தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.
பொருள் : மாசில்லா மணி மற்றும் ஆடைகளையும் அணிபவளான வள்ளியின் உயிர் நேசனே, உனது அன்பு மற்றும் அருளால் ஆசை என்ற விலங்கு தூளாகிய பின்பு இங்கு எனக்கு வெளிய விவரிக்க முடியாத இறை அனுபூதி பிறந்தது.
சாதகன் கொஞ்சம் கொஞ்சமாக கடந்த பாடல் வரை இறை அருளினால் சமாதி அல்லது இறை நிலையை அடைந்து விடுகிறான், அப்போதே அந்த அனுபவத்தை விவரிக்க இயலாது என்பதை பேசா அனுபூதி என்று கடந்த பாடலில் கூறிய பின்பு, முருகனின் அருளை இப்போது முழுதும் அறிந்தவராய் இந்த பாடல் வெளிப்படுவதை இங்கு காணலாம்.
இவ்வளவு நாட்கள் வள்ளியை தினை புலம் காத்தவள், குறமகள், வேடுவ குலத்தவள் என்று பல்வேறு பாதைகளைக் கூறியவர், இங்கு வள்ளி என்ற பெண்ணை பற்றி குறிப்பே இல்லாமல், தூசா மணி மற்றும் துகில் அணிந்தவள் என்று தான் கூறுகிறார். இங்கு தூசா மணி என்பதை முத்து மற்றும் வெள்ளை ஆடை என்றும் கொள்ளலாம், அதே போல் தூசாமானி என்பதை ஸ்படிக மணிகள் என்றும் கொள்ள முடியும். வள்ளி வேடுவ மங்கையாக இருந்த வரை அவளுக்கு தனியாக ஒரு பெயர் இருந்தது ஆனால் இங்கு முருகனோடு சேர்ந்த பிறகு முருகன் மட்டுமே இருக்கிறான், வள்ளி என்ற பெண் பெயர் கடந்து ஸ்படிகம் போல் எந்த ஒரு பற்றுதலோ கறையோ இல்லாமல் இருக்கிறாள்.இதே போல் தான் சாதகனும் ஸ்படிகம் போல குறை அற்றவனாகி இறையோடு கலந்து விடுகிறான் என்ற தத்துவத்தை விளக்குவதை கூறவே இங்கு தூசா மணி மற்றும் துகிலை உருவகமாக பயன் படுத்துகிறார்.
சைவத்திலும் சிவபெருமானை கூறும் பொழுது, சுத்த ஸ்படிக ஸங்காசம் சுத்த வித்யா ப்ரதாயகம் என்று தான் த்யான ஸ்லோகங்கள் கூறும், இந்த சுத்த ஸ்படிக சங்காசம் தான் இங்கு தூசா மணி என்று மாறி, சிவ ஞானம் அடைந்ததை குறிக்கிறது. இவ்வாறான சிவ ஞானம் அடைந்த பின்பு மனிதனின் ஆசை என்ற விலங்கு தன்னால் தூள் தூளாக போகிறது, ஆசைகள் அற்ற பின்பு இறை நிலையின் அனுபவ உண்மை புரிகிறது, அவ்வாறு புரிந்த பின் அதை ஒருவருக்கு உரைக்க இயலவில்லை, அதை விவரிக்க முடியவில்லை, அந்த நிலையையே பேசா அனுபூதி என்று அருணகிரிநாதர் கூறுகிறார்.
அதே போல் இவ்வளவு பாடல்களில் வள்ளியை குறிப்பிட்டு வந்தவர் இந்த பாடலில் சுத்த சத்துவமான பராசக்தியின் தரிசனத்தை காட்டிய பின்பு, இதற்கு மேல் வரும் பாடல்களில் வள்ளியை பற்றிய எந்த குறிப்பையும் கொடுக்க மாட்டார், இனிமேல் வரும் பாடல்கள் முருகனை பற்றியும் அவன் பெருமைகளை பற்றியும் அவன் அருள் தன்மையைப் பற்றியும் மட்டுமே இருக்கும்.
இங்கு அன்பு அருள் என்ற இரு வார்த்தைகளை பயன் படுத்தும் அருளாளர், முருகன் சாதகர்கள் மீது முதலில் தம் அன்பை செலுத்துகிறான்,அந்த அன்பை சாதகர்கள் இறைவன் மீது திரும்ப வைக்கும் பொழுது, இறைவனின் அருள் தன்மை வெளிப்படுகிறது, இந்த அருள்நிலையே சக்தி, இறைவனின் அன்பிற்கு பாத்திரம் ஆவதற்கும் அவன் அருள் வேண்டும் என்றும் இந்த பாடல் மூலம் தெரிகிறது.
லலிதையின் நாமங்களில் அவளை சமாச்சாரத்தில் வழிபட வேண்டியவள் என்று சொல்லும் பொழுது, குண்டலினி தியானத்தை சொல்லி, அம்பாளுக்கு ஸ்படிக மணிகளால் மனதில் அர்ச்சனை செய்ய சொல்லும், அதே போல் மஹா பூஜ்யா என்ற நாமத்தில் அம்பிகையை பல்வேறு மணிகளால் அர்ச்சனை செய்த உபசாகர்களை கூறும், அவ்வாறான அர்ச்சனையை அம்பிகை விரும்புகிறாள் என்று சொல்வதில் இருந்து அந்த மணிகளின் பிரயோக முறைகளிற்கு பின்னால் இருக்கும் தத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
