செய்யுள் 39 மாவேழ் சனனம்கெட மாயைவிடா

மாவேழ் சனனம்கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின்கொடி தோள்புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே.
பொருள் :
இந்த பிரபஞ்சத்தின் அரசே, மின்னல் கோடி போன்ற குறை மகளின் தோல்களை அனுப்புடன் அணைபவரே, சிவ சங்கர பெருமானின் குருவே! மாவேழ் (விரிவான பொருள் கீழே) பிறவி கள் மற்றும் அதனோடு ஏற்படும் மாயை மற்றும் மூன்று விதமான ஆசைகளை எப்போது முடியுமோ?

இந்த பாடல் சற்றே கர்ம வினைகளின் வகைகளும் மற்றும் பிறவிகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்றும் விவரிக்கிறது, இவ்வளவு நாட்கள் சாதகனுக்கு சன்யாச தீக்கை, மகா வாக்கிய உபதேசங்கள் மற்றும் தியான பயிற்சி ஆகியவைகள் செய்ய தொடங்கும் முன்பு, அவனுக்கு கர்ம வினைகள் மற்றும் பிறவி சுழற்சி போன்றவைகள் மீது உணர்வு பூர்வமான புரிதல் இருந்திருக்கவில்லை, ஆனால் இப்போது தியானம் கை கூடிய பின்பு இந்த தத்துவங்கள் உணர்வு பூர்வமாக புரிய தொடங்கும் பொழுது தான் அவன் எடுத்த பிறவிகள், எஞ்சிய கர்ம வினைகளால் சன்யாசம் கொள்ளவில்லை என்றாலோ குருவின் பார்வை இல்லை என்றாலோ எடுக்க இருந்த பிறவிகள் என்ன என்று அவனுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.
அவ்வாறாக புரியும் பொழுது, இந்த பிறவிக்கு காரணம் இறைவனின் மாயா சக்தி என்றும், இறைவனை தாமே தம்மில் இருந்து மற்றவர்களிடம் தம் சக்தியைக் கொண்டே மறைத்து கொண்டு நாடகம் ஆடுவதும் புரிகிறது, மேலும் இறைவன் எழுதிய நாடகத்தில் எழும் பிறவிகள் ஏழு வகைப்படும் என்பதும், மூன்று விதமான ஆசைகளை கொண்டு இந்த மாயை செயல் படுத்தும் என்பதும் தெரிகிறது.
மாயையின் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் உண்டு, அண்டத்தில் மகா மாயையாக அவளே இருக்கிறாள் பிண்டத்தில் கர்ம வினைகளை நடத்தும் மாயையாக இறைவனின் மாயா சக்தி செயல் படுகிறாள். இறைவனை அடைய இந்த மாயா சக்தி வழி விட்டால் தான் இறை நிலையை உணர முடியும்.
தேவி மஹாத்மியத்தில் விஷ்ணுவை பீடிக்கும் மாயையானவள் நீங்கிய பிறகே மது கைடப அசுரர் வதம் நிகழ்வதை பார்க்க முடியும், இவ்வாறாக மாயை எல்லா இடங்களில் இருந்தும் செயல்களை இறைவன் சித்தப்படி செய்கிறாள் அல்லது செய்விக்கிறாள்.
இந்த பாடலின் மாவேழ் – பெரிய ஏழு பிரிவுகள் என்று சொல்ல படுவது, பிறவிகள் பொதுவில் எழுவகை படும், இந்த ஏழு பிறவி வகைகளிலும் பல்வேறு உட் பிறவிகள் உண்டு. மாவேழ் பிறவிகளுக்கு மொத்தம் 84 லட்சம் யோனி பேதங்கள் உண்டு அவை முறையே மரஞ்செடி கொடி, நீரினம், ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன், மற்றும் தெய்வம், ஆகிய ஏழு வகைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன, ஜீவன் இந்த மாவேழு பிறவிகளை கடந்து செல்வதற்கு மூவேடனை என்று கூறப்படும் மூன்று ஆசைகள் தடையாக அமையும், அவை மண், பெண் மற்றும் பொன்னாசை என்று தமிழிலும், சமஸ்க்ரிதத்தில் கூறும்போது ஏஷனை என்றும் வழங்கப்படுகிறது, இந்த வார்த்தை தமிழ் படுத்தும் பொழுது ஏடணை என்று மருவுகிறது.
இந்த ஏடனைகள் அல்லது ஏஷணைகள் பின் வருமாறு

