குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே.
பொருள் : தியானத்தின் குறிக்கோளான பர பிரமத்தை தவிர வேறு எந்த ஒரு பொருளையும் நினையாமல் பர பிரமத்தை மட்டுமே நினைந்து பிரம்மத்தை அடைந்த நிலையை தனிவேல் நிகழ்த் திடலும் என்ற பாடலில் கூறுகிறார். இவ்வாறாக தியானத்தின் குறிக்கோளை அடைந்த பின் இந்த உலகோடு இயைந்த எண்ணங்களும் உலகாயதம் ஆன அறிவு மற்றும் அறியாமை ஆகிய அனைத்தும் தம்மை விட்டுப் போனதை பாடலில் கூறுகிறார்.
இந்த பாடலில் அருணகிரிநாதர் தியானத்தின் பலனையும் பலனை யும் அதன் பின்பு நடக்கும் வெளிப்பாடுகளையும் கூறுகிறார். கந்தர் அனுபூதியின் ஆரம்பம் முதலே இறைவனை அடையும் ஒரே குறிக்கோளை தான் ஒவ்வொரு பாடலிலும் வலியுறுத்தி வருகிறார், என்னை இழந்த நலம் என்ற வரிகளும், இறையோன் பரிவாரம் மேவலையே என்ற இடத்திலும், வடிவேல் இறைதாள் நினைவாய் என்றும், வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன் என்றும் இவ்விடங்களிலும் இறைவனை வழி வலியுறுத்தி வந்திருக்கிறார்.
இங்கு குறி என்ற சொல் இறைவனை அடையும் ஒற்றை இலட்சியத்தை கூறுகிறது. குறித்து அறியும் என்ற பதம், இறைவனை நோக்கி எடுத்த முயற்சிகளினால் வெளிப்பட்ட இறை அருளைக் குறிக்கிறது, குறியாது குறித்து என்ற பதம் இறைவனைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாத த்யான நிலையைக் குறிக்கிறது.
நெறி என்ற பதம், இங்கு முக்தி நெறியையே குறிப்பிடும், முக்தி என்ற இலக்கை நோக்கி சாதகன் நகர்வதையே “தனி வேலை” என்றும் அதற்காக வேலாயுதத்தை தியானம் செய்வதையும் குறிப்பதே முதல் இருவரிகள். இவ்வாறாக சாதகன் வேலை தியானம் செய்ய செய்ய, ஒருவாறாக சாதகன் சமாதி நிலையை அடைந்து விடுகிறான். அதனால் தான் இங்கு உலக மயமானதும் , மாயமானதுமான அறிவு அறியாமை என்ற இரண்டுமே இல்லாமல் போய் விடுகிறது, இங்கு த்வைத பாவம் மாறி அத்வைத பாவம் சித்திக்கும் நிலையையே இந்த பாடல் மூலம் அருணகிரிநாதர் கூறுகிறார். விடாமுயற்சியுடனான வைராக்கியத்துடன் இறைவனை நோக்கி புரியும் தியானமே சாதகனை இறை நிலைக்கு உணர்த்தி ஒன்று பெறச் செய்யும் என்பதையும் இந்த பாடல் விளக்குகிறது.
லலிதா சஹஸ்ரநாமத்தில் த்யான தயாத்ரு த்யேய ரூபா , தர்மா அதர்ம விவர்ஜிதா என்ற நாமங்கள் இந்த பாடலில் கூறியது போல தியானத்தை கொடுத்து, சாதகனை மெல்ல உயர்த்தி தர்மம் (நல்லது, புண்ணியம், அறிவு), அதர்மம் (கெட்டது , பாவம், அறியாமை ) என்ற நிலைகளுக்கு எல்லாம் அப்பால் இருக்கும் பரதேவதையான லலிதையிடம் கொண்டு சேர்க்கும்.
