செய்யுள் 50 மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக்

மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக்

கதிகெட்டு   அவமே     கெடவோ     கடவேன்

நதிபுத்திர     ஞான     சுகாதிப     அத்

திதிபுத்திரர்     வீறடு     சேவகனே.

பொருள் :

கங்கா நதியின் புதல்வனே, ஞான சுகம் அருளும் தலைவனே, திதி என்பவள் பெற்ற அசுரர்களின் அழித்து தேவர்களை காத்து சேவை புரிந்தவரே, நான் மதியிழந்து உணர்ச்சி மேலிட மாயையில் அகப்பட்டு நற்கதி அடையாமல் கெடுவேனோ !

இந்த பாடலும் அனுபூதியின் கடைசி பாடலும் தொடர்பு கொண்டது, இரு பாடல்களை சேர்த்து பார்த்தால் தான் உண்மை பொருள் புரியும் இல்லை என்றால் ஏதோ அருணகிரிநாதர் பல்வேறு மன நிலையில் பாடியதாக அனுபூதியை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். இந்த பாடல் அருளாளர் இறை நிலை எய்தவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று  கூறி, அந்த நிலை மாறியதற்கான காரணத்தை அடுத்த பாடலில் கூறுகிறார்.

ஒரு சாதகன் இறை நிலையை அடைவதற்கு காரணம் அவனின் குரு ஒருவரே, அந்த இறைவனே குருவாக வந்ததை அடுத்த பாடல் குறிப்பிடும், ஒருவேளை குருவை அடையாமல் இருந்திருந்தால் எவ்வாறு இந்த உலக வாழ்வில் ஒரு சாதகன் அலைந்து திரிந்து மீண்டும் பிறவி சுழற்சியில் மாட்டியிருப்பான் என்று கூறவே இந்த பாடலை அமைத்து இருக்கிறார், மேலும் இந்த நிலையில் இருந்து குருவும் இறைவனும் எவ்வாறு அவனை காப்பாற்றினார்கள் என்று கூறுவதும் நன்றி உரைப்பதுமாக இந்த பாடல் அமைகிறது.

Leave a comment