வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
திணையோடு இதனோடு தெரிந்தவனே
பொருள்:
நீரூற்று, அருவித் துறை , பசுமையான தினைப் புனம், காவல் பரண் ஆகிய இடங்களில் வள்ளியம்மையோடு திரிந்த முருகா, கர்ம வினையை ஓட செய்யும் ஒளி பொருந்திய உன் வேலை என்றும் மறவேன், அதன் காரணத்தால் இந்த பிரபஞ்சம் என்னும் மாயையில் சிக்கி விட மாட்டேன்
கடந்த பாடல்களில் சாதகன் மூவேதனைகளால் அல்லல் உற்றதும், அவனுடைய கர்ம வினையானது சாதகனை சமாதி நிலையில் இருந்து மீண்டும் உலக வாழ்வில் இழுத்து வந்து துயரம் தருவதையும் பார்த்தோம். இப்பொழுது சாதகன் அந்த துயரத்தில் இருந்து மீண்டு இறை நிலையில் தம்மை எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்கிறான் என்று பார்க்கலாம்.
வினையோட விடும் கதிர் வேல் – இங்கு சாதகன் வேலை தியானம் செய்ய தொடங்குகிறான், இங்கு வேல் என்பது ஞான சக்தியின் உருவமாக விளங்குகிறது, ஞானம் என்கிற அக்னியில் கர்ம வினைகள் அழிகின்றன, அதனாலேயே வேலை தியானம் செய்ய தொடங்குகிறான், தியானம் செய்ய ஆரம்பித்த உடனேயே அவனுடைய கர்ம வினைகள் ஓட தொடங்குவது தெரிகிறது, இங்கு வினை தம்மை விட்டு செல்வதை சாதகன் உணர்வதை அருளாளர் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார், இங்கு கதிர்வேல் என்று சொல்லும் பதத்தில் இருந்து, எவ்வாறு சூரியனின் கதிர்கள் வந்தவுடன் இருள் அகலும் அவ்வாறு கதிர்வேல் தியானத்தில் கர்ம வினை அகல்கிறது என்று சொல்வது, இதனால் மேலும் என்ன கிடைக்கும் என்பதை அடுத்த வரியில் சொல்கிறார்.
இங்கு மனை என்று சொல்வது இரண்டு பொருட்களை குறிக்கிறது.ஒன்று – இந்த பிரபஞ்சம் என்னும் மாயை குறிக்கிறது, வேலின் த்யானத்தில் இந்த உலக மாயை நீங்குகிறது அதனால் இனி மேலும் இந்த உலகத்தில் இருக்க மாட்டோம் என்று மயங்கிடவோ என்ற சொல்லால் தெரிகிறது , இரண்டு – மனை என்பது சாதாரணமான வீட்டையும் குறிக்கிறது, எவ்வாறு ஒரு வீடானது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், பல அறைகளைக் கொண்டு இருந்தாலும், அவ்வீடானது எப்பொழுதுமே ஒரு வரையறைக்குள் மட்டுமே இருக்க முடியும், ஆனால் இறை நிலை அல்லது இறைவனை அடைந்தவர்கள் நிலை ஒரு வரையறைக்குள் எப்போதும் கட்டு படாது, அதனாலேயே தான் இங்கு அருளாளர் மனையோடு தியங்கி என்று இரண்டு சொற்களை பயன் படுத்துகிறார். வேலின் தியானம் கர்ம வினைகளை அழிக்கிறது மேலும் உலக மாயை , கட்டுகளில் இருந்தும் விடுவிக்கிறது.
இங்கு முருகனின் தோற்றத்தை சற்று சிந்திக்க வேண்டும், சிவ பரம் பொருள் தம்முடைய சொரூபமாக முருகனை தோற்றுவிக்க, அசுர வதம் செய்ய செல்லும் முன்னர், பராசக்தி தம் சொரூபமான வேலாயுதத்தை தருகிறாள். இந்த வேலாயுத தியானம் என்பது பராசக்தியின் தியானமே. நிர்குண ப்ரஹ்மமான சிவம் எப்பொழுதும் எக்காரியத்திலும் ஈடு படுவதில்லை, அன்னை பராசக்தி மட்டுமே, இதற்க்கு லலிதா சஹஸ்ரநாமத்தில் அந்தர்முக²ஸமாராத்⁴யா என்ற நாமத்தில் மனதால் படுபவள் என்றும் அவ்வாறு பூஜித்தால் அவள் உலக வாழ்வில் இருந்து மக்களே காப்பவள் என்று ஸம்ʼஸாரபங்கநிர்மக்³னஸமுத்³த⁴ரணபண்டி³தா
என்னும் நாமத்தில் விளங்குகிறது.
இந்த பாடலில் சுனையோடு அருவித் துறையோடு என்ற வரிகள் முருகன் வள்ளியைத் தேடி அலைந்து திரிந்த இடங்களை காட்டுகிறது, ஆனால் இதற்கும் சூட்சுமமான விளக்கம் இருப்பதை அன்னையின் நாமங்களைக் கொண்டு தான் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக நிருபப்லவா என்ற நாமம் சோம சக்ரத்தில் இருந்து உட்புறமாக ஊரும் அமிர்த தாரையைக் குறிக்கிறது, இந்த செயலே சுனையோடு என்ற சொல்லல் குறிக்கப்படுகிறது , மேலும் இவ்வாறு ஊரும் அமிர்தம் அஞ்ஞா சக்ரம் தாண்டி கீழே வருவது அருவித் துறையோடு என்ற சொல்லும் பசும் தினை என்ற சொல் அனாஹத சக்கரத்தையும் இதன் என்ற சொல் மணிபூரகத்தையும் குறிக்கிறது.
மணிபூரகம் ஏன் பரண் என்று சொல்லப்படுகிறது என்றால், சக்தி தீக்கை முடிந்த உடன் குண்டலினி சக்தியானது மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் ஆகிய ஆதாரங்களை கடந்து மணிபூரகம் வந்து அமர்ந்து விடுகிறது, அதற்க்கு மேல் கீழே இறங்குவதில்லை. இவ்வாறாக மேல் வந்து அமர்வதால் பரண் என்ற சொல்லால் இங்கு குறிக்க படுகிறது, மேலும் இந்த ஆறு ஆதாரங்களில் வள்ளியைத் தேடி அல்லது வள்ளியோடு திரிந்து என்ற சொல்லில் இருந்து குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரங்களிலும் அந்த ஆதாரத்தில் உள்ள சிவ அம்ஸங்களோடு இருப்பதையும் அதன் பின்பு சஹஸ்ரத்தில் கலப்பதையும் காட்டுகிறது. இதற்கு சான்றாக மூலாதாராம்புஜாரூடா என்ற நாமம் தொடங்கி சுதா சாராபி வர்ஷினி என்ற நாமம் வரை லலிதா சஹஸ்ர நாமத்தில் விளக்கத்தை காணலாம்.
அருணகிரிநாதர் இயற்றிய அனுபூதியில் இவ்வாறாக இன்னும் பல ரகசியங்கள் ஒவ்வொரு பாடலிலும் தேடத் தேட கிடைத்து கொண்டே இருக்கும்.
லலிதையின் நாமங்கள் 475 – விஷுத்தி சக்ர நிலையா முதல் 534 ஆவது நாமமான யாகின்யம்பா ஸ்வரூபிணி வரை இந்த பாடலுக்கான யோக மார்க்க தியானம் விளக்கப்படுகிறது, இந்த தியானமே வேல் தியானமாகவும் கர்ம வினைகளை களைய உதவும் மார்க்கமாகவும் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
