எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.
பொருள் :
என் தாயும் தந்தையாக இருப்பவன் நீ, என் கவலைகளை தீர்த்து என்னை நீ ஆட்கொள்ள வேண்டும், கந்த பெருமானே, கதிர் வேலை உடையவனே, உமையம்மையின் மகனே, குமரா வேத நாயகனே !
இந்த பாடலில் பிரார்த்தனை மிகவும் எளிதாக நேரடியாக வைக்கப்படுகிறது. இறை நிலை அடைந்த ஒருவன் இறைவனை எவ்வாறு தியானிக்க வேண்டும் என்று கூறுவதாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. எந்த சாதனை செய்ய முயன்றாலும் அந்த சாதனை முடியாமல் போவதற்கு பல தடங்கல்கள் வரத்தான் செய்யும், மனக்கவலைகள் கர்மாவால் நம்மை விடாது துரத்திக் கொண்டு தான் இருக்கிறது, இவ்வாறான கவலைகள் தீரவும் ஆன்மீக வாழ்வு உயரவும், இறைவனை அம்மை அப்பனாக ஆராதிப்பது மூலம் கவலைகள் தீர்ந்து, முன்னேறுவதற்கு வழி வகுக்கும்.
இத்துணை பாடல்களில் இறைவனை அம்மை அப்பனாக பார்க்காத அருணகிரிநாதர், இறை நிலை அடைந்த பிறகு கூறும் இப்பாடலில் இறைவனை தந்தை தாயாக வணங்குவோர்க்கு அவனை அடைவது எளிதாம் என்று காட்டுகிறார்.
பராசக்தியை சொல்லும் போது மணிவாசகர் அவளே இறைவனின் துணையாக, மகளாக, தாயாகவும் இருக்கிறாள் என்று சொல்வார். அதே போல் பட்டர் அபிராமி அந்தாதியில் அம்பிகையை கரைகண்டனுக்கு மூத்தவள், முகுந்தற்கு இளையவள் என்று கூறி போற்றுவார். இங்கும் முருகனை பராசக்தியின் மைந்தன் என்று கூறுவதும், சென்ற பாடலில் தேவயானையே பராசக்தி முருகன் பர ப்ரஹ்மம் என்று சொல்வதில் இருந்தும், அருளாளர்கள் அனைவரும் குறிப்பிடும் தெய்வம் ஒன்றே என்று பறை சாற்றும்.
சாதகனை பொறுத்த மட்டில் அவன் வணங்கும் இறையே அவனின் தந்தையாகவும் தாயாகவும் இருக்கிறது, மணிவாசகர் “யாவர்க்கும் தந்தை தாய்” என்றும் தேவராம் “அத்தா உனக்கு ஆளாய்”, “ஆயா உனக்கு ஆளாய்”, “அன்னே உனக்கு ஆளாய்” என்றும் போற்றுவதில் இருந்தும் இந்த பாவத்தின் முக்கியத்துவம் புரிகிறது.
லலிதா சஹஸ்ரநாமம் “ஸ்ரீ மாதா” என்று தொடங்கி “லலிதாம்பா” என்று முடியும், இங்கும் அம்பா என்ற பதத்திற்கு அன்னை என்ற ஒரு பொருள் வரும், இறைவியை அன்னையாக பாவித்து தான் வாக்தேவிகள் சஹஸ்ரநாமம் சொல்கிறார்கள், இப்படி கூறும் ஸ்தோத்திரமானது சாதகனை இறைவனிடம் வெகு சீக்கிரம் அழைத்து செல்லும். அதனால் தான் இங்கு அருளாளர் இறை நிலை அடைந்த பின், அந்த நிலையை சீக்கிரம் அடையும் வழியாக அதிகம் அவதி படாமல் அன்னையாக தந்தையாக பாவித்து இறைவனை அடைந்து விடுங்கள் என்று இந்த பாடலில் கூறுகிறார்.
