செய்யுள் 44 சாடும் தனிவேல் முருகன் சரணம்

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ
வீடும் சுரர்மாமுடி வேதமும் வெம்
காடும் புனமும் கமழும் கழலே.
பொருள் :
பகைவர்களை அழிக்கும் வேலை உடைய முருகனின் பாதங்களை தலையில் சூடும்படி வாய்த்த இறையின் கருணையை எவ்வாறு சொல்வது, முக்தி தரும் தளம், தேவர்களின் மணி முடி, வேதம் மற்றும் அதன் பொருள், காட்டிலும் தினைப்புனத்தில் மணக்கின்ற கழல் தாங்கிய பாதங்களை உடையவரே.

இந்த பாடலில் அருளாளர் கடந்த காலத்தை பற்றி கூறி முருகனின் கருணையை வியக்கிறார், ஏற்கனவே இறை நிலையை உணர்ந்த பின்பு அந்த நிலையை உணர வாய்த்த முருகனின் கருணையையும் , வேல் மீது செய்த தியானத்தை தந்ததையும் அதன் சிறப்பையும் சொல்ல முடியுமோ என்று கூறுவதே முதல் இரு வரிகளாக அமைந்திருக்கிறது.
இறைவனின் அன்பையும், அருளையும் பெற்ற விஷயமே ஆன்ம அனுபூதி அல்லது இறை நிலை அடைந்த பின்பு தான் பூரணமாக சாதகனுக்கு தெரிய வருகிறது. இவ்வாறு தெரிந்த பின் அந்த அன்பை நினைத்து வியக்கிறான். இந்த பாடலில் இறைவனின் வேல் , நாமம் பாதம் என்ற மூன்றும் ஒன்றாக கூறப்படுவதில் இருந்து சமஸ்க்ரிதத்தில் த்ரிபுடி என்று சொல்லப்படும் பொருட்கள் எல்லாம் ஒன்றாக மாறியதை புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக 1. மந்திரம், தெய்வம், குரு 2. தெய்வம் , குரு, சாதகன் 3. அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் வகை ஆகிய மூன்று கூறுகள் கொண்ட கூட்டங்கள் எல்லாம் ஒன்று தான் என்று அறிவதே சமாதி நிலை. அதனால் தான் இந்த பாடலில் முருகனின் வேல், முருகனின் நாமம் , முருகனின் பாதம் ஆகிய மூன்றும் ஒன்றாக குறிப்பிட படுகிறது.
இங்கு சகுன உபாசனையாக முருகனின் உருவமும் , வேலும் நிர்குண உபாசனையாக முருகனின் பாதங்கள் பேச படுகிறது. முருகனின் உருவம், உருவ வழிபாட்டிற்கும், வேல் அரு -உருவ வழிபாட்டிற்கும் , பாதங்கள் அருவ வழிபாட்டையும் குறிக்கிறது. இறை நிலையை அடைய முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்த சாதகன், அரு உருவ வடிவான வேலை தியானம் செய்து, அருவ நிலையான பர ப்ரஹ்மத்தை அடைகிறான். இந்த பயணமே ஆன்மீக வாழ்வாக பரிமளிக்கிறது. இவ்வாறாக இருக்கும் மிக பெரிய தத்துவங்களை ஒரே வரியில் சாதாரணமாக கூறி புரிய வைக்கிறார் அருணகிரிநாதர்.
இந்த இறைவன் எங்கெல்லாம் இருக்கிறான் என்றால் அதற்க்கான இடங்களையும் கூறுகிறார்.
வீடு – இதுவே முக்தி தளம் என்று சொல்லலாம், இறைவன் இருக்கும் இடம் எல்லாம் முக்தி அளிக்கும் தளம், அதனால் தான் அம்பிகையை முக்தி நிலையா என்ற நாமத்தில் சஹஸ்ரநாமம் கூறும் .
சுரர்மாமுடி – தேவர்களின் துன்பம் துடைத்த பின், அவர்களுக்கு எப்போது சரணாகதி அளித்து அவர்களின் துன்பத்தை போக்குவதை குறிக்கும் செயல் இது, அப்போது தேவர்கள் தங்களின் மணி முடியை இறைவன் பாதங்களில் படுமாறு விழுந்து பணிவதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள முடியும். அபிராமி அந்தாதியில் “வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்” என்று கூறுவதில் இருந்து இந்த பொருளை அம்பிகைக்கும் பொருந்துமாறு காண முடியும்
வேதம் – வேதத்தின் பொருளாக இருக்கிறான் இறைவன், வேதம் என்பது மனிதனால் இயற்றப்பட்ட ஒரு நூல் அல்ல, அது இருந்த பொருளை இருந்தவாறு ரிஷிகள் கண்டு மனிதர்களுக்கு கொடுத்தது, அவ்வாறாக கொடுத்த வேதத்தில் இறைவனை அடைய பல்வேறு முறைகள் கூறப்பட்டுள்ளன, இந்த முறைகளை கடைப்பிடித்தால் இறை நிலையை அடைவது திண்ணம். இந்த வேதமாகவும் அதன் பொருளாகவும் அம்பிகை இருக்கிறாள் என்பதை வேத வேத்யா, வேத ஜனனி என்ற நாமங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வெங்காடும் புனமும் – இறைவன் வள்ளியைத் தேடி வெப்பமான காடுகளிலும், தினை புனத்திலும் அலைந்ததை குறிக்கும் பதங்கள் இவை, இங்கு வெப்பமான காடு என்பது இறைவன் கர்ம வினைகள் சூழ்ந்த ஆன்மாவை தேடி சென்று ஆட்கொண்டு, ஆன்மாக்களை தம்மிடம் ஒன்ற செய்யும் செயலைக் குறிக்கிறது. அம்பிகையின் நாமங்களில் சம்சார பங்க நிர்மக்ஞ சமுதரண பண்டிதா என்ற நாமம் இதே பொருள் கொண்டு வரும்
இவ்வாறாக அனுபூதியும் லலிதா சஹஸ்ரநாமமும் ஒரே பொருளை ஒரே இறைவனை நோக்கி செல்வதை நாம் காண முடியும்.

Leave a comment