செய்யுள் 49 தன்னந்தனி   நின்றது   தான்   அறிய

தன்னந்தனி   நின்றது   தான்   அறிய

இன்னம்   ஒருவர்க்கு   இசைவிப்பதுவோ

மின்னும்   கதிர்வேல்   விகிர்தா   நினைவார்

கின்னம்   களையும்   க்ருபைசூழ்   சுடரே.

பொருள் :

மின்னும் மின்னல் போன்ற வேலை உடைய முருகா, உன்னை நினைப்பார் இன்னல் எல்லாம் போக செய்யும் கருணை கொண்ட ஜோதி ரூபமானவரே,

தன்னம் தனியா நான்(தான்) மட்டும் நின்ற நிலையை இன்னொருவருக்கு எவ்வாறு இசைவிப்பது !

இந்த பாடல் மீண்டும் த்யான நிலையில் இறைவனை அடைந்த அந்த தருணத்தை குறிக்கிறது, பேசா அனுபூதி பெற்ற பின்பும் ஏன் அருணகிரிநாதர் இவ்வளவு பாடல்களை எழுதியுள்ளார் என்ற கேள்வி வரலாம். இங்கு சமாதி நிலை என்பது சாதகன் வாழ்நாள் வரையிலும் தியானம் செய்து அந்த நிலையிலேயே இருப்பதை வலியுறுத்துகிறது, இறை நிலை அடைதல் என்பது ஒரு முடிவல்ல, அது நீண்ட நெடிய சுகமான பயணம். இவ்வாறு எப்பொழுதும் இறை தியானத்திலேயே இருக்க வேண்டும் என்பதும், ஜீவன் முக்த நிலை என்பது , அதன் பின் தத்துவங்கள் கடந்த வாழ்வு கிடையாது, மோக்ஷம் உறுதி என்றாலும், இறைவனின் விதிக்கு இணங்க இந்த வாழ்வில் இருந்து கர்ம கணக்குகளை முடிக்க வேண்டும், எனினும் அவை ஆன்மாவில் சேராதவாறு இந்த தியானம் தொடர்ந்து சாதகனை இறை நிலையிலேயே வைக்கிறது, அதனால் தான் வேலாயுத தியானம் மீண்டும் இந்த பாடலில் வலியுறுத்த படுகிறது. இந்த தான் தனியாக நிற்கும் குண்டலினி தியானத்தில் லலிதா சஹஸ்ரநாமம் விவரிக்கிறது. 

இந்த பாடலில் உள்ள விகிர்தன் என்ற பதம் மாறுபட்டு உடையவன் என்ற பொருள் கொண்டு வரும், வேலாயுதம் கொண்டதனால் முருகன் தனியாக தெரிகிறான், இங்கு வேலாயுதம் பராசக்தியாக இருப்பதும், முருகன் ப்ரஹ்ம நிலையில் இருப்பதையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறது, எவ்வாறு வேலால் முருகன் வேறுபட்டு தெரிகிறானோ, அவ்வாறு பராசக்தி அருகில் இருப்பதனால் தான் சிவ பரம்பொருளை பார்க்க முடிகிறது, அதாவது பராசக்தியின் கருணையால் சிவனை காண முடிகிறது, அதனால் அவளே சிவ ஞானம் அருள்கிறாள் என்று சஹஸ்ரநாமம் கூறும், சைவமும் சக்தியை சிவனின் அருள் என்று கூறும், சிவனின் அருள் சக்தியைக் கொண்டே பெற முடியும், தனியாக ப்ரஹ்மத்தை அறிய முடியாது. அதனால் இந்த பாடலில் உள்ள விகிர்தன் என்ற பதம் மிகவும் முக்கியமான ஒரு பொருள் கொண்டு சக்தி வழிபாட்டை நிலை நிறுத்தும் அனுபூதியாக விளங்குகிறது.

Leave a comment