான், அவன் ஆன்மீக நிலையில் முன்னேற்றம் அடையும் போது தான் தெரிகிறது அவனிடம் எத்துணை தீய இயல்புகள் இருந்தன என்றும்,தாம் இறை நிலையை அடையவோ, குருவின் கருணைக்கோ பாத்திரம் ஆனவன் இல்லை என்றும் புரிகிறது. ஆனால் குருவானவர் அவனை தன் கருணையால் மட்டுமே ஆட்கொண்டு சாதகனை தயார் படுத்தியதை இப்போது தான் அவன் உணருகிறான், இவ்வாறு உணர்ந்த நிலையில் தான் அவனுடைய உண்மை இயல்பை எண்ணி, இவ்வாறாக இருந்த ஒருவனுக்கும் இறைவன் இரங்கி வந்து ஆட்கொள்வதையும் குருவே இறைவனாக அமர்ந்து இந்த செயலைப் புரிவதையும் சாதகன் பின்னாட்களில் உணர்வதற்கு ஏதுவாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
லலிதையின் நாமங்களில் “குரு மண்டல ரூபிணி” என்ற நாமம் இந்த பொருள் கொண்டே வரும்.
