செய்யுள் 51உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய்

உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய்

மருவாய்   மலராய்   மணியாய்   ஒளியாய்க்

கருவாய்   உயிராய்   கதியாய்   விதியாய்க்

குருவாய்   வருவாய்   அருள்வாய்   குகனே.

பொருள் :

உருவாகவும் , உரு இல்லாமலும் , உள்ள பொருளாகவும், இல்லாத பொருளாகவும், நறுமணமாக , மலராக, மணியாக அதன் ஒளியாக, உயிர் உள்ள கருவாகவும் , அந்த கரு தாங்கும் உயிராகவும், நல்ல கதி கொடுக்கும் விதியாகவும், குருவாய் வந்து அருள் புரிவாய் குகனே.

இந்த பாடல் குருவின் தத்துவத்தை முன்னிறுத்தி , இறைவனே குருவின் ரூபமொடு வந்து, இந்த வாழ்வையும் அவனை அடையும் விதியையும் அவனே அமைத்து கொடுத்ததை காட்டுகிறது. முருகனின் முக்கியமான வடிவங்கள் பதினாறு வகைப்படும், அந்த பதினாறு உருவ வேறுபாடுகளை தான் பல கோவில்களில் நாம் தரிசிக்க முடிகின்றது, இறைவன் வேண்டிய நேரத்தில் வேண்டிய உரு கொண்டு வருவதும், அருவாய் இருந்தும் சாதகனை வழி நடத்துவதும்(இறைவன் அறுவை நிலையிலும் சாதகனை வழி நடத்துவதை ஆன்மீக வாழ்வில் பக்குவ பட்டவர்களால் உணர முடியும்) அவனே மலராகவும் அதன் குணமாகவும் , மணியின் ஒளியாகவும் இருப்பதை கூறுவது எல்லா இடங்களிலும் இறைவனை காண்பதை குறிக்கிறது.

மேலும் அந்த இறைவனே இந்த உடல் தாங்கி அந்த ஆன்மாவாகி அதற்கு விதி ஏற்பாடு செய்து நல்ல கதிக்கு அழைத்து செல்லும் அத்தனை செயல்களும் செய்வதை கருவாய் உயிராய் கதியாய் விதியாய் என்ற வரி சொல்லும். 

இங்கு குருவாய் வருவாய் என்ற பதத்திற்கு பொருள் தெரிய வேண்டும் என்றால், முருகன் ஏற்கனவே குருவாக இருந்து என்ன செயல் செய்தான்  என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கு உதவுவது “கள்ளக் குவால் பை” எனும் திருப்புகழ் , இந்த திருப்புகழில் சிவனார் என்ன உபதேசம் கேட்டார் அதற்க்கு முருகன் என்ன உபதேசம் நல்கினார் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.  கீழ்கண்ட வரி அதற்கு சான்று 

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

     வல்லைக்கு ளேற்று …… மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு … வள்ளி அனுஷ்டித்த நன்னெறி*

என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகி சிவபெருமானுக்கு

நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே … கண்ணிமைக்கும்

ஒரு க்ஷணப்** பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே,

இங்கு வள்ளி  சன்மார்க்கம் என்பதே சக்தி வழிபாடு தான், அதுவே ஸ்ரீ வித்தை , தசமகா வித்தை, லட்சுமி தந்திரம் கூறும் வைஷ்ணவ சக்தி வழிபாடு (இதற்கு  சான்று வள்ளியை வனச குற மகள் என்று கூறும் திருப்புகழ்).

முருகனிடம் இந்த வள்ளியை பற்றிய சன்மார்க்கம் எனப்படும் சக்தி வழிபாட்டை தான் சிவனார் கேட்க அதனை இமைப்பொழுதில் அவருக்கு உபதேசித்தான் முருகன் என்று அருணகிரிநாதர் கூறுகிறார். 

அதனால் குருவாக வந்து சக்தி வழிபாட்டை உணர்த்திய தம் குருவே இறைவனாகவும் உள்ளதை உணர்வதும், குரு இல்லாதவர்களுக்கு இறைவன் இவ்வழிபாட்டை உணர்த்துவதை வேண்டுதலாக வைப்பதாகவும் அமைந்துள்ளது தான் இந்த பாடல். 

மேலும் முருகனுக்கு 16 உருவ வேறுபாடுகள் என்று குமார தந்திரம் கூறும், சக்தி வழிபாட்டில் 16 அட்சரங்கள் கொண்ட சோடஷி மந்திரம் தான் மிகவும் மேன்மையானது, அதனால் இந்த 16 அட்சரங்கள் கொண்ட உருவாக, குருவாக வருவாய் குகனே என்று முடிக்கிறார் அருணகிரிநாதர். இங்கு குகன் என்ற பதம் ரகசியம் என்ற பொருளும்  கொள்ள வேண்டும், சக்தி வழிபாடு ரகசியமாக ஏகாந்தமாக செய்ய வேண்டும் அதனால் தான் குகன் என்ற பதத்தில் முடிக்கிறார் அருளாளர்.

இவ்வாறு கந்தர் அனுபூதியில் காணும் இடம் எல்லாம் சக்தியின் அருளாற்றலை பதிவு செய்கிறார் அருணகிரிநாதர். ஆதலால் கந்தர் அனுபூதி ஒரு சாக்த நூலாக இருப்பது திண்ணம்.

Leave a comment