செய்யுள் 45 கரவாகிய கல்வியுளார் கடைசென்று

கரவாகிய கல்வியுளார் கடைசென்று
இரவாவகை மெப்பொருள் ஈகுவையோ
குரவா குமரா குலிசாயுத குஞ்-
சரவா சிவயோக தயாபரனே.
பொருள்:
மிகுந்த கல்வி அறிவு உள்ளவர்கள், அதனை மற்றவர்களுக்கு பயன் படாதவாறு மறைத்து வைத்து, அந்த ஞானம் அடைய விடாது தடுப்பவர்களின் பின் சென்று இரையும் வகையில் விடாமல், மேலான மெய்ப்பொருளை நீ எனக்கு ஈகுவையோ. குரு மூர்த்தியே , குமரா, குலிசாயுதத்தை உடையவனே, சிவயோகத்தை அருள்பவனே !

அருணகிரிநாதர் முந்தைய பாடல்களில் ஏற்கனவே அனுபூதி அடைந்த நிலையைக் குறித்து விட்டார், அதன் பின்பு ஏன் இன்னும் சில பாடல்கள் இயற்ற பட்டன என்று நாம் ஆராய வேண்டும், இறை நிலையை அடைந்த ஒரு சாதகன், தான் இறைவனை அடைந்ததோடு நிற்பதில்லை, மற்றைய மக்களுக்கும் அந்த நிலை கிடைக்க வேண்டும் என்று சேவை புரிய சென்று விடுகிறான்.
அப்போது பார்க்கும் பொழுது தான், நல்ல இறைவனை பற்றிய ஞானம், அவனை சென்றடைய வேண்டிய மார்க்கம் போன்றவைகளை சிலர் மற்றவர்கள் அறியாமல் ரகசியமாக பாதுகாத்து கொண்டு வருகின்றனர், இதில் வேடிக்கை என்னவென்றால் பாதுகாத்து வருபவர்கள் ஒன்றும் இறை நிலை அடைந்தவர்கள் அல்ல, இறைவனை பற்றிய வேத, சாஸ்திர, வேதாந்த ஞானம் உள்ளவர்கள் என்றாலும், அகங்காரம் மட்டுமே மேலோங்கி இறைவனை பற்றி பேசியும், எழுதியும், கவிகள் பல புனைந்தும் இருந்தாலும் இறை நிலையை அடைய அவர்களை மாயையானவள் அகங்காரத்தின் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறாள்.
முருகனின் சக்திகளான வள்ளியம்மை மற்றும் தேவசேனையை பொறுத்த மட்டில், வள்ளியம்மை இக சௌபாக்கியதையும், தேவ சேனை பர சௌபாக்கியதியும் அளிக்கிறார், பரம பதம் செல்ல வேண்டும் என்றாலும் இவ்வுலக வாழ்வில் வள்ளியம்மையின் கிருபையினால் தவம் முயன்று தான் செல்ல வேண்டும், இந்த வள்ளியமையே தேவசேனையாக பரம பதம் அளிக்கிறார், ஒரு ஜீவான்மா குறமகளாக பிறந்து முருகனின் சக்தியை உயர்வதை காட்டுவதும், அவள் தேவர் குல மகளாம் தேவயானிக்கு இணையாக மாறுவதையும் சொல்வது, சாதகன் இறை நிலையை அடைவதைக் குறிக்கிறது.
இந்த பாடலை பொறுத்த வரை இங்கு முதன் முதலில் தேவ சேனையின் குறிப்பு வருகிறது, வேறு எங்கும் அனுபூதியில் இந்த குறிப்பு கிடையாது, வள்ளியம்மையை பனிரெண்டு இடங்களில் சுட்டும் அருளாளர், அனுபூதி பிறந்த பின்னே தான் தேவசேனையை கூறுகிறார், தூசா மணியும் துகிலும் என்ற பாடலில் வள்ளியம்மை சுத்த சத்துவ ரூபமாக காட்சி தந்த பின், வள்ளியின் உருவ குறிப்போ அல்லது குலம் , தொழில் முதலிய பொருள் படுமாறு பாடல் இயற்ற படவே இல்லை, ஆனால் இங்கு அந்த சுத்த சத்துவ நிலை தாண்டி தேவ சேனையாக வள்ளியம்மை தெரிவதை உணர்த்தவும் பராசக்தி ஒன்று தான் என்றும் முருகனை பரப்ரஹ்ம வடிவினானாக்கி இரு சக்தியும் சேர்ந்து ஒரு சக்தியாக விளங்குவதை காட்டவுமே இந்த பாடலில் தேவ சேனையின் குறிப்பு வருகிறது.
சூசகமாக பர ஞானம் வேண்டின் பராசக்தியை பின்பற்றவும், அவ்வாறாக பின் பற்றினால் முருகன் சிவயோகத்தை தருவான் என்றும் இந்த பாடலின் பொருள் அமையுமாறு, இறை நிலை அடைந்த சாதகன் மற்றவர்களுக்கு உரைக்கும் படியாக அமைத்திருக்கிறார் அருணகிரிநாதர்.
முருகன் பிணிமுகம் என்ற யானையும், குலிசாயுதம் கொண்டதையும் குறிக்கும் அருணகிரியார், இவ்வாறாக இருக்கும் முருகனே குரு மூர்த்தி என்று பொருள் கொள்ளுமாறு குரவா என்ற பதத்தை செய்கிறார். எவ்வாறு தந்திர சாத்திரங்களில் சதாசிவன் குருவாக அமர்ந்து சக்தி உபாஸனைக்கு வழி காட்டுகிறாரோ, இங்கு முருகன் குலிசாயுதனாக அமர்ந்து பராசக்தி வடிவான தேவசேனை மூலமாக தம்மை – பர ப்ரஹ்மத்தை அடைய முடியும் என்று காட்டுகிறார்.
இந்த பாடலில் சக்தி வழிபாடு மிகவும் தெளிவாக தெரியுமாறு அமைந்துள்ளது.

Leave a comment