1. வித்தேஷணை (அ) அர்தேஷணை:(மண்ணாசை)
அர்தேஷணை என்பது சொத்து, செல்வம், (பணம்), ஆகியவற்றின் மீது ஆசை. பெருத்த செல்வம் தங்களிடமிருந்தால் அனைத்தையும் கட்டி ஆளலாம், வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்கலாம் என்று மக்கள் எண்ணுகிறார்கள். அதனால், மக்கள் செல்வந்தர்களாக ஏங்குகிறார்கள்.
1. புத்ரேஷணை:(பெண்ணாசை)
புத்ரேஷணை என்பது மனைவி மற்றும் குழந்தைகள் (குறிப்பாக மகன்) மீதான ஆசை. இவ்வுலகிலும் சொர்க்கத்திலும் சுகங்களை அனுபவிக்க ஆசை.
1. லோகைஷணை:(பொன்னாசை)
லோகைஷணை என்பது இவ்வுலகத்தில் பெயர் மற்றும் புகழுடன் வாழ்வதில் ஆசை. அவரவர்களது இடத்தில் (ஊர்/ மாநிலம்/ நாடு), அவரவர்களின் துறைகளில் (கலை, விளையாட்டு), மதம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் கூட ஒவ்வொருவரும் மிக முக்கியமான நபராகவும், பரவலாக அறியப்பட்டவராகவும், மதிக்கப்பட்டவராகவும் இருக்க விரும்புகிறார்கள். சுருங்கக் கூறின், ஒருவன் எங்கிருந்தாலும், என்ன செயல் செய்து வந்தாலும், எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவன் முக்கியமானவனாகவும், நன்கு அறியப்பட்டவனாகவுமே இருக்க விரும்புகிறான்.
இந்த மூன்று வித ஆசைகளும் மனிதனுக்கு இந்த உலகத்தில் எல்லா வளங்களையும் தரும் ஆனால் இவையே இறைவனை அடைய பெரும் தடையாக இருக்கும், இந்த ஆசைகளே பிறவிகள் திரும்ப திரும்ப தோன்ற காரணம், அருணகிரிநாதர் இதையே “ஏழு கடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்” என்று திருப்புகழில் தாம் பல லட்சம் யோனி பேதங்களில் பிறந்ததைக் குறிப்பிடுவார். இந்த பிறவிகள் மற்றும் ஆசைகளை கடந்தால் மட்டுமே இறைவனை அடைந்து இந்த துன்பத்திற்கு ஒரு முடிவு காண முடியும், ஆனால் அதற்கு இறைவனின் மாயா சக்தி வழி விட வேண்டும், அந்த கோரிக்கை வைப்பது தான் இந்த பாடல்.
இறைவன் எவ்வாறு வள்ளியை சென்று, அவளுடைய மயக்கத்தை போக்கி ஏற்று கொண்டாரோ அவ்வாறு தம்மையும் மாயை நீக்கி அருளவும், எவ்வாறு குடிமக்களுக்கு அரசன் இடர் களைவானோ அவ்வாறு இந்த பிரபஞ்சத்தின் அரசனான முருகப்பெருமான் சாதகர்களின் குறைகளை நீக்கி மாயா மலம் நீக்கி தம்முடன் சேர்த்து அருள் புரிய வேண்டும் என்று இந்த பாடலில் அருணகிரிநாதர் கேட்கிறார்.
லலிதையின் நாமங்களில் “பவ சக்ர ப்ரவர்த்தினி”, “ஜன்ம ம்ருத்யு ஜரா தப்த ஜன விஸ்ராந்தி தாயினி” என்ற நாமங்கள் அவளே பிறவி சுழற்சியை நடத்துபவள், சுழற்சியில் இருந்து நீக்கம் தருபவள் என்றும் அவளே “மஹா மாயா” “விஷ்ணு மாயா” என்ற நாமங்களில் மாயையாகவும் இருந்து பிரபஞ்சத்தை மாயா சக்தியால் நடத்தி வருபவள் என்றும் பொருள் கொண்டு சஹஸ்ரநாமம் அனுபூதியும் ஒரு பொருள் கொண்டு ஓர் இறைவனை அடையும் வழி காண்பிக்கிறது.

Leave a comment